நீலாம்பூர் – மதுக்கரை இடையே உள்ள 28 கி.மீ தூர சாலை, 6 வழிச்சாலையாக 1200 கோடியில் பிரமாண்டமாக விரிவாக்கம் செய்யப்பட இருக்கின்றது. இந்த சாலையில் இரு இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சேலம் – கொச்சி தேசிய நெடுஞ்சாலை 6 வழிசாலையாக இருக்கும் நிலையில், நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரை 28 கிலோ மீட்டர் தூரம் மட்டும் இரு வழிச்சாலையாக உள்ளது. எல் அண்டு டி வசம் இருந்த இந்த சாலை தற்போது தேசிய நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த 28 கிலோ மீட்டர் சாலையை 6 வழி சாலையாக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றது.
2 இடங்களில் புதிய மேம்பாலம்!
1200 கோடி மதிப்பீட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்படும் இந்த சாலையில் , சிந்தாமணி புதூர், கற்பகம் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளது.
நீலாம்பூர் – மதுக்கரை இடையே இரு வழிச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வரும் நிலையில் இந்த சாலையினை அகலப்படுத்த வேண்டும் என பொது மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் இந்த சாலை பராமரிப்பு பணி 2029 வரை எல் & டி நிறுவனம் வசம் இருந்ததால் விரிவாக்கம் செய்ய முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளின் முயற்சி காரணமாக எல் & டி நிறுவனம் சாலையினை தேசிய நெடுஞ்சாலையிடம் ஒப்படைத்தது. இந்த சாலையில் இருக்கும் 6 சுங்கசாவடிகளில் 5 சுங்க சாவடிகள் வரும் 1 ம் தேதியுடன் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கரை சுங்க சாவடி மட்டும் இனி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சாலை திட்டபணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட செந்தில் குமார், இந்த நீலாம்பூர் – மதுக்கரை இடையே 6 வழிப்பாதை சர்வீஸ் சாலையுடன் அமைக்கப்பட உள்ளது எனவும், சிந்தாமணி புதூர், கற்பகம் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளது எனவும், 84 சிறு பாலங்கள் அமைக்கும் திட்டமும் உள்ளது எனவும் தெரிவித்தார்.
30 ஏக்கர் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை!
சாலையின் இரு புறமும் 28 கி.மீ. தூரத்திற்கு சர்வீஸ் சாலை அமைக்கப்படுவதால் இதில் உள்ளூர் மக்கள் பயனடைவார்கள் எனவும் இருகூர் உள்ளிட்ட 2 இடங்களில் உள்ள ரயில் மேம்பாலம் அகலப்படுத்தப்பட உள்ளது எனவும், இதற்காக 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும். இது குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து வருகிறது என்றும் இந்த சாலையின் திட்ட இயக்குநர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.