ADVERTISEMENT

கொலையும், இறையாண்மையும்: மக்களாட்சி அரசியலுடன் ஆர்.எஸ்.எஸ் முரண்படுவது எப்படி

Published On:

| By Minnambalam Desk

ராஜன் குறை

பிரதமர் மோடி குடியரசு தின நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் துவங்கி நூறாண்டுகள் நிறைவடைந்ததைக் குறிப்பிட்டு உலகின் மிகப்பெரிய தன்னார்வ நிறுவனம், என்.ஜி.ஓ என்றும், அது தேசத்திற்கு செய்த சேவைகளைப் பாராட்டியும் பேசியுள்ளார். அவரை வளர்த்த இயக்கம் என்பதால் அவர் பாராட்டுவதில் வியப்பில்லை. மேலும் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதும், அதிலிருந்து அவர் விலக்குப் பெறவேண்டி இருப்பதும் காரணமாக இருக்கலாம். அடுத்த மாதம் பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவடையப் போகிறது. காரணம் எதுவாக இருந்தாலும், இதில் மக்களாட்சியில் நம்பிக்கையுள்ளவர்கள் காணக்கூடிய கருத்தியல் பிரச்சினை என்னவென்பதை புரிந்து கொள்வது அவசியம்.

பொதுவாக ஆர்.எஸ்.எஸ் குறித்த விமர்சனங்கள் தொலைக்காட்சியில் விவாதிக்கப்படும்போது இன்றியமையாமல் நாதுராம் கோட்சே காந்தியைக் கொன்றது குறிப்பிடப்படும். இதையொட்டி ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டதும், பின்னர் சிறிது காலம் கழித்து தடை நீக்கப்பட்டதும் நாடறியும். இவ்வாறு குறிப்பிடும் போதெல்லாம் சங்க பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் உடனே இடைமறித்து கோட்சே ஆர்.எஸ்.எஸ்-காரர் அல்ல என்று கூறுவார்கள். இந்து மகா சபா வேறு, ஆர்,எஸ்.எஸ் வேறு என்பார்கள்.

ADVERTISEMENT

இதெல்லாம் அர்த்தமற்ற வாதங்கள். ஹெட்கவார் சாவர்க்கரின் இந்துத்துவ கொள்கையால் ஈர்க்கப்பட்டுதான் ஆர்.எஸ்.எஸ் துவங்கினார். கோட்சேவும் அதில் பங்கெடுத்தார்; பின்னர் தனியாக ஒரு அமைப்பைத் துவங்கினார். அமைப்புகள் முக்கியமல்ல. அவர்களை பிணைத்த கருத்தியல்தான் முக்கியம். அதுதான் இந்துத்துவம், இந்து ராஷ்டிரம் ஆகிய கருத்தாக்கங்கள். அதில் முக்கியமாக அமைந்திருந்தது வன்மையான இறையாண்மை நோக்கு. அது வன்முறையை எதிர்த்து அகிம்சையை போதித்த காந்தியை முழுமையாக மறுத்தது; வெறுத்தது.  இதனை முழுமையாகப் புரிந்துகொண்டால்தான் எதனால் ஆர்.எஸ்.எஸ்-சை இந்திய நலனை விரும்பும் பலராலும் ஏற்க முடிவதில்லை என்பது தெரியும்.  

தன்னுணர்வு, வன்முறை, இறையாண்மை

மனிதர்களின் சமூக வாழ்வின் சாத்தியங்கள் ஆற்றல் பெறத் துவங்கிய புள்ளி என்ன? அவர்கள் நினைவாற்றல் அதிகரித்ததால் அவர்கள் தன்னுணர்வு பெறத் துவங்கியதுதான். ஒவ்வொரு மனித உடலும் தனக்கான நினைவுகளை சேகரித்துக் கொண்டு, நான் என்று தன்னையே சுட்டிக் கொள்ளும் சாத்தியம் உருவானதுதான் பிற விலங்குகளிடமிருந்து வேறுபட்ட சமூக வாழ்வின் அடிப்படை. அது மொழியாக மாறிய போது குறியியக்கம் பெருகி சமூகத்தின் ஒருங்கிணைவு புதிய வடிவம் எடுத்தது. ஏனெனில் ஒருவர் அனுபவத்தை பிறரிடம் பகிர்ந்துகொள்ள முடிந்தது. பாறைகளிலும் குறிகளை, ஓவியங்களை செதுக்க முடிந்தது.

