ஆளுனரை அரசியல் கருவியாகப் பயன்படுத்துவது அரசமைப்பை சீர்குலைக்கத்தானா?

Published On:

| By Minnambalam Desk

ராஜன் குறை Governors who disrupt the constitution

உச்சநீதிமன்றத்தைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்கள் ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் பாஜக கட்சியினர். இந்த தாக்குதல்களை தொடங்கி வைத்தவர்களில் ஒருவர் குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீஷ் தங்கர். தாக்குதல்களுக்குக் காரணம் தமிழ்நாடு அரசு ஆளுனருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த மாதம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு. அது மாநில சட்டமன்றம் நிறைவேற்றும் சட்டங்களை ஆளுனரோ, அல்லது அவர் அந்த சட்டத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினால், குடியரசுத் தலைவரோ கால வரம்பின்றி நிறுத்தி வைக்கும் சாத்தியத்தை நீக்கி, குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிவெடுக்க வேண்டுமென சட்ட விதிகளை உருவாக்கியுள்ளது. 

உச்சநீதிமன்றம் குடியரசுத் தலைவரின் அதிகாரத்தையே வரையறை செய்ய முடியுமா என்று பொங்குகிறார்கள் பாஜக-வினர். மேலோட்டமாகப் பார்த்தால் குடியரசுத் தலைவர் பதவியின் மாண்பைக் குறித்து அவர்கள் கவலைப்படுவதாகத் தோன்றினாலும், உண்மையில் பிரச்சினை உச்சநீதிமன்றத்திற்கும், குடியரசுத் தலைவருக்கும் உள்ள அதிகார சமன்பாடு என்பதல்ல: ஒன்றிய அரசாங்கத்திற்கும், மாநில அரசிற்கும் உள்ள அதிகாரப் பகிர்வுதான். 

ஒரு மக்களாட்சிக் குடியரசிற்கான அரசமைப்பை உருவாக்குவது சுலபமான காரியமல்ல. பாபா சாகேப் அம்பேத்கரின் அறிவாற்றலாலும், கடும் உழைப்பாலும், அரசமைப்பு அவையில் பங்கேற்ற, சட்ட வரைவுக்குழுவில் பங்கேற்ற பலரது தன்னலமற்ற பங்களிப்பாலும், விவாதங்களின் செறிவாலும் உருவானது இந்திய அரசமைப்பு சட்டம். எல்லா வகைகளிலும் முழுமையான ஒரு சட்டத்தை உருவாக்க முடியாது என்பதால் காலம் தோறும் பல்வேறு திருத்தங்களும் செய்யப்பட்டு ஒரு உயிர்ப்புமிக்க அரசமைப்பை சாத்தியமாக்குவதுதான் இந்திய அரசமைப்புச் சட்டம். 

இந்த சட்டத்தினை முதலிலிருந்தே எதிர்த்து வருபவர்கள்தான் சங்கிகள் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்துத்துவவாதிகள். இந்திய அரசமைப்பு சட்டத்தில் அவர்களுக்கு பிடிக்காத முற்போக்கு அம்சங்கள் பல இருந்தாலும், ஒரு முக்கியமான பிரச்சினை மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களும், மொழிவாரி மாநிலங்களும்தான் எனலாம். இந்தியா முழுவதும் ஒரே அரசின் கீழ் இருக்க வேண்டும், சமஸ்கிருதமே ஆட்சி மற்றும் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் பல கருத்துக்களை ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர் (1906-1973) அறுபதுகளில் கூட கூறியுள்ளார். 

குறிப்பாக தமிழ்நாடு இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றை இணைப்பு மொழியாக ஏற்காதது, பார்ப்பனீய பண்பாட்டினை ஆரிய பண்பாடு என்று சொல்லி அதற்கு எதிராக பார்ப்பனரல்லாதோரின் திராவிட பண்பாட்டை வலியுறுத்துவது ஆகியவை இந்துத்துவ கருத்தியலுக்கு முற்றிலும் எதிரானவை. அதனால்தான் இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு அவர்களுக்குக் கோபத்தை வரவழைக்கிறது. எனவே, குடியரசுத் தலைவரின் உரிமைகளைக் காக்க வேண்டும் என்ற பெயரில் மாநில அரசின் உரிமைகளை, அதற்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள மக்களாட்சியின் இறையாண்மையை தாக்குதலுக்கு உள்ளாக்குகிறார்கள். இதனை பகுத்தறிந்து புரிந்துகொள்வது அவசியம். 

