அரண்மனை – 4 பிளாக்பஸ்டரா? வசூல் செய்தது எவ்வளவு?

Published On:

| By Kavi

கடந்த 14 நாட்களில் அரண்மனை – 4 திரைப்படம் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த நான்கு மாதங்களில் 78 நேரடி தமிழ்படங்கள் திரையரங்குகள் மூலம் வெளியானது.  இவற்றில் 10% படங்கள் கூட பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றி பெறவில்லை.

திரையரங்க வசூலில் படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் 20% படங்கள் தொலைக்காட்சி உரிமை, ஓடிடி வெளியீட்டு உரிமை விற்பனை மூலம் தயாரிப்பாளர் லாபமடைய காரணமாகியுள்ளது.

நட்சத்திர நடிகர்கள் நடிப்பில் வெளியான திரைப்படங்கள், படைப்பு ரீதியாக பாராட்டுக்குள்ளான படங்கள் இந்த 20% த்தில் இடம்பிடித்துள்ளன.

மற்ற அனைத்து படங்களும் கெளரவத்திற்கு கவரிங் நகை அணிவதை போல திரையரங்குகளில் படம் வெளியாவதே அந்த படத்திற்கான வெற்றியாக கருதி மகிழ்ச்சியுற்ற நடிகர்களும், இயக்கியவர்களும், தயாரிப்பாளர்களும் உண்டு.

இந்த சூழலில் திரையரங்குகள் தரப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் அரண்மனை – 4, மே 3 அன்று வெளியானது.

தமிழில் நகைச்சுவை பேய் படங்களின் வரிசையைத் துவக்கி வைத்தது ராகவா லாரன்ஸ் நடிப்பில் 2011 வெளியான காஞ்சனா. அந்தப் படத்தின் வெற்றி தொடர்ந்து 3 பாகங்கள் எடுக்க வைத்தது.

அதே பாணியில் 2014-ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றி தொடர்ந்து 2016-ல் ‘அரண்மனை 2, 2021-ல் அரண்மனை 3 படங்கள் வெளியாகின. இந்த வரிசையில் ‘அரண்மனை 4’ படத்தை இயக்குனர் சுந்தர்.சி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா, கே.எஸ்.ரவிகுமார், கோவை சரளா, வி.டி.வி. கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

அரண்மனை – 4 ரெட் ஜெயண்ட் வெளியீடு என்பதால் அதிகமான திரைகளில், அதிக காட்சிகளில் திரையிடப்பட்டது. தொடக்க நாளில் இருந்தே சென்னை, சென்னை புறநகர் திரையரங்குகளை தவிர்த்து மற்ற திரையரங்குகளில் முதல்வாரம் 60% டிக்கெட்டுகள் விற்பனையானது.

சென்னை மற்றும் புறநகர் திரையரங்குகளில் வார இறுதி நாட்களில் 100% டிக்கெட்டுகளும் மற்ற நாட்களில் 60% டிக்கெட்டுகளும் விற்பனையானதால் வசூல் குவிந்தது.

இந்தாண்டு வெளியான திரைப்படங்களில் அதிக எண்ணிக்கையிலான குடும்ப பார்வையாளர்கள் திரையரங்குக்கு வந்து பார்த்த படம் அரண்மனை – 4 மட்டுமே.

அதற்கு காரணம் கோடை விடுமுறை, ஆபாசம் இல்லாத பேய் காமெடி படம், என்பது பிரதான காரணம் என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்.

பிளாக்பஸ்டர், பிரம்மாண்டமான வெற்றி என சமூக ஊடகங்களில், இணைய தளங்களில், செய்தி வெளியாகிறதே நிஜமா என்கிற கேள்வியை முன்வைத்த போது…

“பிளாக்பஸ்டர் என்றால் என்னவென்றே புரியாத சூழலே இங்கு உள்ளது. திரைப்படத்தின் வெற்றி என்பது அந்த படத்தை பார்த்த பார்வையாளர்கள், அதன் மூலம் கிடைக்கும் வசூல் அடிப்படையிலேயே கணக்கிடப்படுவது இங்கு இல்லாமல் போனது.

பாட்ஷா, துப்பாக்கி, காஞ்சனா – 2,விஸ்வாசம் பாகுபலி – 2, விக்ரம் போன்ற படங்களை பார்த்தவர்களே மீண்டும் மீண்டும் திரையரங்குகளில் பார்த்தனர்.

அதிக பார்வையாளர், முதலீட்டை போன்று பன்மடங்கு லாபத்தை வசூல் மூலம் பெற்றுத் தந்த படங்கள் தான் உண்மையான பிளாக்பஸ்டர் படங்களாகும்.

ஆனால் இப்போதெல்லாம் படம் வெளியான அடுத்த நாளே பிளாக்பஸ்டர் என விளம்பரங்கள் வெளியிடுவதும், அதனை சமூக வலைதளம், ஊடகங்களில் முன்னிலைப்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.

இது சினிமா தொழிலுக்கு ஆரோக்கியமானதல்ல” என்கின்றனர்.

மே 10 அன்று ஸ்டார், உயிர்தமிழுக்கு, ரசவாதம் படங்கள் வெளியானபோதும் தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சமச்சீராக ஆதிக்கம் செலுத்தியது அரண்மனை – 4 படம் மட்டுமே.

கடந்த 14 நாட்களில் உலகம் முழுவதும் தமிழ் பதிப்பின் மூலம் 75 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது அரண்மனை – 4 திரைப்படம்.

தமிழ்நாடு திரையரங்குகள் மூலம் தயாரிப்பாளருக்கு சுமார் 20கோடி ரூபாய் பங்குத்தொகையாக கிடைக்கும். அரண்மனை – 4 படத்தின் மொத்த தயாரிப்பு செலவு தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸ் வசூல் மூலம் கிடைத்திருப்பதால், பிற உரிமைகள் மூலம் கிடைக்ககூடிய வருவாய் லாபமாகும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பாக்ஸ் ஆபீஸ் வசூலில் நிலவி வந்த தேக்கநிலையை அரண்மனை – 4 தனது வெற்றியின் மூலம் தகர்த்திருக்கிறது.

இதனை அடுத்து வரும் படங்கள் தக்க வைக்க போகிறதா, தடுமாற போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– இராமானுஜம்

“ஊதிய கோரிக்கையை நிறைவேற்றுங்கள்”: முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு மருத்துவர்கள் வேண்டுகோள்!

“நாட்டின் வளர்ச்சியை பாருங்கள்” : ராஷ்மிகா வீடியோ – மோடி ரியாக்‌ஷன்!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share