ADVERTISEMENT

இந்த தன்னுணர்வால் இன்னொரு பிரச்சினையும் தோன்றியது. ஏனெனில் நான் என்ற தற்சுட்டு மொழியில் உபரியானது, கற்பிதமானது.  பெரியார் தனது பிரகிருதிவாதம் நூலில் நான் என்பது உடலையும் குறிக்கவில்லை, ஆன்மாவையும் குறிக்கவில்லை, சிந்தனையையும் குறிக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். காரணம் என் உடல், என்  ஆன்மா, என் சிந்தனை என்றெல்லாம் கூறும்போது அந்த “என்” என்பது, தன்னையே சுட்டிக் கொள்ளும் சொல், இது எதுவுமே அல்ல என்பது தெளிவாகிறது என்று கூறுகிறார்.

இதனால் என்னவாகிறது என்றால் ஒரு இயந்திரம் இயங்கத் துவங்கும்போது அதனுள் ஆற்றல் எப்படி வந்தது என்று கேட்காத நாம், அந்த இயந்திரம் உடைந்தால், பழுதுபட்டால் அதன் ஆற்றல் எங்கே செல்கிறது என்று கேட்காத நாம், மனித உடலில் அதனை இயக்கும் ஆற்றல் எப்படி வந்தது, இறந்த பின் எங்கே சென்றது என்று கேட்கிறோம். இந்த கேள்வி “நான்” என்ற தன்னுணர்வால் உருவாகிறது. இந்த தன்னுணர்வுதான் ஆத்மா என்று ஒன்று இருப்பதாக, அதனை படைக்கும் பரமாத்மா என்று ஒன்று இருப்பதாகவெல்லாம் சித்தரிக்கிறது. இதனால் எல்லாம் பெரிய பிரச்சினை ஒன்றுமில்லை.

ADVERTISEMENT

எங்கே பிரச்சினை பெரிதாகிறது என்றால் இந்த தன்னுணர்வு அது உருவாகும் உடலையே சிதைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளும் சாத்தியம் உருவாகிறது. அதைப்போலவே பிறரைக் கொல்லும் சாத்தியமும் உருவாகிறது. பிற உயிரினங்களில் பெரும்பாலும் உணவிற்காகத்தான் பிற உயிரினங்களைக் கொலை செய்வது நிகழ்கிறது; சில உயிரினங்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் பிற உயிரினங்களைக் கொல்லலாம். அதெல்லாம் இயற்கையான உந்துதல்களில் நிகழ்கிறது. பெரும்பாலும் எந்த உயிரினமும், வாழ்வில் விரக்தி கொண்டு தற்கொலை செய்வது இல்லை; ஆதிக்க வெறியில் தன் உயிரினத்தையே கொல்வதும் இல்லை. ஒட்டகங்கள் குழுக்களாகப் பிரிந்து போரிட்டுக் கொள்வதில்லை. யானைகள் குழுக்களாகப் பிரிந்து சண்டையிட்டு மாய்வதில்லை.

மனிதன் இன்னொரு மனிதனைக் கொல்லலாம் என்பதிலிருந்துதான் தன்னுணர்வின் அரசியல் துவங்குகிறது எனலாம். அதனால்தான் மனிதர்கள் உறவு முறை குழுக்களை உருவாக்கிக் கொண்டார்கள். நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்று பிரித்து அறிந்தார்கள். இன்னொரு இனக்குழு தன்னைத் தாக்கலாம் என்பதால்தான் முதலிலேயே அவர்களைத் தாக்கி அழித்துவிடலாம் அல்லது அடிமைப்படுத்தலாம் என யோசித்தார்கள். அப்போது ஒரு குழுவாக இயங்குபவர்களுக்கு தலைமை தேவைப்பட்டது. இறையாண்மை தோன்றியது.

இறையாண்மை என்பது என்னவென்றால் மற்றொரு அடையாளத்திற்கு எதிராக தன்னை நிறுவிக்கொள்ளும் திண்மை. மானுட இனக்குழு இயற்கையிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள இறைவனை உருவாக்கிகொண்டது. அந்த இறைவனின் பிரதிநிதிகளாக பூசாரிகளை உருவாக்கிக் கொண்டது. பிற இனக்குழுக்களிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள ஒரு தலமையை, அரசனை உருவாக்கிக் கொண்டது. அது இறையாண்மையாக மாறியது. “அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்” என்ற  பழமொழி இந்த இறைவன்- இறையாண்மை தொடர்பை எடுத்துக் காட்டுவதாகக் கூறலாம்.

