எஸ்.வி.ராஜதுரை
இந்துத்துவத்தின் பிதாமகன் வி.டி.சாவர்க்கரின் வீரச் செயல்களை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் படிக்க வேண்டியவை வரலாற்றாய்வாளர் ஏ.ஜி.நூரானி எழுதிய ‘Savarkar and Hindutva’ நூலும், ஃப்ரண்ட்லைன் ஏட்டின் மார்ச் 15-28, 2003 இதழில் அவர் எழுதிய ‘Savarkar and Gandhi’ என்ற கட்டுரையும் ஆகும்.
சாவர்க்கர் கொடுத்த கைத்துப்பாக்கி
1883 மே 23இல் மகாராஷ்டிராவின் நாசிக் நகருக்கு அருகே உள்ள பாகூர் என்ற கிராமத்தில் சித்வன் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்த வினாயக் தாமோதர் சாவர்க்கருக்கு ( வி.டி.சாவர்க்கர்), கணேஷ் சாவர்க்கர், நாராயண் சாவர்க்கர் என்ற இரு சகோதரர்கள். கல்லூரிப் படிப்பின்போது ‘அபினவ் பாரத்’ என்னும் இரகசிய இயக்கத்தில் தீவிரப் பங்கேற்ற விடி.சாவர்க்கர், இலண்டனில் சட்டம் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றார். அங்கு பல்வேறு இந்திய தேசியவாதிகளுடன் தொடர்புகொண்டிருந்த அவர், 1909ல் சர் கர்ஸன் வைலி என்னும் ஆங்கிலேய அதிகாரியைச் சுட்டுக் கொல்லும்படி மதன்லால் திங்ரா என்ற இந்திய தேசியவாதியைத் தூண்டிவிட்டார். அந்த ஆண்டு இறுதியில் நாசிக் மாவட்ட ஆட்சியராகவும் மாவட்ட நீதிபதியாகவும் இருந்த எ.எம்.டி.ஜாக்ஸனைச் சுட்டுக்கொன்றவனுக்குக் கைத்துப்பாக்கியைக் கொடுத்து உதவினார்.

இந்து மகாசபைத் தலைவராக இருந்த எம்.ஆர்.ஜெயகர் உட்படப் பல்வேறு தரப்பினர் ஜாக்ஸன், இந்திய மக்கள் மீது அனுதாபமும் அன்பும், இந்திய அறிவுத் துறையில் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டிருந்த நல்ல மனிதர் என்றே கருதினர்.
அந்தமான் சிறையில்…
தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வி.டி.சாவர்க்கரின் மூத்த சகோதரர் கணேஷ், ஆயுள் தண்டனைக் கைதியாக அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டார். ‘அறிவிக்கப்பட்ட குற்றவாளி’யாக இருந்த வி.டி.சாவர்க்கர் சரணடைய விரும்பினார். இலண்டனில் 1910இல் கைது செய்யப்பட்ட அவர்மீது கொலைக் குற்ற வழக்கும் சதிக் குற்ற வழக்கும் சாட்டப்பட்டிருந்தன. இந்தியாவில் விசாரணை செய்யப்படுவதற்காக அவர் எஸ்.எஸ்.மோரியா என்னும் கப்பலில் ஏற்றப்பட்டார். அந்தக் கப்பல் பிரான்ஸின் மார்ஸேய்ஸ் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்த போது, கப்பல் சாளரமொன்றின் வழியாகத் தப்பியோடிய அவர், பிரெஞ்சு மண்ணில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டார். இரண்டு கொலைகளுக்குமாகச் சேர்த்து 50ஆண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட அவர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நிகழ்வுகளின் காரணமாகவே அவர் ‘வீர் (வீர) சாவர்க்கர் என்றழைக்கப்படலானார்.
அந்தமானின் தலைநகர் போர்ட் ப்ளேயரில் இருந்த அந்தச் சிறை உலகிலேயே மிகக் கொடிய சிறைகளிலொன்று. ஒவ்வொரு கைதிக்கும் தனித்தனி ‘செல்கள்’, வேலை செய்யும்போதுதான் சிறையில் கைதிகள் ஒருவரையொருவர் பார்க்க முடியும். கடிதப் போக்குவரத்துகளுக்கும்கூட கடுமையான தணிக்கை முறை. அந்தமானின் தட்பவெட்ப நிலையோ கொடூரமானது.