குடியரசுத் தலைவர் பதவியின் நோக்கம் என்ன? 

மக்களாட்சிக் குடியரசில் இறையாண்மை இரண்டு விதமாக பகிரப்படுகிறது என்பது முக்கியமானது. கிடைக்கோட்டு முறையில் மூன்றாகவும், குத்துக்கோட்டு முறையில் மூன்றாகவும் பகிரப்படுகிறது. கிடைக்கோட்டு முறையில் உள்ளூராட்சி, மாநில அரசு, ஒன்றிய அரசு என மூன்று தளங்களில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. குத்துக்கோடுகளாக நிர்வாகம் (exective), நாடாளுமன்றம்/சட்டமன்றம் (legislature), நீதிமன்றம் (judiciary) என மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. இதில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறும் கட்சியினர் நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் அமைச்சர்களாக பொறுப்பேற்பார்கள். அவர்கள் கீழ் பணியாற்றும் நிர்வாகம் அரசாங்கம் (government) என்றும் அந்த கட்சி ஆட்சி (rule) செய்கிறது என்றும் கூறுகிறோம். நீதியமைப்பு என்பது தன்னாட்சி பெற்றதாக, அரசின் செயல்பாடுகளையும், இயற்றும் சட்டங்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் அதிகாரத்துடன் இயங்கவல்லதாக அரசமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. Governors who disrupt the constitution

இவ்வாறு பகிரப்பட்டுள்ள இறையாண்மையின் காரணமாக ஒட்டுமொத்த குடியரசின் குறியீட்டுத் தலைமையாக குடியரசுத் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. இது இங்கிலாந்தில் மன்னர் வகிக்கும் குறியீட்டு தலைமை போன்றது. அரசமைப்பின் உருவகத் தலைமை (constitutional figurehead) என்று கூறுவார்கள். இவர்கள் ஒன்றிய அரசில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அமைச்சரவை நாடாளுமன்றத்தில் எந்த சட்டத்தை இயற்றி அனுப்பினாலும் ஒப்புதல் அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் மறுபரிசீலனை செய்யக் கூறலாம். மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் ஒப்புதல் அளிக்கத்தான் வேண்டும். மேலும் எந்த ஒரு விஷயத்திலும் குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவு என்பது அமைச்சரவை கூறும் ஆலோசனைப்படித்தான் இருக்க வேண்டும். தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. அரசாட்சியை விமர்சித்து அரசியல் கருத்துக்களைப் பேச முடியாது. அவருக்கு ஏதேனும் அதிருப்தி இருந்தால் பிரதமரை வரச்சொல்லி அவரிடம் கூறலாமே தவிர, பொதுவெளியில் பேசக் கூடாது. Governors who disrupt the constitution

ஒன்றிய அரசு நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் அனுமதி அளிக்க தாமதம் செய்யலாமா, அனுமதி அளிக்காமலேயே காலம் கடத்தி அதனை மரணிக்கச் செய்யலாமா என்றால், அதற்கு சட்டத்தில் தடையிருக்கவில்லை. ஆனால் அப்படிச் செய்வது மிகப்பெரிய அரசமைப்பு நெருக்கடியை உருவாக்கிவிடும். பெரும்பாலும் ஒன்றியத்தில் ஆளும் கட்சியின் ஆதரவுடன்தான் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப் படுவார் என்பதால், இது போல அமைச்சரவையின், பிரதமரின் விருப்பத்திற்கு மாறாக குடியரசுத் தலைவர் செயல்படுவது நடைபெறாது எனலாம். பிரச்சினை எங்கே வருகிறது என்றால் மாநில அரசு சட்டமன்றத்தின் மூலம் இயற்றும் சட்டங்களுக்குத்தான். Governors who disrupt the constitution

ஆளுனர் பதவியின் நோக்கம் என்ன? Governors who disrupt the constitution

ஒன்றிய அரசாங்கத்திற்குக் குடியரசுத் தலைவர் உருவகத் தலைமையாக இருப்பது போலவே, மாநில அரசிற்கான உருவகத் தலைவர்தான் ஆளுனர். ஆனால் இவரை நியமிப்பது குடியரசுத் தலைவர்; அவர் தன்னிச்சையாக நியமிக்க முடியாது என்பதால், ஒன்றிய அமைச்சரவை கூறுபவரைத்தான் நியமிப்பார். இதனால் ஆளுனர் என்பவர் ஒன்றிய ஆளும் கட்சியின் பிரதிநிதியாக செயல்படும் வாய்ப்பு உருவாகிவிடுகிறது. 

