கவனம் ஈர்க்கிறதா ‘கண்ணப்பா’ ட்ரெய்லர் ?

Published On:

| By uthay Padagalingam

’பான் இந்தியா’ வெளியீடாக இந்த ஆண்டு வருகிற படங்களில் ஒன்றாக உள்ளது ‘கண்ணப்பா’. தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளரும் நடிகருமான மோகன்பாபு தயாரித்துள்ள இப்படத்தில் அவரது மகன்களில் ஒருவரான விஷ்ணு மஞ்சு நாயகனாக நடித்திருக்கிறார். அவரே இதன் கதையையும் அமைத்திருக்கிறார். முகேஷ் குமார் சிங் இதனை இயக்கியிருக்கிறார்.

கிட்டத்தட்ட பத்தாண்டு காலம் தயாரிப்பில் இருந்த இப்படம், இந்த மாதம் 27ஆம் தேதியன்று வெளியாகிறது. தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தியிலும் வெளியாகிற இப்படம் சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாகச் சொல்லப்படுகிறது.

‘கண்ணப்பா’ படத்தின் ட்ரெய்லர் ஜூன் 14-ஆம் தேதி வெளியானது. How is kannappa movie trailer

காட்டில் வேடனாக இருக்கிற திண்ணன் எப்படி ‘கண்ணப்பர்’ ஆனார் என்று சொல்கிற கதையைக் காட்டுகிறது இந்த ட்ரெய்லர்.

கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கிற நபர், இறுதியில் தனது சிவபக்தியை வெளிப்படுத்தும் விதமாகக் கண்களையே கொடுக்கிற புராணக் கதையைச் சொல்கிறது. கூடவே, முன்பிறவியில் அர்ஜுனன் ஆகத் திண்ணன் இருந்தார் என்கிறது.

அதனை விளக்குகிற இப்படத்தில் மோகன்பாபு, சரத்குமார், பிரம்மாஜி, பிரம்மானந்தம், சம்பத்ராம், ஐஸ்வர்யா உட்படப் பலர் நடித்துள்ளனர்.

பிரபாஸ், மோகன்லால், அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால், தேவராஜ் என்று மொழிவாரியாகச் சில நட்சத்திரங்களையும் ‘கௌரவமாக’த் தலைகாட்டச் செய்திருக்கிறது ‘கண்ணப்பா’.

இப்படியொரு ‘பான் இந்தியா’ படத்திற்கு நாயகி பாத்திரம் மிக முக்கியம். அதற்கேற்றார் போல, இதில் ‘நேமளி’ எனும் பாத்திரத்தில் ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார்.

’கண்ணப்பா தான் அவர் அறிமுகம் ஆகவிருந்த திரைப்படம். ஆனாலும், அதற்கு முன்னரே அவர் தெலுங்கில் நாயகியாக ‘ஓம் பீம் புஷ்’ மற்றும் தமிழில் நடித்த ‘ஸ்டார்’ ஆகியன வெளியாகிவிட்டன.

மேற்சொன்ன அத்தனை நடிகர் நடிகைகளையும் அறிமுகப்படுத்துகிற விதமாக, ‘கண்ணப்பா’ ட்ரெய்லர் உள்ளது. படத்தின் காட்சிகள் எப்படிப்பட்டவை என்பதை முன்னுணர்த்துகிற விதமாகவும் அமைந்துள்ளது.

காளஹஸ்தி பகுதியில் நிகழ்வதாக இக்கதை இருப்பதால் தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் ஈர்ப்பதாக இப்படம் அமையலாம். பிற மொழி ரசிகர்களைக் கவர, ‘பாகுபாலி’ பாணியிலான காட்சியமைப்பும் நட்சத்திர நடிகர்களின் இருப்பும் கை கொடுக்கலாம்.

கமர்ஷியல் பட உள்ளடக்கத்தைக் கடந்து, ‘கண்ணப்பர்’ கதைக்குக் களங்கம் விளைவிக்காத வகையில் இதன் ஆக்கம் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இப்படத்தின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பதாக இருக்கும்.

அதீத விஎஃப்எக்ஸ் பங்களிப்பை நிறைத்து காட்சிகளோடு ஒன்றவிடாமல் ரசிகர்களை விலக்கும்விதமாகப் படம் அமைந்துவிடக் கூடாது. அதற்குச் சில படங்கள் கடந்த கால உதாரணங்களாக உள்ளன. அந்த வரிசையில் சேர்ந்துவிடக் கூடாது என்று ரசிகர்கள் எண்ணும்விதமாக உள்ளது ‘கண்ணப்பா’ ட்ரெய்லர். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share