இதன் காரணமாக எவ்வளவு உறுதி நெஞ்சம் படைத்தவர்களாக இருந்தாலும், அவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுப் போவது இயல்பானதாக இருந்தது. பொது வாழ்க்கையில் அர்ப்பணிப்பு கொண்டிருந்தவர்களுக்கும் குடும்ப உறவுகள், பாசம் ஆகியன இருந்ததாலும் உடல்நலக் குறைவின் காரணமாகவும் பல ஆண்டுச் சிறைவாசத்திற்குப் பிறகு, தண்டனைக் குறைப்பு கேட்டோ, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமாறோ, தங்களை விடுதலை செய்யுமாறோ பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்துக்குக் கருணை மனு அனுப்பிக் கொண்டிருந்ததை யாரும் குற்றம் என்றோ, சரணாகதி என்றோ சொல்ல மாட்டார்கள் அரசியலை முற்றாகத் துறக்க வேண்டும் என்று பிரிட்டிஷார் விதித்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டிருந்தாலொழிய.
எடுத்துக்காட்டாக, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு அப்போது பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பர்மாவின் மாண்டெலெ நகரத்தில் இருந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த (அங்கிருந்த நிலைமைகளும் கிட்டத்தட்ட அந்தமான் சிறைச்சாலை நிலைமை போலத்தான் இருந்தன) பாலகங்காதர திலகர் 1912 பிப்ரவரி 12, ஆகஸ்ட் 5 ஆகிய நாட்களில் இரு கருணை மனுக்களை அனுப்பினார். அதில் அவர், தாம் ஏற்கெனவே தண்டனைக் காலத்தில் மூன்றில் இரு பகுதியைக் கழித்துவிட்டதாலும், தீராத நீரிழிவு நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதாலும், குடும்ப உறுப்பினரொருவர் இறந்து போய் விட்டதாலும் தமக்கு மன்னிப்போ, தண்டனைக் குறைப்போ செய்யும்படி விண்ணப்பித்திருந்தார். ஆனால், விடுதலை செய்யப்பட்டால் அரசியலிலிருந்து விலகிவிடுவதாகவோ, பிரிட்டிஷார் விதிக்கும் எந்தவொரு நிபந்தனையையும் ஏற்றுக் கொள்வதாகவோ அவர் ஒருபோதும் கூறவில்லை. அப்போது அவருக்கு வயது 57.

சாவர்க்கரின் கருணை மனு
ஆனால், நமது வீர சாவர்க்கரோ, 1911 ஜூலை 4இல் அந்தமான் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஓராண்டுக் காலம் கழிவதற்கு முன்பேயே உடல் நலம் குன்றாமல் இருந்த போதே தம்மை விடுதலை செய்யும்படி பிரிட்டிஷ் அதிகாரிக்குக் கருணை மனு அனுப்புகிறார். அப்போது அவருக்கு வயது 27. பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலின் நிர்வாகக் கவுன்ஸிலில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்றிருந்த ரெஜினால்ட் கிராட்டோக் என்பவருக்கு 1913 நவம்பர் 24இல் அனுப்பிய இரண்டாவது கருணை மனுவில் மன்றாடுகிறார்: “ … 1911இல் நான் அனுப்பிய கருணை மனுவை அன்புடன் பரிசீலிக்குமாறும், இந்திய அரசாங்கத்துக்கு அதனை அனுப்பிவைக்க இசைவு தருமாறும் மாண்புமிக்க தங்களுக்கு நினைவூட்டுகிறேன். இந்திய அரசியலில் அண்மையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியையும் அரசாங்கத்தின் விட்டுக்கொடுப்புக் கொள்கையும் மீண்டுமொரு அரசியல் சட்ட வகைப்பட்ட மார்க்கத்தைத் ( மாண்டேகு – செம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தம் – எஸ்.வி.ஆர்) திறந்துவிட்டுள்ளது.1906-1907இல் நிலவிய கொந்தளிப்பான, நம்பிக்கை தராத சூழ்நிலைமை (வங்கப் பிரிவினையால் ஏற்பட்ட நிலைமை – எஸ்.வி,ஆர்) எங்களை சமாதானம், முன்னேற்றம் என்ற பாதையில் செல்ல முடியாமல் வஞ்சித்துவிட்டது.