இப்படி மனிதர்கள் நிரந்தரமாக ஒருவொருக்கொருவர் எதிரிகளாகி, வீரம் என்ற பெயரில் கொலையை நியாயப்படுத்துவதிலிருந்து எப்படி விடுபடுவது என்று பல மகான்கள் சிந்தித்தனர். புத்தர், மஹாவீரர், ஏசு கிறிஸ்து என வன்முறையை தவிர்க்க சொன்னவர்களின் சீடர்கள் மத நிறுவனங்களைத் தோற்றுவித்தனர். பின்னாளில் அந்த நிறுவனங்களே இறையாண்மையின், பேரரசின் ஆதாரமாகி வன்முறையைத் தோற்றுவித்தன. உலகெங்கும் அரசர்களுக்கிடையில் ஓயாத போர்கள் நடந்த வண்ணமிருந்தன. வீரமென்ற பெயரில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் கொல்வது ஓயாமல் பெருகியது. இன்றும் திரைப்படங்களில் கொலைக்காட்சிகளை ருசிகரமாகக் காட்டி சமூகமே பார்த்து ரசிக்கிறது.

நவீன கால தேசிய அரசு உருவாக்கம்

பதினைந்தாம் நூற்றாண்டில் முதலீட்டிய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தபோது குடியரசுத் தத்துவம் வலுப்பெற்றது. அது மன்னர்களிடம் குவிந்த இறையாண்மையை மட்டுப்படுத்த முயற்சித்தது. நிலப்பிரபுக்கள், வர்த்தகர்களின் அவைகள் முடிவுகள் எடுப்பதில் பங்கேற்றன. அச்சுப் பண்பாடு பெருகி, கல்வி பரவலான பிறகு, அறிவியல் தொழில்நுட்பமும் வளர, வளர முடிவுகள் எடுப்ப தில் பல்வேறு மக்கள் தொகுதிகளுக்கும் பங்கிருக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறத் துவங்கியது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் உருவாக்கமும், ஃபிரெஞ்சு புரட்சியும் மன்னர்களே இல்லாமல் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் மக்கள் பிரதிநிதிகளே தங்களை ஆண்டுகொள்ளும் நவீன அரசியல் முறையை அறிமுகப்படுத்தியது. அப்போது எந்த மக்கள் அவ்வாறு தங்களைத் தாங்களே ஆண்டு கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்தபோது ஒரு எல்லைக்குட்பட்ட பரப்பில் வாழும் மக்கள் ஒரு தேசிய இனமாக தங்களைத் தாங்களே ஆண்டுகொள்வார்கள் என்ற தேசியவாதக் கருத்தியல் உருவானது.

மன்னர்கால பேரரசுக் கனவுகள்தான் ஓயாத போர்களைத் தோற்றுவித்தன, இப்போது மக்களாட்சி தேசங்களெல்லாம் ஒற்றுமையாக மானுட முன்னேற்றத்திற்காக இணைந்து பயணிக்கும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் மக்களாட்சியை சாத்தியமாக்கிய முதலீட்டிய பொருளாதாரத்தில், முதலாளிகளிடையே, முதலீட்டிய சக்திகளிடையே நிலவிய போட்டியில் தேசங்களுக்கிடையே போர்கள் துவங்கின.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் முதல் உலகப் போர் வெடித்தது. தேசிய அரசுகளெல்லாம் பெரும் ராணுவங்களை உருவாக்கின. நவீன ஆயுதங்களைக் குவித்தன. விமானங்கள், பிரம்மாண்ட போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் என நீர். நிலம், ஆகாயம் எல்லாம் போர்களின் கொலைக் களங்களாயின. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தேசங்களாக ஒருமைப்பட்ட இத்தாலியும், ஜெர்மனியும் பாசிச அரசுகளாக ஒற்றைத் தலைவர்களிடம் அதிகாரம் குவிக்கப்பட்ட போர் இயந்திர இறையாண்மைகளாக உருமாறின. இரண்டாம் உலகப்போரின் இறுதியில் பெரும் அழிவுச் சக்தியான அணு ஆயுதம் பயன்பாட்டிற்கு வந்தது. இன்றுவரை மானுட இருப்பையே அச்சுறுத்தி வருகிறது. தேசிய இறையாண்மைகள் ராணுவத்தையே, ஆயுதக் குவிப்பையே சார்ந்துள்ளன.

