மலையாளத்தில் அறிமுகமாகும் சேரன் : வசூல் வேட்டையாடுமா ’நரி வேட்டை’?

Published On:

| By uthay Padagalingam

is cheran malayalam entry narivetta delivers big hit?

இயக்குனர் சேரன் ஒரு நாயகனாக, குணசித்திர நடிகராகத் தமது இருப்பைப் பல தமிழ் திரைப்படங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். கோபிகா, மல்லிகா, நவ்யா நாயர், பத்மப்ரியா எனப் பல மலையாள நடிகைகளைத் தமிழில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவரது பல படங்கள் கேரள ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றன. அவர் இயக்கிய படங்கள் அனைத்துமே சமூகம் சார்ந்த விஷயமொன்றை மையப்படுத்தியதாகவே இருந்திருக்கின்றன. ‘தமிழ் குடிமகன்’ உட்பட அவர் நடித்த பல படங்கள் அந்த வகையறா தான். மக்களின் தினசரி வாழ்வு தொடர்பான பிரச்சனைகளைப் பேசியவைதான். is cheran malayalam entry narivetta delivers big hit?

அதனாலோ என்னவோ, சேரன் மலையாளத்தில் அறிமுகமாகிற ‘நரிவேட்டை’ படமும் கிட்டத்தட்ட அப்படியொரு பிரச்சனையைப் பேசுவதாகவே அமைந்திருக்கிறது. பழங்குடியின மக்களை மலைக்கிராமங்களில் இருந்து அப்புறப்படுத்த மேற்கொள்ளப்படுகிற காவல் துறையினரின் நடவடிக்கைகளைக் காட்டுவதாக அமைந்திருந்தது இப்படத்தின் ட்ரெய்லர். வரும் 23ஆம் தேதியன்று இப்படம் தியேட்டர்களில் வெளியாகிறது.

டொவினோ தாமஸ் நாயகனாக நடிக்கிற இப்படத்தை இயக்கியிருப்பவர் அனுராஜ் மனோகர். இவர் ஷேன் நிகம், ஆன் ஷீத்தல் ஜோடியைக் கொண்டு ‘இஷ்க்’ படம் தந்தவர். நள்ளிரவில் தனியாக இருக்கிற ஒரு காதல் ஜோடியிடம் ஒரு ஆண் அத்துமீறிப் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதையும், அதனால் மனம் உடைகிற அந்த ஜோடி எதிர்கொள்கிற பின்விளைவுகளையும் காட்டியது அப்படம்.

அதில் அறிமுகமான அனுராஜ் மனோகர், ஆறாண்டுகளுக்குப் பிறகு இயக்குகிற படம் ‘நரிவேட்டா’. தமிழில் இது ‘நரி வேட்டை’ என்ற பெயரில் வெளியாகிறது.

ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்திருக்கிற இப்படத்தில் சூரஜ் வெஞ்சாரமூடு, ஆர்யா சலீம், காயத்ரி சங்கர், பிரியம்வதா கிருஷ்ணன், ரினி உதயகுமார் உட்படப் பலர் நடித்துள்ளனர். பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அபின் ஜோசப், இதன் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார்.

‘நரி வேட்டை’ உண்மையாக நிகழ்ந்த சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட கதை என்றே சொல்லப்படுகிறது. அதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியிருக்கிறது. தணிக்கை மேஜையில் எப்படிப்பட்ட பிரச்சனைகளை இப்படம் எதிர்கொண்டது அல்லது சமாளித்தது என்பது இனி வரும் வாரங்களில் தெரிய வரலாம்.

இந்த படத்தில் கேசவதாஸ் எனும் பாத்திரத்தில் சேரன் நடிப்பதாகக் கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. ட்ரெய்லரில் அவர் மலையாளத்தில் பேசுகிற ஷாட்கள் உள்ளன. அதனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கேரளாவில் பணிக்காகச் சென்று பின்னர் மலையாளம் கற்றுக்கொண்டு பேசுவதாக, அவர் பின்னணியை நாம் கற்பனை செய்ய முடிகிறது.

அதனைக் கடந்து, முக்கியமானதொரு சமூகப் பிரச்சனையை அரசியல்ரீதியாக விமர்சிக்கிற திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியாகச் சேரன் நடிக்கிறார் என்ற வகையிலும் ‘நரிவேட்டை’ முக்கியத்துவம் பெறுகிறது. அதில் அவரது பாத்திரம் நேர்மறையாக அல்லது எதிர்மறையாக இருக்கிறது என்பதைத் தாண்டி, ’எதற்காக இந்தப் படத்தில் இவர் இடம்பெற்றார்’ என்ற கேள்விக்கான பதிலும் நமக்குக் கிடைக்குமென்று நம்பலாம்.

உணர்ச்சிவயப்பட்ட மனநிலையைப் பிரதிபலிக்கும் காட்சிகளில் சேரன் ‘அப்ளாஸ்’ அள்ளுவது நமக்கு தெரிந்த கதை. ’கேரள ரசிகர்களும் அப்படியொரு அனுபவத்தைப் பெறட்டுமே’ என்று இயக்குனர் நினைத்திருக்கலாம்.

எது எப்படியாயினும், ‘சேரனுக்காகப் படம் பார்க்க வேண்டும்’ என்று இன்றைக்கும் காத்திருக்கிற பல ரசிகர்களுக்கு ‘நரிவேட்டை’ விருந்து தந்தால் சரி..!

Narivetta Official Trailer | Tovino Thomas | Suraj Venjaramoodu | Anuraj Manohar
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share