யூடியூபர் ஆர்.எஸ். கார்த்திக்கின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று நடிகை கவுரி கிஷன் கூறியுள்ளார்.
நடிகை கவுரி கிஷன் நடித்த ‘அதர்ஸ்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில், யூடியூபர் ஆர்.எஸ். கார்த்திக் எழுப்பிய உடல் எடை குறித்த கேலி சினிமா பிரபலங்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கடந்த நவம்பர் 6-ம் தேதி நடைபெற்ற ‘அதர்ஸ்’ படக்குழுவின் செய்தியாளர் சந்திப்பில், பத்திரிகையாளர் என்ற பெயரில் யூடியூபர் ஆர்.எஸ். கார்த்திக், நடிகை கவுரி கிஷனின் உடல் எடை குறித்து கதாநாயகனிடம் கேள்வி எழுப்பினார்.
இதனால் கோபமடைந்த கவுரி கிஷன், இதெல்லாம் ஒரு கேள்வியா? இது படம் சம்பந்தமான கேள்வியா? நான் எப்படி இருந்தால் உங்களுக்கு என்ன? கதாநாயகனிடம் இப்படி கேட்பீர்களா? என செய்தியாளர்கள் சந்திப்பிலேயே கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
கவுரி கிஷனின் இந்தக் குரலுக்குத் திரையுலகினர் மத்தியிலும், சமூக ஊடகங்களிலும் ஆதரவு கிடைத்தது. விஷ்ணு விஷால், குஷ்பு, சின்மயி, பா. ரஞ்சித் உள்ளிட்ட பல பிரபலங்கள் கவுரி கிஷனின் நிலைப்பாட்டைப் பாராட்டிப் பதிவிட்டனர். யூடியூபர் ஆர்.எஸ் கார்த்திகிற்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தநிலையில், “நான் உருவக்கேலி செய்யும் நோக்கத்தில் கேள்வி கேட்கவில்லை, எனது கேள்வி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்” என்று யூடியூபர் கார்த்திக் வீடியோ வெளியிட்டார்.
இருப்பினும், கார்த்திக்கின் இந்த மன்னிப்பில் பொறுப்புக்கூறல் இல்லை என்று கவுரி கிஷன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று (நவம்பர் 10) அவர் தனது எக்ஸ் பதிவில், ‘பொறுப்புணர்வும், தவறை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும் இல்லாத மன்னிப்பு, மன்னிப்பே அல்ல. குறிப்பாக, ‘அவர் (நான்) கேள்வியைத் தவறாகப் புரிந்துகொண்டார் – அது ஒரு நகைச்சுவையான கேள்விதான்’என்றும் ‘நான் யாரையும் உருவக்கேலி செய்யவில்லை’ என்றும் கூறுவது மிகவும் மோசமானது.
“வெற்று வார்த்தைகளையோ அல்லது வெளிப்பூச்சுக்கான வருத்தத்தையோ நான் ஏற்க மாட்டேன். ஆர்.எஸ். கார்த்திக்” என்று கூறியுள்ளார்.
