தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை கைது செய்ய வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ தனியரசு வலியுறுத்தி உள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் விஜய் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தனியரசு வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ” கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அரசின் காவல்துறையின் விதிகளை மீறி பேரணி மற்றும் கூட்டம் நடத்தியதில் கூட்டத்தில் சிக்கி அப்பாவி குழந்தைகள் ,பெண்கள் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்ற செய்தி வேதனை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமான த.வெ.க தலைவர் நடிகர் விஜய் மீது தமிழக காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும். உயிரிழந்த குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் உயிருக்கு போராடும் நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்திட தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.