இன்னும் தெளிவாகச் சொன்னால் குடியரசுத் தலைவர் தேர்தலை ஒன்றிய ஆளும் கட்சியின் பெரும்பான்மை பலமே தீர்மானிக்கும் என்பதால், அவருடன் ஒன்றிய அரசிற்கு முரண்பாடுகள் வர வாய்ப்பில்லை. ஆனால் ஆளுனர் தேர்வில் மாநில ஆளும் கட்சிக்கு எந்த பங்கும் இல்லை என்பதால், அதனுடன் முற்றிலும் முரண்பட்டு செயல்படும் ஆளுனர் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட முடியும். ஒன்றியத்தில் ஆளும் கட்சியுடன் கருத்தியலில் முரண்படும் மாநில ஆளும் கட்சிக்கு, ஒன்றிய ஆளும் கட்சியால் நியமிக்கப்படும் ஆளுனர் பலவித இடையூறுகளை அவர் அதிகாரத்தைப் பயன்படுத்திச் செய்ய முடியும். இது ஒன்றிய – மாநில அரசுகளுக்குள் இருக்கவேண்டிய அரசமைப்பு சட்டப்படியான இணையுறவை பெரிதும் சீர்குலைக்கும் வாய்ப்புகளை வழங்குகிறது. Governors who disrupt the constitution

மாநில அரசின் உருவகத் தலைவராக இருக்க வேண்டிய ஆளுனர் என்னவெல்லாம் செய்யலாம், செய்யக்கூடாது என்றெல்லாம் விரிவாகக் கூறப்படவில்லை. ஏனெனில் அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்ட போது, இந்த அளவு இந்த உருவகப் பதவி அரசியல் மயமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படவில்லை. Governors who disrupt the constitution

உள்ளபடி சொன்னால், ஆளுனருக்கு வழங்கப்பட்டிருந்த அதிகபட்ச அதிகாரம், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு, அரசாட்சி சரியில்லையென்று அறிக்கையளித்து மாநில அரசினை, சட்டமன்றத்தை குடியரசுத் தலைவர் கலைக்கச் செய்வது. இந்த அதிகாரம் எழுபது, எண்பதுகளில் அரசியல் நோக்கத்துடன் ஒன்றிய ஆளும் கட்சிகளால் பயன்படுத்தப்படத் துவங்கியதால், உச்சநீதிமன்றம் இந்த அதிகாரத்தை எஸ்.ஆர்.பொம்மையால் தொடுக்கப்பட்ட வழக்கில் 1994-ஆம் ஆண்டு கடுமையாகக் கட்டுப்படுத்தியது. பல வரம்புகளை, நிபந்தனைகளை வகுத்தது. அப்போது யாரும் குடியரசுத் தலைவர் அதிகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடலாமா என்று விமர்சிக்கவில்லை.    

எஸ்.ஆர்.பொம்மை வழக்கிற்கு பின்னர் ஆளுனரை அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் அடுத்த முக்கியமான தீர்ப்பு ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் இந்த மாதம் வழக்கப்பட்டுள்ள தீர்ப்புதான் எனலாம். இந்த தீர்ப்பு ஆளுனருக்கும், அவர் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு சில சட்டங்களை அனுப்பினால் குடியரசுத் தலைவருக்கும், சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதித்துள்ளது. காலவரையின்றி சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுனரோ, குடியரசுத் தலைவரோ இருப்பது மக்களாட்சி விழுமியங்களுக்கு எதிரானது என திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இது மாநில அரசின் சட்டமியற்றும் உரிமைக்குக் கிடைத்துள்ள மிக முக்கியமான அங்கீகாரமாகும். இது பாஜக கட்சியினரை கோபப் படுத்தக் காரணம் ஆளுனர் ஆர்.என்.ரவி. Governors who disrupt the constitution

