ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜ் விரைவில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருக்கிறார். பெரும் எதிர்பார்ப்புடன் தவெகவில் இணையப் போகும் அருண்ராஜூக்கு முக்கிய பதவி தருவதற்கு ஆதவ் அர்ஜூனா இப்போதே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Who is Arunraj to join Vijay TVK?
வருமான வரித்துறை அதிகாரி அருண் ராஜ்.. கடந்த சில நாட்களாக ஊடகங்களில், சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருக்கிறார்.
யார் இந்த அருண்ராஜ்?
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அருண்ராஜ், சேலத்தில் படித்தவர்; பின்னர் சென்னையில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தார். அருண்ராஜின் மனைவியும் மருத்துவர். இவர் நாமக்கல்லைச் சேர்ந்தவர். பின்னர் யுபிஎஸ்சி தேர்வு எழுதி IRS அதிகாரியானார் அருண்ராஜ்.
2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் பீகாருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டவர் அருண்ராஜ். பொதுவாக தேர்தல் காலங்களில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்.அதிகாரிகள்தான் தேர்தல் ஆணையத்தால் இடம் மாற்றம் செய்யப்படுவர்; ஆனால் வருமான வரித்துறை அதிகாரியான அருண்ராஜ் IRS, தேர்தல் ஆணையத்தால் பீகாருக்கு தூக்கியடிப்பட்டதன் பின்னணியில் மிக முக்கிய அரசியல் சம்பவம் இருக்கிறது என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
2017-ம் ஆண்டு தொழிலதிபர் சேகர் ரெட்டி தொடர்புடைய இரு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த ரெய்டுக்குப் போன வருமான வரித்துறை அதிகாரிகளில் முக்கியமானவர்தான் அருண்ராஜ்.
அப்போது, சேகர் ரெட்டி தொடர்புடைய இந்த இரண்டு இடங்களில் இருந்தும் பெருமளவு பணம் பறிமுதல் செய்யபட்டது. இவற்றில் ஒன்று மணல் குவாரிகள் மூலம் வந்த பணம்; மற்றொன்று முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு சொந்தமானது.
இதனை மணல் ஒப்பந்ததாரர்கள் மூலம் தெரிந்து கொண்ட அருண்ராஜ், சேகர் ரெட்டியிடம் சிக்கிய பணத்தில் ஒரு பகுதி, எடப்பாடி பழனிசாமியின் பணம்தானா? என விசாரணை நடத்தினார். ஆனால் சேகர் ரெட்டியோ, உண்மையை சொன்னால் எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் பதவிக்கு ஆபத்து வரும் என்பதால் சிக்கிய பணம் அனைத்தும் தம்முடையதுதான் என ஒப்புக் கொண்டார்; இதனால் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி. இந்த பிரச்சனையில் இருந்து தப்பினார்.
ஆனால் இந்த ரெய்டு மற்றும் பணம் விவரங்களை வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமியிடம் அருண்ராஜ், தமக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் தரக் கோரினாராம். ஓமலூர் தொகுதியில் தாம் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் அல்லது தாம் பரிந்துரைக்கும் ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு அருண்ராஜ் தரப்பில் ரொம்பவே நெருக்கடி தரப்பட்டதாம். இதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்ளவில்லை.
இதனால் திமுகவில் சபரீசன் மற்றும் இப்போது அதிகம் பேசப்படும் ரிதீஷை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார் அருண்ராஜ். திமுகவில் தமக்கு சேலம் மாவட்டத்தில் சீட் தர வேண்டும் என அருண்ராஜ் கோரிக்கை வைத்துள்ளார். திமுக தரப்பில் இது ஏற்கப்படவில்லை.
