சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
அமைச்சர் ஐ.பெரியசாமி 2006 – 2010 வரையிலான காலகட்டத்தில் வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது வருமானத்திற்கு அதிகமாக 2.13 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
ஐ.பெரியசாமியின் மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார், பிரபு உள்ளிட்டோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த திண்டுக்கல் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், குற்றப்பத்திரிக்கையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி ஐ.பெரியசாமி உள்ளிட்டோரை விடுவித்தது.
இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் 2018 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது’ என்று கூறி திண்டுக்கல் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது.
அதோடு, ‘இந்த வழக்கை திண்டுக்கல் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும். தினசரி என்ற அடிப்படையில் வழக்கை விசாரித்து ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஐ.பெரியசாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு இன்று (ஆகஸ்ட் 18) விசாரணைக்கு வந்தபோது சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவித்த கிழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.