ஆளுனர் ஆர்.என்.ரவியின் அரசியல் செயல்பாடுகள்   

ஆளுனர் பதவியின் உருவகத்தலைமை என்ற பண்பை முற்றிலும் பாழ்படுத்திய ஆளுனர் என்று ஆர்.என்.ரவியைக் கூறலாம். அவர் பதவியேற்றதிலிருந்தே அவர் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவது, கருத்தியல் பிரசாரங்களில் ஈடுபடுவது என மாநில அரசின் கொள்கைகளுக்கு மாறான செயல்பாடுகளில் தொடர்ந்து இயங்கி வந்துள்ளார். இவ்வாறு செய்யக்கூடாது என்று இதுவரை எதுவும் சட்டமோ, தீர்ப்போ கூறவில்லை என்றாலும், அவ்வாறு ஒரு வரையறைக்கான தேவையை அவர் செயல்பாடுகள் உருவாக்கியுள்ளன என்றால் மிகையாகாது. Governors who disrupt the constitution

இது தனி நபர் கருத்துச் சுதந்திரம் குறித்த பிரச்சினையல்ல. குடியரசுத் தலைவர், ஆளுனர் பதவிகளை வகிப்பவர்கள் கருத்து மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தால்தான் அவர்கள் அரசமைப்பின் உருவகத் தலைவர்களாக இருக்க முடியும். சொந்தக் கருத்துக்களை வெளியிட அவர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களல்ல. மேலும் அவர்கள் பதவியின் குறியீட்டுத் தன்மை அவர்களது தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடத் தடை விதிக்கிறது. Governors who disrupt the constitution

உதாரணமாக தமிழ்நாடு என்ற மாநிலத்தின் பெயர் தமிழகம் என்று இருப்பதுதான் சரியானது என்று கூறினார். தமிழ்நாட்டு சட்டமன்றம் இந்த பெயரை சட்டமாக்கி. ஒன்றிய அரசின் ஒப்புதலையும் பெற்று அரை நூற்றாண்டு கடந்த பிறகு, இவர் தான்தோன்றித்தனமாக கருத்து சொல்வது அரசியலமைப்பை கேள்விக்கு உள்ளாக்குகிறது என்றே கருத வேண்டும். அவர் ஆளுனர் மாளிகை அனுப்பிய அழைப்பிதழிலும் தமிழகம் என்றே அச்சிட்டு அனுப்பினார். பலத்த கண்டனங்களுக்குப் பிறகுதான் அதை மாற்றினார். 

தமிழ்நாட்டு அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து திராவிட நல் திருநாடு என்று குறிப்பிடும் நிலையில், இந்திய தேசிய கீதமும் திராவிடம் என்ற சொல்லாட்சியை பயன்படுத்தும் நிலையில் “திராவிடம்” என்பதெல்லாம் உண்மையல்ல என்று பேசினார். அவர் கலந்து கொண்ட தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் “திராவிடம்” என்ற சொல் இடம்பெறும் வரியை தவிர்த்துவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. மக்கள் பெருவாரியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கும் அரசியல் கட்சிகள் திராவிட அடையாளத்தை தங்கள் பெயர்களில் வைத்திருப்பதை நேரடியாக அவமதித்து, திராவிடம் என்ற அடையாளத்தை மறுத்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டார். இதெல்லாம் உதாரணங்கள்தான். அவரது அடாத அரசியல் செயல்பாடுகளின் பட்டியல் மிக நீண்டது. அதன் மிகச் சமீபத்திய வெளிப்பாடு துணைவேந்தர்கள் மாநாடு. Governors who disrupt the constitution

தீர்ப்பிற்கு பிறகும் துணைவேந்தர் மாநாடு 

ஆளுனர்களை மாநில அரசுகள் நட த்தும் பல்கலைகழகங்களின் வேந்தராக நியமிப்பது ஒரு மரபு. ஏனெனில் ஆளுனர் பதவி போலவே வேந்தர் பதவியும் ஒரு உருவகத் தலைமைப் பதவிதான். பல்கலைகழக நிர்வாகம் முழுவதும் துணை வேந்தரின் கீழ்தான் இருக்கும். பல்கலைக்கழகம் குறித்த விதிமுறைகள், அதன் நிர்வாக முடிவுகள் ஆகியவற்றை விவாதித்து மேற்கொள்ள செனட் போன்ற குழுக்கள் உருவாக்கப்படும். பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி உரிமைபெற்ற அமைப்புகள். அதில் மாநில அரசு கூட தலையிட முடியாது. நிதி அளிப்பதற்கான ஒப்புதல்களை வழங்குவது மட்டும்தான் மாநில அரசின் உயர்கல்வித் துறை செய்யுமே தவிர மற்றபடி நிர்வாகம் பல்கலைக்கழகத்திடம் மட்டுமே இருக்கும். இந்த அமைப்பில் வேந்தர் என்பவருக்கு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது. துணை வேந்தர் தேர்விற்கான குழுவை அமைப்பது என்பன போன்ற சில பணிகள் வழங்கப்படுவது உண்டு. இவையெல்லாமே மரபு சார்ந்தவைதான். Governors who disrupt the constitution

