இந்தியாவில் கூட்டுறவு இயக்கம்:  வளர்ச்சியும் அதன் தாக்கமும்!

Published On:

| By Kavi

முனைவர். ச.குப்பன்

இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் என்பது பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்த கூட்டு நடவடிக்கை, சுயசார்பு, நிர்வாகத்தில் அனைவருக்கும் சமமான அதிகாரமளித்தல் ஆகியவற்றின் ஒரு வெற்றிக் கதையாகும்.

கடந்த 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அதன் துவக்க கட்டத்திலிருந்து தற்போதைய நிலை வரை இந்தியப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய உறுப்பாக இந்த கூட்டுறவு இயக்கமானது குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்து, பல்வேறு துறைகளில், குறிப்பாக ஊரகப் பகுதியின் வளர்ச்சியில் ஒரு அழியாத முத்திரையை பதித்து வருகின்றது. 

ADVERTISEMENT

ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்: இந்தியாவில் காலனித்துவ நாட்களிலிருந்து சுதந்திரத்திற்குப் பிந்தைய நாட்கள்வரை ஒரு பார்வை.

இந்தியாவில் முறையான கூட்டுறவு இயக்கத்தை 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காணலாம், இது வேளாண்மையின் இழப்புகளிலான துயரங்கள், பரவலான ஊரகப்பகுதியின் கடன் எனும் வலையால் சூழ்ந்த ஒரு காலகட்டமாகும். அவ்வாறான சூழலில் 1901ஆம் ஆண்டு ஏற்படுத்தபட்ட பஞ்ச ஆணையம் ஆனது, கடன் வழங்கிய சில தனி நபர்களால் வேளாண்மை செய்கின்ற பெரும்பாண்மையான ஏழை எளியவர்கள் சுரண்டப்படுவதை எதிர்த்துப் போராட “பரஸ்பர கடன் சங்கங்களை (Mutual Credit Associations)” நிறுவுகைசெய்திடுமாறு பரிந்துரைத்தது.

ADVERTISEMENT

இப்பரிந்துரையானது 1904ஆம் ஆண்டு கூட்டுறவு கடன் சங்கச் சட்டத்தை இயற்ற வழிவகுத்தது, இந்த சட்டம் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு மட்டுமே என்றாலும், பொதுவான கூட்டுறவு சங்கங்களுக்கும் ஒரு சட்ட கட்டமைப்பை வழங்குவதற்கான முதன்முதலான சட்ட நடவடிக்கையாகும்.

1912 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் இந்த இயக்கம் மேலும் உத்வேகம் பெற்றது. இது கடன் அல்லாத கூட்டுறவு சங்கங்களையும் உள்ளடக்குமாறு அதன் நோக்கத்தை விரிவுபடுத்தியது. 1919ஆம் ஆண்டு இந்திய அரசின் கூட்டுறவு சங்க சட்டத்தைத் தொடர்ந்து, கூட்டுறவு ஆனது “மாநிலத்தின் செயற்பொருளாக (provincial subject)” மாற்றப்பட்டது.

ADVERTISEMENT

இம்மாற்றமானது மாநிலங்கள் ஆனவை  தனிப்பட்டவகையில் தங்களுக்கான சொந்த சட்டங்களை இயற்ற அனுமதித்தது. 1925ஆம் ஆண்டு பம்பாய் கூட்டுறவு சங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதுவே இந்தியாவில் கூட்டுறவிற்கான முதல் மாநிலச் சட்டமாகும், இது “ஒருவருக்கு ஒரு வாக்கு” என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியது. அதாவது கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கு என்ற அடிப்படை உரிமையை அதன் உறுப்பினர்களுக்கு வழங்கியது.

இந்தியா சுதந்திரம் பெற்றப்பிறகு, கூட்டுறவு இயக்கம் நம்முடைய நாட்டினைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு முக்கிய உத்தியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, கூட்டுறவுகளின் வலுவான ஆதரவாளராக இருந்தார், அவற்றை மக்களாட்சியின் பொருளாதார திட்டமிடலின் கருவிகளாகக் கருதினார்.