இந்த விவரங்களை அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு உளவுத்துறை அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
இதில் கடுப்பாகிப் போன எடப்பாடி பழனிசாமி, அருண்ராஜ் எங்களிடம் சீட் கேட்டார்.. நாங்கள் மறுத்துவிட்டோம்.. இப்போது திமுகவில் சீட் கேட்கிறார் என டெல்லிக்குப் புகார் அனுப்ப, உடனடியாக தமிழ்நாட்டில் இருந்து பீகாருக்கு தூக்கியடிக்கப்பட்டார் அருண்ராஜ். இதுதான் அப்போது நடந்த நிகழ்வுகளாம்.
இதன் பின்னர், நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக இருந்த நிலையில் அவருடன் நெருக்கம் காட்டினார் அருண்ராஜ். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என அறிவிக்க அருண்ராஜூக்கு ரொம்பவே ஏமாற்றமாம்.
2020-ம் ஆண்டு நடிகர் விஜய், மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது வருமான வரித்துறை சோதனையில் சிக்கினார். அப்போது நெய்வேலியில் படப்பிடிப்பு நடந்தது. நடிகர் விஜய்யை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த ரெய்டுக்குப் போன முக்கியமான அதிகாரியும் அருண்ராஜ்தான்; இந்த சிக்கலில் பிரச்சனைகளை விஜய்க்கு சரி செய்து கொடுத்ததும் இதே அதிகாரி அருண்ராஜ்தானாம்.இதனால், அப்போது முதலே விஜய் தரப்புடன் அருண்ராஜின் நெருக்கம் தொடங்கிவிட்டது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருடனான உறவுகள் ஒர்க் அவுட் ஆகாத நிலையில், விஜய்யுடனான நெருக்கம், அருண்ராஜின் அரசியல் கனவுகளுக்கு ரொம்பவே உதவியாக இருந்து வருகிறது.
நடிகர் விஜய் கட்சி தொடங்கிய காலம் முதல் அருண்ராஜின் நெருக்கம் அதிகரித்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி விதிகளை உருவாக்கியதிலும் அருண்ராஜ் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். அப்போதே தவெகவில் இணைப் பொதுச்செயலாளர் என்ற பதவியை உருவாக்கி இது ‘எனக்கான இடம்’ என துண்டுப் போட்டு வைத்தவர் அருண்ராஜ். டெல்லி பாஜக தலைவர்களுடன் இப்போதும் நெருக்கமான தொடர்பில் இருக்கும் அருண்ராஜ், விஜய் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதிலும் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.
இப்போது தமது மத்திய அரசுப் பணியை அருண்ராஜ் ராஜினாமா செய்துவிட்டார். அவரது விருப்ப ஓய்வுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் தந்துவிட்டார்.
இதனையடுத்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் ஜூன் முதல் வாரத்தில் அதிகாரப்பூர்வமாக இணைய இருக்கிறார் அருண்ராஜ். தவெகவில் புஸ்ஸி ஆனந்த் பொதுச் செயலாளராக இருக்கும் நிலையில், இணைப் பொதுச்செயலாளராக அருண்ராஜை நியமிப்பது தொடர்பாக விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறாராம். நடிகர் விஜய்யைப் பொறுத்தவரையில் அருண்ராஜ் நேர்மையான அதிகாரி; ரொம்பவே மூளைக்காரர்தான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பதால் தவெகவில் முக்கிய பதவி தருவதில் சீரியசாக இருக்கிறாராம்.
அருண்ராஜை கொங்கு மண்டல தவெகவின் முகமாக முன்னிறுத்தலாம் என்பதும் விஜய்யின் திட்டமாம். இதனால் சேலத்தில் உள்ள தொகுதிகளில் ஒன்று போட்டியிடுவது தொடர்பாகவும் அருண்ராஜ் தீவிர கள ஆய்வு செய்து கொண்டிருக்கிறாராம்.
ஆனால் அருண்ராஜுக்கு தொடக்கத்திலேயே தவெகவில் ஆதவ் அர்ஜூனா கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறாராம். அருண்ராஜ் தொடர்பான பல்வேறு பழைய புகார்களை ஆதவ் அர்ஜூனா அடுக்கிக் கொண்டிருக்கிறார் என்கின்றன தவெக வட்டாரங்கள்.