காந்தியும், சாவர்க்கரும் 

மதன் லால் திங்கரா என்னும் இளைஞர் 1909-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி, கர்சன் வைலி என்ற ஆங்கிலேயே அதிகாரியை லண்டனில் ஒரு அரங்கக் கூட்டத்தில் பகிரங்கமாக சுட்டுக் கொன்றார். என் நாட்டை ஆக்கிரமித்துள்ள அன்னியர்களைக் கொல்வது தேச பக்தி என்று கூறினார். பல்வேறு தலைவர்கள் இந்த வன்முறைப் போக்கைக் கண்டித்தனர். ஆனால், மதன்லால் திங்கராவின் குரு எனக் கருதப்பட்ட சாவர்க்கர் அந்த கொலையை நியாயப்படுத்தினார். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் விஜயதசமி அன்று இலண்டினில் இந்திய மாணவர்களிடையே ஒரு கூட்டம் நடந்தது. தென் ஆப்பிரிக்காவிலிருந்து பிரிட்டிஷ் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த வழக்கறிஞர் காந்தி அந்த கூட்டத்தில் பேசினார். சாவர்க்கரும் பேசினார். அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்த ஒரே தருணம் அதுதான்.

அன்றிரவு விருந்திற்குப் பின் காந்தி ராமாயணத்தில் வரும் போர் உருவகமானது. பத்து தலை ராவணன் என்பது நம் மனதில் இருக்கும் தீய குணங்கள்தான். ராமாயண போர் என்பது நம் மனதில் இருக்கும் அழுக்குகளை அகற்றுவதுதான் என்று பேசினார். சாவர்க்கர் அதனை கடுமையாக மறுத்து போர் என்பது எதிரிகளை அழிப்பதுதான். சீதையை ராமன் மீட்ட துபோல நாம் நாட்டை அன்னியர்களிடமிருந்து போராடி மீட்க வேண்டும் என்றார்.

அந்த கூட்டம் முடிந்து கப்பலில் தென்னாப்பிரிக்கா செல்லும்போதுதான் காந்தி “இந்து சுயாராஜ்யம்” என்ற தன் புகழ்பெற்ற அரசியல் அறிக்கையை எழுதினார். அதில் அவர் ஆட்சி செய்வது யார் என்பது சுதந்திரத்தை தீர்மானிப்பதில்லை. மக்கள் அவர்கள் விரும்பும் வழியில் சுதந்திரமாக, சுயசார்புடன் வாழ்வதுதான் சுயராஜ்யம் என்று வாதிட்டார். தேசிய இறையாண்மை என்பதற்கு பதிலாக அவர் மக்களின் சுயாட்சி உரிமைகளையே, நல்வாழ்வையே உண்மையான சுதந்திரத்தின் களம் என்று கருதினார். வன்முறை வழியில் அரசைக் கைப்பற்றுவதனால் மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்காது என்று கூறினார்.

சாவர்க்கர் சதிச் செயல்களுக்காக பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார். கொடும் சிறைவாசத்தை அனுபவித்தார். பின்னர் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டார். இந்துத்துவம் என்ற அரசியல் சித்தாந்தத்தை உருவாக்கினார். இந்து மதமே இந்தியாவின் வரலாறு என்றார். இறை நம்பிக்கை இல்லாதவரான சாவர்க்கர் ராமனை இந்தியா முழுவதையும் ஒருங்கிணைத்த வரலாற்றில் வாழ்ந்த அரசனாகவே கருதினார். இந்திய நிலப்பரப்பிற்கு வெளியே தங்கள் புனிதத் தலங்களைக் கொண்ட முஸ்லீம்களோ, கிறிஸ்துவர்களோ இந்தியாவின் முழுமையான குடிமக்களாக இருக்க முடியாது என்று கூறினார். ஆண்மையும், வீரமும் மிக்க ஒரு வல்லரசான இந்திய இறையாண்மையே தேவை என்றார்.

சாவர்க்கர், மூஞ்சே, ஹெட்கவார், கோல்வால்கர், கோட்சே சகோதரர்கள் என இந்துத்துவ கருத்தியலை தீவிரமாக முன்னெடுத்து, அமைப்புகள் கட்டிய அனைவரும் மராத்திய தேஷஸ்ட அல்லது சித்பவன் பார்ப்பன வகுப்பினர் என்பது குறிப்பிடத் தக்கது. சிவாஜி மராத்திய சாம்ராஜ்யத்தை நிறுவியிருந்தாலும், அது பார்ப்பன பேஷ்வாக்களின் ஆட்சியாகத்தான் நூறாண்டுகாலம் நீடித்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்துத்துவ இறையாண்மைக் கருத்தியலைக் கருத வேண்டும். அதனால்தான் பேஷ்வாக்களின் படையுடன் பிரிட்டிஷாரின் மஹர் படைப்பிரிவு போரிட்ட வென்ற பீமா கோரேகான் போர் நிகழ்வினை அம்பேத்கர் கொண்டாடத் துவங்கியதும், இன்றும் தலித் அமைப்புகள் கொண்டாடுவதும் இந்துத்துவ அமைப்புகளை மிகவும் கோபப் படுத்துகிறது.  