முதல் ஐந்தாண்டுத் திட்டம் (1951-56)ஆனது  பொருளாதார, அரசியல் வளர்ச்சியில் கூட்டுறசங்கங்களின், ஊரக பஞ்சாயத்துகளின் பங்கை வலியுறுத்தியது. இந்தக் காலகட்டத்தில் 1963ஆம் ஆண்டில் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (NCDC), 1982 ஆம் ஆண்டில் தேசிய வேளாண்மை, கிராமப்புற மேம்பாட்டு வங்கி (NABARD) போன்ற முக்கியமான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன, அவை கூட்டுறவு சங்கங்களுக்கு குறிப்பிடத்தக்க நிதியையும் மேம்பாட்டு ஆதரவையும் வழங்கிவருகின்றன.

கூட்டுறவுத் துறையின் வளர்ச்சி

பல பத்தாண்டுகளாக, இந்தியாவில் கூட்டுறவுத் துறையானது அதிவேகமாக வளர்ந்து, பரந்த அளவிலான செயல்பாடுகளாக பன்முகப் படுத்தப் பட்டு வருகின்றது.அதன்தொடர்ச்சியாக  இன்று, பல்வேறு துறைகளில் மில்லியன் கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய கூட்டுறவு இயக்கங்களில் ஒன்றாக இந்தியா பெருமை கொள்கின்ற அளவிற்கு வளர்ந்துள்ளது.

வேளாண் கடன்: வேளாண்மை செய்பவர்கள் தொய்வில்லாாமல் வேளாண்மை செய்வதற்கு நிறுவனக் கடன் வழங்குவதில் கூட்டுறவு சங்கங்கள் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றன, அவர்களை கந்து வட்டிக்காரர்களின் பிடியிலிருந்து பாதுகாக்கின்றன. குறுகிய கால, நீண்ட கால கூட்டுறவு கடன் கட்டமைப்புகள், அவற்றின் பல அடுக்கு அமைப்புகளுடன், வேளாண் மக்களின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மிகமுக்கிய பங்கு வகித்துவருகின்றன.

பால் உற்பத்தியும், சந்தைப்படுத்தலும்: “வெண்மைப் புரட்சி” என்பது கூட்டுறவு இயக்கத்தின் வெற்றிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் எனும் கூட்டமைப்பு (GCMMF), ஆனது மிகவும் பிரபலமான அமுல்(AMUL) என அழைக்கப்படுகிறது, இது ஒரு கூட்டுறவு நிறுவனமாகும் இக்கூட்டுறவு நிறுவனம் மில்லியன் கணக்கான சிறிய அளவிலான பால் உற்பத்தியாளர்களுக்கும் நியாயமான சந்தையையும் பாலை பதப்படுத்துகின்ற வலுவான உள்கட்டமைப்பையும் வழங்குவதன் மூலம் அவர்களுக்கு எவ்வாறு அதிகாரம் அளிக்க முடியும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

சர்க்கரை, உரங்கள்: கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் பல்வேறு மாநிலங்களில் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வருகின்றன, அவை அமைந்திருக்கின்ற பகுதிகளில் போதுமான வேலை வாய்ப்பையும் நல்ல பணப்புழக்கத்திற்கான செல்வவளங்களையும் உருவாக்குகின்றன. இதேபோன்று, இந்திய விவசாயிகளின் உர கூட்டுறவு (IFFCO) போன்ற கூட்டுறவு நிறுவனங்கள், வேளாண்மை செய்பவர்களுக்கு மலிவு விலையில் உயர்தர உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதில் மிகமுக்கிய பங்கு வகித்து வருகின்றன.

வீட்டுவசதி, நுகர்வோர் பொருட்கள்: இந்த கூட்டுறவு இயக்கம் நகர்ப்புறம், பகுதியளவிலான நகர்ப்புறம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் விரிவடைந்து வருகின்றது, அதன் தொடர்ச்சியாக கூட்டுறவு வீட்டுவசதி நிறுவனங்கள் மலிவு விலையில் குடியிருப்புகளை அதன்உறுப்பினர்களுக்கு வழங்குகின்றன. நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்கள் சரியான விலையில் அத்தியாவசிய பொருட்களை அதன் உறுப்பினர்களுக்கு வழங்குகின்றன.

சமீபத்திய முயற்சிகள்: சமீபத்திய ஆண்டுகளில், 2021 ஆம் ஆண்டில் இவ்வாறான கூட்டுறவு நிறுவனங்களை கையாளுவதற்காகவே தனியாக கூட்டுறவு அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டதன் மூலம், இந்தத் துறைக்கான தனது உறுதிப்பாட்டை மத்திய அரசாங்கம் மேலும் வலுப்படுத்தியுள்ளது. இது கூட்டுறவு சங்கங்களுக்கான வலுவான நிர்வாகம், சட்டம், கொள்கை கட்டமைப்பு ஆகியவற்றினை உருவாக்குதல், பல மாநில கூட்டுறவு சங்கங்களை ஊக்குவித்தல், அரசாங்கத்தின் மின் சந்தை (GeM) போன்ற தளங்களின் மூலம் கூட்டுறவு சங்கங்களை எண்ணிம பொருளாதாரத்தில் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு முயற்சிகளைத் தொடங்க வழிவகுத்துவருகின்றது.

