ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் நிறுவனர்களில் ஒருவருமான சிபு சோரன் (வயது 81 Ex Jharkhand Chief Minister Shibu Soren) உடல் நலக் குறைவால் காலமானார்.
பீகார் மாநிலத்தில் சந்தாலி மொழி பேசும் மக்கள் வாழும் பகுதி ஜார்க்கண்ட் என அழைக்கப்பட்டது. 1972-ம் ஆண்டு மேற்கு வங்க இடதுசாரி தொழிற்சங்க தலைவர் ஏகே ராய், குர்மி மகாதோ தலைவர் பினோத் பிகாரி மகாதோ ஆகியோருடன் இணைந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை உருவாக்கினார் சிபு சோரன்.
1975-ல் ஜார்க்கண்ட் பிராந்தியத்தில் இருந்து பழங்குடி அல்லாதவர்கள் வெளியேற வேண்டும் என்ற பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்தார் சிபு சோரன். இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பல வழக்குகள் சிபு சோரன் மீது பாய்ந்தன.
பீகாரின் தும்கா மக்களவை தொகுதியில் இருந்து 1980-ம் ஆண்டு சுயேட்சையாக நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் சிபு சோரன். மொத்தம் 8 முறை எம்பியாக பதவி வகித்துள்ளார். மாநிலங்களவை எம்பியாகவும் பதவி வகித்தவர் சிபு சோரன்.
பிரதமர் மன்மோகன் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய நிலக்கரி துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
2000-ம் ஆண்டு ஜார்க்கண்ட் தனி மாநிலம் உருவான பின்னர் முதல்வராகவும் பதவி வகித்தார். ஆட் கடத்தல் வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டவர் சிபு சோரன்.
சிபு சோரனின் மகன்களில் ஒருவரான ஹேமந்த் சோரன், தற்போது ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருக்கிறார். பாஜகவுக்கு எதிரான ‘இந்தியா கூட்டணி’யில் ஹேமந்த் சோரன் அங்கம் வகிக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக சிபு சோரன் உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையில் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில் உடல்நிலை பாதிப்பால் சிபு சோரன் இன்று ஆகஸ்ட் 4-ந் தேதி காலமானார்.