இந்தியா, மனிதகுலம் ஆகியவற்றின் நன்மையைக் கருத்தில் கொண்டுள்ள எவரும் இனி கண்மூடித்தனமாக அந்தப் பாதையில் அடி எடுத்து வைக்கமாட்டார். எனவே பல்வகைகளிலும் நல்லெண்ணமும் கருணையும் கொண்ட அரசாங்கம் என்னை விடுதலை செய்யுமானால், அரசியல் சட்டவகையான முன்னேற்றத்திற்கும் ஆங்கிலேய அரசாங்க விசுவாசத்திற்கும் மிக உறுதியான ஆதரவாளனாக இருப்பேன். இந்த விசுவாசம்தான் முன்னேற்றத்துக்கான நிபந்தனை. மேலும், அரசியல்சட்டவகையான மார்க்கத்துக்கு நான் மாறியுள்ளது இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஒருகாலத்தில் என்னைத் தங்கள் வழிகாட்டியாகப் பார்த்துவந்த, வழிதவறிப் போன இளைஞர்களை மீட்டுக் கொண்டு வரும். எந்த வகையில் நான் அரசாங்கத்துக்குப் பணிபுரிய வேண்டும் என்று அது விரும்புகிறதோ அதற்குத் தகுந்தபடி நான் பணிபுரிவேன். ஏனெனில் என் மனமாற்றம் எப்படி உணர்வுபூர்வமானதாக உள்ளதோ அதேபோல என் எதிர்கால நடத்தையும் இருக்கும் என்று நம்புகிறேன். என்னைச் சிறையில் வைத்திருப்பதன் மூலம் பெறப்படுவது, என்னை வெளியில் விடுவதால் கிடைப்பதை ஒப்பிடுகையில் ஒன்றுமேயில்லை. வலிமையுடையவரே கருணையுடையவராக இருக்க முடியும். எனவே பாதை தவறிப்போன மகன், அரசாங்கம் என்ற பெற்றோர்களின் கதவுக்குத் திரும்பிவராமல் வேறு எங்கு செல்வான்? இந்த விஷயங்களை மாண்புமிக்க தாங்கள் அன்புடன் கருத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்”.
ஆக, ‘இந்தியாவின் சுதந்திரப் போர்’ நூலில், இந்திய சுதேசி மன்னர்களின், இந்துக்களின் சுவீகார உரிமையைப் பறித்த பிரிட்டிஷரைக் கடுமையாக சாடிய அதே சாவர்க்கர்தான் இங்கு, தம்மைத் தத்துப் பிள்ளையாக ஏற்றுக் கொள்ளும்படி அவர்களிடம் மன்றாடுவதுடன், தம்மை அதுவரை பின்பற்றி வந்த இளைஞர்களை பிரிட்டிஷ் ஆதரவாளர்களாக மாற்றும் பணியை ஏற்றுக் கொள்ளவும் விரும்புகிறார்.
ஆங்கில அரசுக்கு சாவர்க்கர் அளித்த உறுதிமொழி
1923இல் அந்தமானிலிருந்து இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டு, முதலில் மகாராஷ்டிராவிலுள்ள இரத்தினகிரியிலும் பின்னர் ஏரவாடாவிலும் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கர் தமது விடுதலைக்காகக் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் முயற்சி செய்தார். “அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் ஐந்தாண்டுக்காலம் எவ்வகையான அரசியல் நடவடிக்கைகளிலும் இரகசியமாகவோ வெளிப்படையாகவோ ஈடுபடப்போவதில்லை” என்றும், ” அந்த ஐந்தாண்டுக் காலத்துக்குப் பிறகும் அரசாங்கம் விரும்பினால் இந்தக் கட்டுப்பாட்டைப் புதுப்பித்துக் கொள்ளலாம்” என்றும் எழுத்துமூலம் சாவர்க்கர் கொடுத்த உறுதிமொழியைப் பதிவு செய்து கொண்ட பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம், 1924இல் கீழ்க்காணும் நிபந்தனைகளுடன் அவரை ஏரவாடா சிறையிலிருந்து விடுதலை செய்தது 1.அரசாங்க அல்லது மாவட்ட நீதிபதியின் அனுமதியின்றி இரத்தினகிரி மாவட்டத்தை விட்டு அவர் எங்கும் செல்லக்கூடாது 2. அரசாங்கத்தின் ஒப்புதலின்றி ஐந்தாண்டுக் காலத்திற்கு எவ்வித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. இந்தக் காலக்கெடுவை அரசாங்கம் விரும்பினால் தொடர்ந்து நீட்டிக்கலாம்”.