கூட்டுறவு இயக்கத்தின் தாக்கம்

இந்தியாவின் சமூக-பொருளாதாரத்தில் கூட்டுறவுசங்கங்களின் தாக்கம் ஆனது பன்முகத்தன்மை கொண்டது, மிகவும்ஆழமானது.

நிதி உள்ளடக்கம்: கடன், பிற நிதி சேவைகள் ஆகியவற்றினை அணுகுவதன் மூலம், குறிப்பாக ஊரகப்பகுதிகளில், கூட்டுறவு சங்கங்கள் நிதி உள்ளடக்கத்தின் மிகமுக்கிய இயக்கியாக இருந்து வருகின்றன. அவை சிறு விவசாயிகள், தொழில் முனைவோர்கள் ஆகியோர் தமக்குத் தேவையான மூலதனத்தை எளிதாக அணுகவும் அவர்களின் வாழ்வாதாரங்களில் முதலீடு செய்யவும் உதவிவருகின்றன.

வறுமை ஒழிப்பும் சிற்றூர்களின் மேம்பாடும்: கூட்டுறவு சங்கங்கள் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரத்தை அளித்துவருகின்றன. அதனோடு  சிற்றூர்களின் வளர்ச்சியில் மிகமுக்கிய பங்கு வகித்துவருகின்றன. சுயசார்பினையும் கூட்டு நடவடிக்கைகளையும் ஊக்குவிப்பதன் மூலம், அவை வறுமையைக் குறைக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், சிற்றூர்களில் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவிவருகின்றன.

பொருளாதாரசுதந்திரம் அதிகாரப் பரவலாக்கம்: மக்களாட்சியின் கட்டுப்பாடு, ஒரு உறுப்பினர், ஒரு வாக்கு என்ற கொள்கைகளின் அடிப்படையில், கூட்டுறவு சங்கங்கள் பொருளாதார சக்தியைப் பொதுமக்களின் அனைவருக்கும் ஆனதாக பரவலாக்குகின்றன. அவை குரலற்றவர்களுக்காக குரல் கொடுக்கின்றன, உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாக ஒன்றிணைந்து முடிவெடுப்பதில் பங்கேற்க அனுமதிக்கின்றன, கூட்டுறவு நிறுவனத்தின் நன்மைகள் அனைத்தும் அதன் உறுப்பினர்களுக்கு சமமாக பகிர்ந்து கொள்வதை உறுதி செய்கின்றன.

சமூக மாற்றம்: பொருளாதார நன்மைகளுக்கு அப்பால், கூட்டுற சங்கங்கள் ஆனவை சமூக ஒற்றுமை , ஒருவருக் கொருவர் உதவிசெய்து கொள்ளுதல் ஆகிய ஒரு ஒருங்கிணைந்த குழுவான உணர்வை வளர்த்து வருகின்றன. பெண்கள் தலைமையிலான கூட்டுறவு சங்கங்கள் உருவாக்குவதை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் பாலின சமத்துவத்தை ஊக்குவித்துவருகின்றன, மேலும் பள்ளிகள், மருத்துவ மனைகள் ஆகியவற்றினை அமைப்பது போன்ற சமூக நல நடவடிக்கைகளுக்கும் பங்களித்து வருகின்றன.

முடிவாக இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியுள்ள நிலையில், அரசியல் தலையீடு, சில சந்தர்ப்பங்களில் திறன்மிகு தொழில்முறை மேலாண்மை இல்லாமை( lack of professional management), நிதி சுயாட்சிக்கான தேவை போன்ற சவால்களையும் எதிர்கொள்கிறது. இருப்பினும், அரசாங்கத்தின் கவனம், கூட்டுறவு மாதிரியின் உள்ளார்ந்த மீள்தன்மையுடன், இந்த இயக்கம் அனைத்தையும் உள்ளடக்கிய, வளமான இந்தியாவை உருவாக்குவதில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கத் தயாராக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share