முகச் சுருக்கத்தை நீக்கி சருமம் பொலிவுடன் மாற இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணலாம்.
முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தற்போது பொதுவான பிரச்சனையாகவே மாறிவிட்டது. முகத்தில் சுருக்கம் ஏற்படுவதால் நமது முக அழகு பாதிக்கப்படுவதோடு, தன்னம்பிக்கையையும் குறைத்துவிடுகிறது. பெரும்பாலானோர் முக சுருக்கத்தை இயற்கையாக நீக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு எப்படி முக சுருக்கத்தை நீக்குவது என்பது குறித்து தெரியவில்லை. இனி அதற்காக நாம் கவலைப்படத் தேவையில்லை. வீட்டு வைத்திய முறையில் நாம் முக சுருக்கங்களை நீக்கி பொலிவான முகத்தைப் பெறலாம்.
இதற்கு உருளைக் கிழங்கு, எலுமிச்சை, பால் மற்றும் முல்தானி மட்டி ஆகியவற்றைப் நாம் பயன்படுத்தலாம். உருளைக் கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம் ஆகியவை உள்ளன. அவை சருமத்தை பிரகாசமாக்குகின்றன. எலுமிச்சையில் சருமத்தை வெளியேற்றும் அசிட்டிக் அமிலம் உள்ளது. பாலில் சருமத்தை ஈரப்பதமாக்கும் லாக்டிக் அமிலம் உள்ளது. மேலும் முல்தானி மட்டி சருமத்தை சுத்தப்படுத்தி பிரகாசமாக்குகிறது.
எப்படி செய்வது? முதலில், ஒரு உருளைக் கிழங்கை நன்கு கழுவி, தோலை உரித்து துருவிக் கொள்ள வேண்டும். துருவிய உருளைக்கிழங்கை சல்லடை பயன்படுத்தி பிழிந்து ஒரு பாத்திரத்தில் சாறு எடுக்க வேண்டும். அதில் அரை எலுமிச்சைப் பழ சாற்றை பிழிந்து விட வேண்டும். இதனுடன் இரண்டு தேக்கரண்டி பால் மற்றும் ஒரு டீஸ்பூன் முல்தானி மட்டி சேர்த்து ஒரு பேஸ்ட் போல தயாரிக்க வேண்டும். இப்போது நமக்கு முகத்தில் தடவுவதற்கான பேஸ்ட் போன்ற கலவை தயாராகிவிட்டது.
இதற்குப் பிறகு உங்கள் முகத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பின்னர், நாம் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை உங்கள் முகத்தில் ஒரு பிரஷ் மூலம் தடவுங்கள். அரை மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து, உங்கள் கைகளால் உங்கள் முகத்தை மெதுவாக மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
பின்னர், உங்கள் முகத்தில் சன்ஸ்கிரீன் தடவ வேண்டும். சன் ஸ்கிரீன் உங்களை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும். இவ்வாறு சில நாட்கள் இடைவெளி விட்டு செய்து வருவதன் மூலம் முக சுருக்கங்களை நீங்கும். சருமம் பிரகாசமாகும், ஈரப்பதமாக இருக்கும்.
