உலக குத்துச்சண்டை: சாதிக்குமா இந்தியா?

Published On:

| By Balaji

19-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஞாயிறு (ஆகஸ்ட் 27) அன்று நடைபெற்ற 49 கிலோ உடல் எடைப்பிரிவில் 2-வது சுற்று போட்டியில் இந்திய வீரர் அமித் பான்கல், 7-ம் நிலை வீரர் கார்லோஸ் குய்போவை (ஈகுவடார்) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த பந்தயத்தில் நேர்த்தியாக செயல்பட்ட அமித் பான்கல் 5-0 என்ற புள்ளி கணக்கில் கார்லோசை சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதியில் அமித் பான்கல், 2-ம் நிலை வீரரான ஹசன்பாய் டஸ்மடோவ்வை (உஸ்பெகிஸ்தான்) சந்திக்கிறார்.

56 கிலோ உடல் எடைப்பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீரர் கவுரவ் பிதுரி, உக்ரைன் வீரர் மைகோலா பட்சென்கோவுடன் மோதினார். இதில் கவுரவ் பிதுரி 4-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். காலிறுதியில் கவுரவ் பிதுரி, துனிசியா வீரர் பிலெல் ஹம்தியை எதிர்கொள்கிறார்.

ADVERTISEMENT

75 கிலோ உடல் எடைப்பிரிவில் 2-வது சுற்றில், 2011-ம் ஆண்டு உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரும், 3-ம் நிலை வீரருமான இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் யாரும் எதிர்பாராத வகையில் இங்கிலாந்தின் பெஞ்சமின் விட்டாகெரிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

91 கிலோ உடல் எடைப்பிரிவில் 2-வது சுற்றில், ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் சுமித் சங்வான், ஆஸ்திரேலிய வீரர் ஜாசன் வாட்லேவிடம் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார். விகாஸ் கிருஷ்ணன், சுமித் சங்வான் ஆகியோர் இந்த போட்டி தொடரில் பதக்கம் வெல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் 2-வது சுற்றிலேயே இருவரும் வெளியேறி இருப்பது இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ADVERTISEMENT

69 கிலோ உடல் எடைப்பிரிவில் 2-வது சுற்று பந்தயத்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரரான மனோஜ்குமார், 2013-ம் ஆண்டு உலக போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வெனிசுலா வீரர் கேப்ரியலிடம் தோல்வியைத் தழுவினார்.

தற்போது காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கும் இந்திய வீரர்களான அமித் பான்கல், கவுரவ் பிதுரி ஆகியோர் தொடர்ந்து வெற்றியைப் பதிவு செய்து பதக்கம் வெல்வார்களா என்பதை இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share