முடி வளர்ச்சிக்கு உதவும் மூன்று இலைகளைக் கொண்ட ஸ்பிரே தயாரிப்பது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்.
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை என்பது நமது உடல்நலனை மட்டுமல்லாமல், நமது சருமம் மற்றும் முடியிலும் மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது. கடைகளில் கிடைக்கும் ரசாயனங்கள் நிறைந்த பொருட்களை நாம் முடி வளர்ச்சிக்காக (Hair Growth) பயன்படுத்துகிறோம். ஆனால், இவை வெளியில் முடி வளர்ச்சி அளிப்பது போல இருந்தாலும் உள்ளிருந்து முடியை பலவீனப்படுத்துகின்றன.
அதே சமயம் இயற்கையாக நமக்கு கிடைக்கும் பொருட்களை வைத்தே நாம் முடியை ஆரோக்கியமாக பராமரிக்கலாம். இது முடியின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. அதாவது செம்பருத்தி, வேம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை பயன்படுத்தி நாம் இயற்கை முறையில் முடி வளர்ச்சிக்கு ஒரு ஸ்பிரேவை தயாரிக்கலாம்.
செம்பருத்தி, கறிவேப்பிலை, வேம்பு பயன்கள்:
செம்பருத்தி இலைகளில் (Hibiscus leaf) அமினோ அமிலங்கள் உள்ளன. இது உச்சந்தலை மற்றும் முடி வேர்களை ஆழமாக வளர்ப்பதோடு, முடியை வேரில் இருந்து வலுப்படுத்துகிறது. முடி உதிர்வதிலும் பயனுள்ளதாக இருக்கும்.
கறிவேப்பிலையில் ஆக்சிஜனேற்றிகள் (Oxidants) அதிகளவில் நிறைந்துள்ளன. இவை உச்சந்தையில் இருந்து இறந்த முடிகளின் நுண்ணறைகளை அகற்றி புதிய முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துகள் முடி முன்கூட்டியே நரைப்பதில் இருந்து பாதுகாக்கின்றன.
வேப்பிலை : வேப்பிலை என்பது பாக்டீரியா எதிர்ப்பு (Neem leaves antibacterial) பண்புகளைக் கொண்டுள்ளது. இது உச்சந்தலையை சுத்தப்படுத்தி பொடுகை நீக்கி, முடியின் வேர்களை பலப்படுத்துகிறது. இவற்றுடன் வெந்தயமும் முடிக்கு அருமருந்தாக உள்ளது. இவை முடி உதிர்வதை தடுப்பதுடன் தலை வறட்சியை நீக்குகிறது.
ஸ்பிரே தயாரிக்க தேவையான பொருட்கள் (ingredients) :
- 1 கிண்ணம் வேப்பிலை
- 1 கிண்ணம் செம்பருத்தி இலைகள்
- 1 கிண்ணம் கருவேப்பிலை
- சிறிதளவு வெந்தயம்
- 2 டம்ளர் தண்ணீர்
சாறு தயாரிப்பது எப்படி?
வேப்பிலை, கருவேப்பிலை, செம்பருத்தி இலைகளை நன்கு குழுவி தூசி, அழுக்கு நீக்கி சுத்தமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீரை உற்றி கழுவிய இலைகளை அதில் சேர்க்க வேண்டும். பிறகு வெந்தயத்தை (Fenugreek) சேர்க்க வேண்டும். தண்ணீர் பாதியாகக் குறையும் வரை அல்லது இலைகளின் சாயம் இறங்கும் வரை மிதமான வெப்பத்தில் கொதிக்க வைக்க வேண்டும்.
தண்ணீர் கருப்பாக மாறியவுடன் அடுப்பில் இருந்து தண்ணீரை இறக்கி ஆற விட வேண்டும். கருப்பாக உள்ள தண்ணீர் ஆறியவுடன் அதனை வடிகட்டி ஒரு ஸ்பிரே (Natural black color spray) பாட்டிலில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
எப்படி பயன்படுத்துவது?
தூங்கச் செல்லும் முன்பு உங்கள் தலைமுடியில் உச்சந்தலை முதல் வேர்கள் வரை ஸ்பிரேவை நன்றாக தெளித்து அப்ளை செய்ய வேண்டும். பிறகு 2 நிமிடங்கள் வரை கைகளால் நன்றாக மசாஜ் (Hair massage for growth) செய்ய வேண்டும். இரவு முழுவதும் அதனை அப்படியே விட்டுவிட்டு காலையில் தண்ணீர் அல்லது ஷாம்புவால் தலை குளிக்கவும். இதனை வாரத்தில் 3- 4 முறை செய்து வந்தால் ஒரு மாதத்தில் முடியின் அடர்த்தி மற்றும் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருப்பதை உணர்வீர்கள்.