நான்காவது கடிதம்
ஆனால், வெளியே வந்த அவர் சும்மா இருக்கவில்லை. இரத்தினகிரியில் அவரைச் சந்தித்து அவரது ஆதரவைப் பெற்றுத்தான் 1925இல் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பை டாக்டர் ஹெட்கெவர் நிறுவினார். அந்த ஆண்டில்தான் சாவர்க்கர் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்துக்கு நான்காவது முறையாக மன்னிப்புக் கடிதம் எழுதினார். அன்று வடமேற்கு எல்லை மாகாணத்தில் (இப்போது பாகிஸ்தான் பகுதி-எஸ்.வி.ஆர்.) வெடித்த வகுப்புக் கலவரம் தொடர்பாக புனேவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘மராத்தா’ என்னும் ஏட்டின் 1925 மார்ச் இதழில் முஸ்லிம் விரோத- இந்து வகுப்பு வெறிக் கட்டுரையொன்றை சாவர்க்கர் எழுதியிருந்தார். அதனைக் கண்டித்த அரசாங்கம், அவரது விடுதலையை மறுபரிசீலிக்க வேண்டிவரும் என்று சொன்னதுதான் தாமதம், 1925 ஏப்ரல் 6இல் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்துக்கு எழுதிய கடிதத்தில் தன்னிலை விளக்கம் கொடுக்கத் தமக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி எழுதினார்
என் கட்டுரையில் ‘சுயராஜ்யம் என்ற சொல் வருகிற இடம், மூன்றாம் பத்தியின் இறுதியில்தான், அந்தச் சொல் அங்கு குறிப்பிடப்படுவது, நானோ மற்றவர்களோ சுயராஜ்யம் என்பதைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்பதைக் காட்டவோ சுட்டவோ செய்வதில்லை என்பது தெளிவு. மாறாக, கிலாஃபத் இயக்கத்தைப் பற்றிய காந்தியின் மிகை மதிப்பீட்டையே அது குறிக்கிறது.
1925 மே 5இல் அரசாங்கம் அவருக்கு எழுதிய கடிதத்தில் மேற்சொன்ன விளக்கம் திருப்திகரமாக இல்லை என்று கூறியது. 1925 மே 9 அன்று பம்பாய் மாகாண உள்துறைத் துணைச் செயலாளருக்கு எழுதிய பதில் கடிதத்தில் சாவர்க்கர், 1925 மே 8ஆம் தேதிக்கு முன் தாம் எழுதிய கட்டுரைகளையும் ஆற்றிய உரைகளையும் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்றும், தம்மை விடுதலை செய்யும்போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டதாகவே அவை அமைந்திருப்பதாகப் பொருள் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
மற்றொரு கொலைக் குற்றத்துக்கும் சாவர்க்கர் உடந்தையாக இருந்திருப்பார் என்ற சந்தேகம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. அதாவது, 1931 ஜூலை 22 அன்று வாசுதேவ் பல்வந்த கோகாட்டெ என்ற மாணவன் அன்றைய பம்பாய் ஆளுநராக இருந்த ஹட்ஸன் என்பவரைக் கொலை செய்ய முயன்றான். ஆனால் அவனது குறி தவறியதால் குண்டுக் காயத்துடன் ஹட்ஸன் உயிர் தப்பினார். கோகாட்டெ பின்னர் இந்து மகா சபையால் மிகவும் போற்றப்பட்டான்.
