அமலாக்கத் துறையை தொடர்ந்து சென்னையில் வருமான வரித்துறை களமிறங்கியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் ஈடி ரெய்டு நடத்தியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்தநிலையில் இன்று (ஆகஸ்ட் 18) சென்னை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் சோதனையானது நடைபெற்று வருகிறது.
இரும்பு பொருள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் ஐடி அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். சென்னை ஈக்காட்டுத்தாங்கல் டிஃபென்ஸ் காலனியில் உள்ள இன்டர்ஆர்க் பில்டிங் சொல்யூஷன்ஸ் அலுவலகத்தில் சோதனை நடக்கிறது.
இந்த நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலும் இதன் கிளைகள் உள்ளன.
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், இன்னும் வருமான வரித்துறையால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.