இந்தியா- மியான்மர் எல்லையில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட போது மணிப்பூர் தீவிரவாதிகளுடன் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் 10 மணிப்பூர் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியா- மியான்மர் எல்லையில் உள்ள மணிப்பூர் மாநிலத்தின் சந்தெல் மாவட்டத்தின் நியூ சம்தால் கிராமத்தில் ஆயுத குழுவினர் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி தந்தனர். இருதரப்புக்கும் இடையே சில மணிநேரம் கடுமையாக மோதல் நடைபெற்றது. இம்மோதலில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.