சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான ‘கிரீன் ஒலிம்பியாட்’ தேர்வில் மாணவர்கள் பங்கேற்க கல்லூரிகள் ஊக்குவிக்க வேண்டுமென யுஜிசி உத்தரவிட்டுள்ளது. Green Olympiad 2025
எரிசக்தி மற்றும் இயற்கை வள நிறுவனமான TERI (The Energy and Resources Institute) ஆண்டுதோறும் பள்ளி மாணர்களுக்காக கிரீன் ஒலிம்பியாட் என்கிற நிகழ்ச்சி நடத்துகிறது.
1999-ம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் வினாடி வினாவாகத் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, தற்போது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 2000 பள்ளிகளைச் சென்றடைகிறது. Green Olympiad 2025
இந்த நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த நோக்கம், சுற்றுச்சூழல், நிலைத்தன்மை மற்றும் பசுமைத் திறன்கள் குறித்து மாணவர்களின் திறனை உணர்ந்து வளர்ப்பதாகும்.
இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், “நம்நாட்டில் இளம் தலைமுறையினரிடம் சுற்றுச்சூழல் கல்வியை ஊக்குவிக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்பு உணர்வை ஏற்படுத்திடும் வகையில் மத்திய எரிசக்தி மற்றும் இயற்கை வள நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும், ‘கிரீன் ஒலிம்பியாட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தேர்வில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ‘கிரீன் ஒலிம்பியாட் பார் இளைஞர்கள் – 2025’ தேர்வு ஏப்ரல் 7 முதல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கி உள்ளது. 18 வயது முதல் 30 வரையான மாணவர்கள் இத்தேர்வுக்கு மார்ச் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் நடத்தப்படும் தேர்வில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மின்னணு சான்றிதழ் வழங்கப்படும்.
சிறப்பான பங்களிப்பை வழங்கும் முதல் மூன்று மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும். உயர்கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் கிரீன் ஒலிம்பியாட் தேர்வில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.