லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வென்ற போதிலும், இங்கிலாந்து அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ICC fined england due to slow over
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கியது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியும் வெற்றிக்காக போராடி வருகின்றன. அதன்மூலம் கிடைக்கும் ஒவ்வொரு புள்ளியும் அந்த அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து செல்ல உதவியாக இருக்கும்.
இந்த நிலையில் 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை குறிவைத்து அணிகள் விளையாடி வருகின்றன.
அதன்படி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.
கடைசியாக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த நிலையில் லார்ட்ஸ் டெஸ்ட்டில் மெதுவாக ஓவர் வீசியதாக போட்டி நடுவர்கள் பால் ரீஃபல் மற்றும் ஷர்புடோலா இப்னே ஷாஹித், மூன்றாவது நடுவர் அஹ்சன் ராசா மற்றும் நான்காவது நடுவர் கிரஹாம் லாய்ட் ஆகியோர் குற்றஞ்சாட்டினர். இதனை எமிரேட்ஸ் ஐசிசி எலைட் பேனல் ஆஃப் மேட்ச் ரெஃப்ரீயின் ரிச்சி ரிச்சர்ட்சன் உறுதிபடுத்தினார்.
அவரது பரிந்துரையின் பேரில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 2 புள்ளிகளை இழந்துள்ளது இங்கிலாந்து அணி. அதன்படி 24 இல் இருந்து 22 ஆகக் குறைந்தது, புள்ளி சதவீதம் (PCT) 66.67 சதவீதத்திலிருந்து 61.11 சதவீதமாகக் குறைந்தது. இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது, 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும் போட்டிக் கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமும் விதித்துள்ளது ஐசிசி. இதனை இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸும் ஏற்றுக்கொண்டார்.

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று முதலிடத்தில் உள்ளது. இலங்கை அணி 2 போட்டியில் ஒன்றில் வெற்றி, மற்றொன்றில் டிரா என 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளன. மூன்று, நான்கு, ஐந்தாவது இடங்களில் முறையே இங்கிலாந்து, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய அணிகள் உள்ளன.