துணைவேந்தர் தேர்வுகளில் ஆளுனர் ஒத்துழைப்பை வழங்காததால், மாநில அரசு துணை வேந்தர் தேர்வுக்குழு அமைக்கும் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொள்வதாக சட்டமியற்றியது. அதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுனர் காலம் தாழ்த்தியதால், உச்ச நீதிமன்றமே அச்சட்டம் அமலுக்கு வந்ததாக அது ஏப்ரல் 8-ஆம் தேதி அளித்த தீர்ப்பில் அறிவித்துவிட்டது. இந்த நிலையில் தான் பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தும் நிலையில் இல்லை என்பது ஆளுனருக்கு புரிந்திருக்க வேண்டும். Governors who disrupt the constitution

இருந்தும் அவர் மாநில பல்கலைகழகத் துணைவேந்தர்களை ஒரு கருத்தரங்கிற்கு ஊட்டிக்குக் கடந்த வாரம் அழைத்தார். வேந்தர் என்பது அவரது தனிப்பட்ட தகுதி கருதி வழங்கப்பட்டது அல்ல. அது அவர் பதவியால் வந்த தகுதி; ஆங்கிலத்தில் ex-officio என்பார்கள். அந்த நிலையில் அவர் துணை வேந்தர்களுக்கான கருத்தரங்கை நடத்துவது என்பது அவருடைய பதவிக்கு உட்பட்ட செயலே அல்ல. துணை வேந்தர்கள் கல்வியாளர்கள். அவர்களால் வேண்டுமளவிற்கு கருத்தரங்கங்களை அவரவர்கள் பல்கலைகழகங்களிலேயே நிகழ்த்திக்கொள்ள முடியும். அவ்வாறான நடைமுறைகள் பல்கலைக்கழகங்களின் உயிர்நாடி எனலாம். அதைத்தவிர பல சர்வதேச கருத்தரங்கங்களுக்கும் துணை வேந்தர்கள் சென்று கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடுவார்கள். இந்த நிலையில் கல்விப் புலத்திற்கு தொடர்பற்ற, அரசியல் முனைப்பும், கருத்தியல் நோக்கங்களும் கொண்ட ஆளுனர் கருத்தரங்கம் நிகழ்த்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே பார்க்கப்படும். அதனால் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப் பின் துணைவேந்தர்கள் அந்த கருத்தரங்க அழைப்பை ஏற்காததில் வியப்பதற்கு எதுவுமில்லை.  

ஆனால் ஆளுனர் துணைவேந்தர்கள் மிரட்டப்பட்டார்கள் என்று ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு ஆளுனர் இதற்கு மேல் அரசியல் மயப்பட்டு செயல்பட முடியாது. இவர் நிகழ்த்தும் கருத்தரங்கம் அரசியல் கூட்டமா? அதற்குச் செல்லக்கூடாது என எதற்காக துணை வேந்தர்கள் மிரட்டப்பட வேண்டும்? இவ்வளவு தூரம் மாநில அரசுடன் பகிரங்க மோதல் போக்கை அவர் வெளிப்படுத்திய பிறகும், அதனை உச்சநீதிமன்றமே இடித்துரைத்த பிறகும், அவர் பதவிக்காலம் முடிந்த பிறகும், அவரை ஒன்றிய அரசு ஆளுனராகத் தொடரச் செய்ய என்ன காரணம் இருக்க முடியும் என்பதே கேள்வி. அது அரசமைப்புச் சட்டத்தை சீர்குலைக்கத்தானா என்று உச்சநீதிமன்றத்தின் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் ஐயப்பட வைக்கின்றன. Governors who disrupt the constitution 

கட்டுரையாளர் குறிப்பு:  

Governors who disrupt the constitution - Article in Tamil By Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share