பாகிஸ்தான் கோரிக்கை உருவாக இவர்கள் பேசிய இந்துத்துவ கருத்தியல் முக்கிய காரணமாக இருக்க, நாடு இரண்டாகப் பிரிந்து உருவானதற்கான பழியை மத நல்லிணக்கத்தைத் தொடர்ந்து வலியுறுத்திய காந்தியின் மீது போட்டார்கள். காந்தி பாகிஸ்தானின் தந்தை என்றார்கள். காந்தி அகிம்சை வழியை போதித்ததும், சுய சார்பு மிக்க சுயாட்சி வடிவங்களே சுதந்திரம் என்று கூறி, இறையாண்மை தேசிய அரசு வடிவத்தைக் கொண்டாடாததும்தான் காந்தியின் மீதான கோபத்திற்குக் காரணம்.

அந்த பிரச்சினைதான் இன்றும் தொடர்கிறது. அந்நியர்கள் ஊடுறுவி நாட்டின் மக்கள் பரப்பில் மாற்றங்களை ஏற்படுத்த சதி நடக்கிறது என்று பிரதமரே பேசுகிறார். அவர் குறிப்பிடுவது முஸ்லீம்களைத்தான். சரியான பிறப்புச் சான்றிதழ் இல்லாத முஸ்லீம்களை பாகிஸ்தான், பங்களா தேஷ் அகதிகள் என்று கூறி அவர்கள் வாக்குரிமையையும், குடியுரிமையையும் பறிக்கும் திட்டம்தான் CAA சட்டம் முதல் இப்போது தீவிர வாக்காளர் சரிபார்ப்பு வரை தொடர்கிறது என்று தோன்றுகிறது.

தொடர்ந்து ராணுவ வாதம் பேசுவது, பாகிஸ்தானையும் இந்திய முஸ்லீம்களையும் தொடர்பு படுத்தி மக்களிடையே பிளவை ஏற்படுத்துவது, இந்து இறையாண்மை மையவாதம் என்ற பெயரில் வர்ண தர்ம மீட்பினை மெல்ல மெல்ல செயல்படுத்துவது, இந்தி வழியாக சமஸ்கிருதத்தை இந்திய அடையாளமாக மாற்றுவது என பல குறுகிய நோக்கு திட்டங்களை ஆர்.எஸ்.எஸ் கொண்டிருக்கிறது என்பதுதான் இன்று பிரச்சினை. அவர்கள் சுதந்திரப் போராட்ட த்தில் பங்கு கொண்டர்களா இல்லையா என்பதல்ல.

இந்தியாவில் மக்களாட்சி செழிக்க மாநில சுயாட்சி மலர வேண்டும்; அனைத்து மட்டங்களிலும் அதிகாரப் பரவலும், பகிர்வும் நிகழ வேண்டும்; சமூக நீதிப்பயணம் வர்ண ஏற்றத்தாழ்வை முற்றிலும் நீக்க வேண்டும். இந்த மக்களாட்சியின் வளர்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்-சின் இந்துத்துவ சிந்தனை நேரெதிரானது என்பதுதான் பிரச்சினை.

ஆர்.எஸ்.எஸ்-சின் பிரச்சினையும் அதன் உள்ளார்ந்த பிளவுதான். அவர்கள் உருவாக்க விரும்புவது முதலீட்டிய வளர்ச்சியில் உலக நாடுகளுடன் போட்டியிடும் நவீன தேசம்; அவர்கள் கருத்தியலை நிறைத்திருப்பது பழமைவாதம், மீட்புவாதம். அவர்களே இரட்டை வேடமாக இருந்து கொண்டு தாங்களும் குழம்பி, இந்த நாட்டையும் குழப்புவதுதான் அவர்களை மக்களாட்சிக்கு முரண்பட்டவர்களாக்குகிறது.

கட்டுரையாளர் குறிப்பு:  

Rajan Kurai How does RSS conflict with democratic politics?

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share