அவருடைய வீரம் பிரிட்டிஷாரின் வெளியேற்றத்துக்குப் பின்பும் நீடித்தது. காந்தி கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட அவர், 1948 பிப்ரவரி 25இல் பம்பாய் நகரக் காவல் துறை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் கூறினார் “ நான் ஒருபோதும் வெறுப்பை ஊக்குவிக்கவோ, முகமதியர்கள் என்பதற்காக அவர்களை வெறுக்கும்படியோ, அவர்கள் மீது வன்முறை செயல்கள் புரியும்படியோ இந்துக்களை ஒருபோதும் தூண்டியதில்லை… எனக்கு இப்போது 65 வயதாகிறது. கடந்த மூன்றாண்டுகளாக நெஞ்சுவலி, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக அடிக்கடி படுத்த படுக்கையாக இருக்கிறேன். கடந்த ஆகஸ்ட் 15 அன்று நமது தேசியக் கொடியை ஏற்றுக்கொண்டு அதனை என் வீட்டில் ஏற்றிவைத்தேன். இது எனது ஆதரவாளர்கள் சிலருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது…எனவே சந்தேகம் அனைத்தையும் களையும் பொருட்டும் எனது கோரிக்கை மனுவிற்கு வலுச் சேர்க்கும் பொருட்டும், அரசாங்கம் விரும்புகிற எத்தனை காலத்துக்கும் வகுப்பு அல்லது அரசியல் சார்ந்த நடவடிக்கை எதிலும் பங்கேற்க மாட்டேன் என்ற உறுதி மொழியை இந்த நிபந்தனையுடன் எனக்கு விடுதலை வழங்கப்படுமேயானால் தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன்”.
கடைசி மன்னிப்புக் கடிதம்
அவரது கடைசி மன்னிப்புக் கடிதம், 1950 ஏப்ரல் 21 அன்று எழுதப்பட்டதாகும். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் காரணமாக 1937 முதல் நடந்து வந்த வகுப்புக் கலவரங்களின் போது அந்தந்த நாடுகளில் உள்ள சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்தியப் பிரதமர் நேருவும் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானும் 1950இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தை இந்து மகா சபா எதிர்த்ததால் நாட்டில் வகுப்புக் கலவரம் மூளும் அபாயம் இருப்பதாகக் கருதி மத்திய அரசாங்கம் (அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவர் வல்லபபாய் பட்டேல்) சாவர்க்கரையும் வேறு சில இந்து மகாசபைத் தலைவர்களையும் 1950 ஆண்டு இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது. 1950 ஏப்ரல் 21 அன்று பம்பாய் மாநில அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் அரசாங்கம் நிர்ணயிக்கிற எத்தனை காலத்திற்கும் நடப்பு அரசியலில் எவ்விதப் பங்கும் மேற்கொள்ளாமல் இருக்கப் போவதாகக் கூறிய சாவர்க்கர், “அரசியல் களத்திலிருந்து நான் விரைவில் ஓய்வு பெறப் போவது அனைவரும் அறிந்த விஷயம்” என்று கூறினார்.

சாவர்க்கரும் கோட்சேவும்
காந்தி கொலை வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, அந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சாவர்க்கர், கோட்சேவையும் பிறரையும் குற்றவாளிகள் என்றும் தமக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் நீதிமன்றத்தில் கூறிவந்தார். தன்னை அவர் ஒரு கிரிமினல் என்று கூறியதைவிட தனக்குப் பெரும் மன வேதனை ஏற்படுத்திய விசயம், நீதிமன்றத்தில் அவர் தன்னை அசட்டை செய்துவந்ததுதான் என்று கோட்சே கருதினான். சாவர்க்கரின் ஆதரவாளரும் வழக்குரைஞருமான இனாம்தார் என்பவர் எழுதினார்: “தத்தாத்ரெயாவின் (சாவர்க்கரின்) கையின் ஸ்பரிசம், அவருடைய பார்வை, அனுதாப வார்த்தை, குறைந்தபட்சம் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தன் மீது கருணைமிக்க பார்வை ஒருமுறைகூடக் கிடைக்காதா என்று எப்படியெல்லாம் கோட்சே ஏங்கிக் கொண்டிருந்தான்”.
திரைமறைவாக சதித்திட்டம் தீட்டுவது, இளைஞர்களை மூளைச்சலவை செய்வது, கொலை செய்யத் தூண்டுவது, குற்றம் வெளியே தெரிந்தால் கள்ளங்கபடமற்றவராக நடிப்பது, குற்றம் சாட்டப்பட்டாலோ தண்டிக்கப்பட்டாலோ மன்னிப்புக் கடிதம் எழுதுவது, தனது சகாக்களைக் கூட உதறித் தள்ளிவிடுவது – இதுதான் ‘வீர்’ சாவர்க்கர்.
அடுத்த கட்டுரையை நாளை பார்ப்போம்.
கட்டுரையாளர் குறிப்பு

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.