தவெகவில் இன்று இணையும் IRS அருண்ராஜ்.. நடிகர் விஜய் அறிவிக்கப் போகும் மிக முக்கிய பொறுப்பு என்ன?

Published On:

| By Minnambalam Desk

IRS Arun Raj

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் விருப்ப ஓய்வு பெற்ற IRS அதிகாரி அருண்ராஜ் இன்று அதிகாரப்பூர்வமாக இணைகிறார். தவெகவின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவி, அருண் ராஜுக்கு வழங்கப்படக் கூடும் என்கின்றன தவெக வட்டாரங்கள். IRS officer Arunraj to Join Actor Vijay’s TVK Today

தமிழக வெற்றிக் கழகத்தில் திமுக, அதிமுகவில் இருந்து முக்கிய ‘தலைகள்’ இணையப் போவதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய்யை இன்று ஜூன் 10-ல் நேரில் சந்தித்து விருப்ப ஓய்வு பெற்ற IRS அதிகாரி அருண் ராஜ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைய உள்ளனர்.

தவெகவில் இணையும் அருண் ராஜுக்கு என்ன பதவியை விஜய் வழங்குவார்? என்பது குறித்து கடந்த சில நாட்களாக விவாதங்கள் நடந்து வருகின்றன. அருண் ராஜுக்கு தவெக பொதுச் செயலாளர், இணைப் பொதுச்செயலாளர் அல்லது துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது. ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் அருண் ராஜூக்கு உடனே முக்கிய பதவி வழங்கக் கூடாது என எதிர்ப்பையும் தெரிவித்து வருவதாகவும் கூறப்பட்டது. தற்போது, கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் என்ற பதவி, அருண் ராஜுக்கு வழங்கப்படக் கூடும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

இதேபோல தவெகவில் இணையும் மேலும் சில பிரமுகர்கள் விவரங்களும் வெளியாகி உள்ளன.

திமுகவைச் சேர்ந்த ஶ்ரீவைகுண்டம் முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின் (1996-2011) அண்மை காலமாக கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அத்துடன் நடிகர் விஜய்யுடன் நீண்டகாலம் தொடர்பில் இருந்து வருகிறார். அவர் இன்று திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறார்,

அதிமுகவில் இருந்து பாஜகவுக்குப் போன மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜலட்சுமியும் (2011-2016) இன்று தவெகவில் இணைகிறார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி வகித்த போது, அதிமுகவில் இருந்து விலகி பாஜகவுக்கு தாவியவர் ராஜலட்சுமி. தற்போது பாஜக- அதிமுக கூட்டணி உறுதியாகிவிட்டதால் பாஜகவில் இருந்து வெளியேறி தவெகவுக்கு தாவுகிறார்.

அதிமுகவைச் சேர்ந்த வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் ஶ்ரீதரன் (1991-1996), ஓய்வு பெற்ற நீதிபதி சுபாஷ், ஜேபிஆர் கல்வி அறக்கட்டளையில் இருக்கக் கூடிய டாக்டர் மரிய வில்சன் ஆகியோரும் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைய இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

திமுக, அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் பல ‘தலைகள்’ தங்கள் கட்சிக்கு தாவப் போவதாக தவெகவினர் கூறி வந்தாலும் அப்படி ஒன்றும் ‘தலைகளாக’ அறியப்பட்டவர்கள் யாரும் இன்று தவெகவில் இன்று இணையவில்லை என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share