மருத்துவர் ராமதாஸ் தலைமையில் அக்டோபர் 5ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் – மகன் அன்புமணி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பாமகவிலிருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி பாமக அலுவலகத்தின் நிரந்தர முகவரியை மாற்றி மோசடி செய்துள்ளனர் என குற்றம் சாட்டினார். ராமதாஸ் மற்றும் அன்பு மணி இடையே உள்ள பிரச்சனையால் கட்சி இரண்டாக உடையும் சூழல் உருவாகி உள்ளது.
இதற்கிடையில் பாமக வடக்கு மாவட்ட செயலாளர் செல்வத்தை தாக்கி சிலர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் பாமக நிர்வாகிகள் பலருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 19) சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள் குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அருள் எம்எல்ஏ, கொலை மிரட்டல் குறித்து கொடுத்த புகாரின் பேரில் 2 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். நாங்கள் பயந்து கொண்டு புகார் கொடுக்க வில்லை. மூத்த தலைவர் ஐயாவிற்கு பின் நாங்கள் இருக்கிறோம். சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம் என்றார்.
மேலும் டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையரை பாமக சார்பில் வழக்கறிஞர்கள் சந்தித்துள்ளனர். அவரிடம் பீகாரில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதாக இல்லை. தமிழகம் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் மட்டும் தான் பாமக கட்சி உள்ளது என்று தெரிவித்துள்ளோம். விரைவில் நல்ல முடிவை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்றார்.
மேலும் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் அக்டோபர் 5 ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.