தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி (Tamil Nadu R.N.Ravi) மாற்றப்பட்டு மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆளுநராக, கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸ் திடீரென தமது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து மேற்கு வங்க மாநில புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை ஜனாதிபதி திரவுபதி நியமித்துள்ளார். கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி யை மையமாக வைத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன..
ஆர்.என்.ரவியும் சர்ச்சைகளும்
செப்டம்பர் 2021-ல் ஆளுநராகப் பொறுப்பேற்றது முதல், சட்ட மசோதாக்களை நிறுத்தி வைத்தது, அரசு நிர்வாகத்தில் தலையிட்டது, தனது உரையில் அரசு தயாரித்த பகுதிகளைத் தவிர்த்தது, அண்மையில் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்புகள் வரை, அவரது ஒவ்வொரு அசைவும் தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
2021: பொறுப்பேற்பும் ஆரம்பக்கட்ட மோதல்களும்
தமிழ்நாட்டின் 15வது ஆளுநராக ஆர்.என்.ரவி செப்டம்பர் 18, 2021 அன்று பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, செப்டம்பர் 2021-ல், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவை அழைத்த ஆளுநர், தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து துறைவாரியாக அறிக்கை கேட்டு, அதனை பவர் பாயின்ட்டில் விளக்கும்படி உத்தரவிட்டார். இது மாநில அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் நேரடியாகத் தலையிடுவதாகக் கூறி, ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. மாநில சுயாட்சிக்கு எதிரான செயல்பாடு இது என அரசியல் வட்டாரங்கள் கொதித்தெழுந்தன.
2022: நீட் மசோதா விவகாரமும் அரசியல் கொந்தளிப்பும்
2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி, தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை, தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய 142 நாட்களுக்குப் பிறகு, ஆளுநர் ஆர்.என்.ரவி அதை சபாநாயகருக்குத் திருப்பி அனுப்பினார். இது கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என்று அவர் கூறினார்.
ஏப்ரல் மாதம், நீட் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்து, தமிழ்நாடு புத்தாண்டு தினத்தில் ராஜ்பவனில் ஆளுநர் நடத்திய “அட் ஹோம்” தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன. நவம்பர் மாதம், ஆளுநரின் அரசியலமைப்புக்கு எதிரான நடத்தை குறித்து திமுக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மனு அளித்து, அவரைத் திரும்பப் பெறக் கோரியது.
2023: “தமிழகம்” சர்ச்சை முதல் உச்ச நீதிமன்றம் வரை
2023 ஆம் ஆண்டு, ஆளுநர் ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையிலான மோதல் புதிய உச்சத்தை எட்டியது. ஜனவரி 4 ஆம் தேதி, ஆளுநர் “தமிழ்நாடு” என்பதற்குப் பதிலாக “தமிழகம்” என்பதே மிகவும் பொருத்தமான சொல் என்று கூறினார். இது தமிழகத்தில் பரவலான கண்டனத்தைத் தூண்டியது.
ஜூன் மாதம், அமைச்சர் வி. செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் நீக்கினார். பின்னர், இந்த உத்தரவை அவரே திரும்பப் பெற்றார். அக்டோபர் மாதம், ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலவரையின்றி தாமதப்படுத்தியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
2025: உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகள்
ஏப்ரல் 2025 இல், ஆளுநர்கள் மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால வரம்புகளை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தது ஒரு முக்கிய தீர்ப்பாக அமைந்தது. ஏப்ரல் 8, 2025 அன்று, ஆளுநரின் தாமதமான நடவடிக்கையால் கிடப்பில் போடப்பட்டிருந்த 10 மசோதாக்களை உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவித்தது.
எனினும், ஏப்ரல் 13, 2025 அன்று, ஒரு விழாவில் மாணவர்களை “ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷமிடச் சொன்னதாகக் கூறப்படும் ஒரு புதிய சர்ச்சையில் ஆளுநர் சிக்கினார். இது மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானது என பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட்டு மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்படும் முன்னர் நாகாலாந்து மாநில ஆளுநராக பதவி வகித்த ஆர்.என்.ரவிக்கு அம்மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2022: தமிழக சட்டப்பேரவையில் முதல் உரையை முழுமையாக படித்தார் ஆர்.என்.ரவி.
2023: சட்டப்பேரவையில் வாசிப்பதற்காக அரசு தயாரித்த உரையில் இருந்த மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகியவற்றை உச்சரிக்க மறுத்தார் ஆர்.என்.ரவி.
அரசு கொடுத்த உரையில் இருப்பதுதான் அவையில் நிறைவேறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி தந்தார். இதனால் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார் ஆளுநர் ரவி.
2024: சட்டப்பேரவையில் ஆளுநர் உரை வாசிப்புக்கு முன் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்படுகிறது, தேசிய கீதம் பாடப்படுவதில்லை எனக் கூறி உரையை வாசிக்காமல் அமர்ந்தார். சபாநாயகர் அப்பாவு உரையை வாசித்தார். அப்போதும் வெளிநடப்பு செய்தார் ஆளுநர் ரவி.
2025: தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்கிற காரணத்தை மீண்டும் எழுப்பி, பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார் ஆளுநர் ரவி
2026: மீண்டும் தேசிய கீதம் பாடவில்லை எனக் கூறி மீண்டும் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார் ஆளுநர் ரவி.
குறிப்பு: இந்தத் தகவல் ‘சன் நியூஸ்’ (Sun News) வெளியிட்ட வரைபடத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
