பாஜக கூட்டணியால், வாக்காளர்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்கு ரூ10,000 பணம் வழங்கி ஜெயித்துவிட முடியும்? என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார்.
பீகாரில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாக, பெண்களுக்கு ரூ10,000 கடன் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தேர்தல் காலத்திலும் இந்த பணம் பட்டுவாடா செய்யப்பட்டது மிகப் பெரும் சர்ச்சையானது.
தேர்தல் பிரசாரத்தின் போது, பெண்கள் ரூ10,000 கடனை திருப்பிச் செலுத்த வேண்டாம் என நிதிஷ்குமாரின் ஜேடியூ- பாஜக பிரசாரம் செய்தன.
இந்த பிரசாரம்தான் பீகாரில் பெண் வாக்காளர்களை அதிக அளவில் ஓட்டு போடவும் வைத்தது; பாஜக- ஜேடியூ கூட்டணி வெற்றிக்கும் உதவியது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ரூ10,000 கடன் குறித்து விமர்சித்து வருகின்றன.
இப்பின்னணியில் பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இன்னும் எத்தனை காலத்துக்கு ரூ10,000 கொடுப்பீர்கள்? மக்களின் கண்ணியமான வாழ்க்கையை சீர்குலைக்காமல் இருக்க வேண்டும். பீகாரில் 202 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதை எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. உத்தரப்பிரதேச தேர்தல் களத்தில் பாஜகவை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம் என்றார்.
