இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 சீசனுக்கான வீரர்கள் பரிமாற்ற ஒப்பந்தம் இன்று (நவம்பர் 15) அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்ட நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ரசிகர்களின் இதயங்களை கனமாக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியானது.
அதாவது நீண்டகாலமாக சிஎஸ்கேவின் அசைக்க முடியாத தூணாக இருந்து வந்த ரவீந்திர ஜடேஜா, ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முன்னதாக சிஎஸ்கே நிர்வாகம், சஞ்சு சாம்சனை வாங்க ராஜஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அவருக்கு பதிலாக நட்சத்திர ஆல்-ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, சாம் கரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டது.
அதன்படி ஜடேஜா மற்றும் சாம் கரனை கொடுத்து சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்கியிருக்கிறது. இதுதொடர்பான வீடியோ ராஜஸ்தான் ராயஸ் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பிகில் படத்தில் நடிகர் விஜய்யின் இண்ட்ரோ ஸ்டைலில் ஜடேஜா ராஜஸ்தான் அணியில் இணைந்திருக்கிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த மாற்றத்திற்குப் பிறகு, சிஎஸ்கே அணி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “எப்போதும் எங்கள் ராஜா, எப்போதும் எங்கள் தளபதி, எப்போதும் எங்கள் ஜட்டு” என்ற உருக்கமான வாசகத்துடன் ஜடேஜாவுக்குப் பிரியாவிடை அளித்துள்ளது.
மற்றொரு பதிவில், “200 போட்டிகள், 2354 ரன்கள், 152 விக்கெட்டுகள், 94 கேட்சுகள்…மஞ்சள் படையின் துணிச்சலைப் பற்றி வரலாறு பேசும்போது, அது உங்கள் பெயரை எதிரொலிக்கும். நன்றி ஜடேஜா” என்றும் கூறியுள்ளது.
சிஎஸ்கே அணிக்காக 12 சீசன்கள் விளையாடி, மூன்று ஐபிஎல் கோப்பைகளை வென்றதில் முக்கிய பங்காற்றிய ஜடேஜா, சென்னை அணியின் வெற்றியின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாக இருந்தார். அவரது பந்துவீச்சு, மிரட்டலான பீல்டிங் மற்றும் அதிரடியான பேட்டிங் என அனைத்தும் சிஎஸ்கேவின் அடையாளமாகவே மாறியிருந்தன.
ஜடேஜாவின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் திரும்பும் இந்த வர்த்தகத்தில், அவரது லீக் கட்டணம் ரூ.18 கோடியிலிருந்து ரூ.14 கோடியாகத் திருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
