நித்யானந்தாவின் கைலாசாவுக்கு எப்படி செல்ல வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. How to go to Kailash
பாலியல், கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி போலி சாமியார் தலைமறைவாக இருக்கிறார். இந்தியாவில் இருந்து தப்பியோடிய அவர் எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது.
ஆனால் அவர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு வாழ்ந்து வருவதாக வீடியோ வெளியிட்டு வருகிறார்.
இந்தநிலையில் தனி ஒரு பக்தனாக மதுரை ஆதின மடத்திற்கு நுழைய அனுமதிக்க வேண்டும் என்று நித்யானந்தா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து நித்யானந்தா சார்பில் அவரது சீடரான திருவண்ணாமலை நித்யானந்த பீடத்தை சேர்ந்த ராஜசேகர் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியா கிளாட் அமர்வில் இன்று (ஜூன் 19) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், நித்யானந்தா எங்கே இருக்கிறார்? கைலாசா எங்கு இருக்கிறது? எங்கு எப்படி போக வேண்டும்? விசா, பாஸ்போர்ட் உள்ளதா?, நீங்கள் கைலாசா சென்றிருக்கிறீர்களா என கேள்வி எழுப்பினர்.
இதற்கு நித்யானந்தா சார்பில், ஆஸ்திரேலியா அருகே உள்ள யு.எஸ்.கே. என்ற தனி நாட்டில் நித்யானந்தா வசித்து வருகிறார். ஐநா அங்கீகாரம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், நித்யானந்தா தரப்பில் புதிய வழக்கறிஞரை நியமிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கறிஞரை மாற்ற அனுமதியளித்து இந்த வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். How to go to Kailash
