சனாதன தர்மத்திற்கு எதிராக என்னால் பேச முடியாது என்று கூறி காங்கிரஸ் கட்சியில் இருந்து பேராசிரியரும் செய்தி தொடர்பாளருமான கவுரவ் வல்லப் இன்று (ஏப்ரல் 4) விலகி பாஜகவில் இணைந்தார்.
ஆங்கில மற்றும் இந்தி தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் நிதி மேலாண்மை, பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக புள்ளி விவரங்களுடன் ஆதாரத்தோடு பேசக்கூடியவர் பேராசிரியர் கவுரவ் வல்லப்.
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியானது திசை மாறி போவதால், கட்சியிலிருந்து தாம் விலகுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், “நிதித்துறையில் எனக்கு இருந்த அறிவை நாட்டின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன்.
ஆனால், நாம் இப்போது தவறான பாதையில் செல்கிறோம். ஒரு பக்கம் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்று பேசிக் கொண்டே, மறுபுறம் இந்து சமுதாயத்தை முற்றிலும் எதிர்க்கிறோம் என்று தோன்றுகிறது. மேலும், இது காங்கிரஸின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது.
என்னால் சனாதனத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பவோ, நாட்டை வளப்படுத்துபவர்களை துஷ்பிரயோகம் செய்யவோ முடியாது. சனாதனத்திற்கு எதிராக கட்சித் தலைவர்கள் பேசும்போது காங்கிரஸ் கட்சியினர் மவுனம் சாதித்ததால் நான் வருத்தமடைந்தேன்
களச் செயல்பாடு தொடர்பை நாம் இழந்துவிட்டோம். புதிய இந்தியா எங்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதை உணரவில்லை. இதன் காரணமாக, மீண்டும் ஆட்சிக்கு வருவதிலோ அல்லது திறமையான எதிர்க்கட்சியாக மாறுவதிலோ பலமுறை தோல்வியடைந்து வருகிறோம் “என்று தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு இன்று சென்ற கவுரப் வல்லப், பாஜக பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
கடந்த ஆண்டு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சிறந்தது என்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், “எம்மதமும் எங்களுக்கு சம்மதமே. அதேநேரம் அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை கூறுவது அவரவர் சுதந்திரம். காங்கிரஸ் கட்சி அனைவரது உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் மதிக்கிறது” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Rishabh Pant: ரூ.24 லட்சம் அபராதத்துடன்… 1 போட்டியில் விளையாட தடை விதித்தது பிசிசிஐ
பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளர் கட்டாயம்: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!
Comments are closed.