அதிமுக அமைப்புச் செயலாளரான முன்னாள் மாநிலங்களவை எம்.பி. மைத்ரேயன் இன்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
1990களில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்து பணியாற்றியவர் வா.மைத்ரேயன். 1991-ல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தமிழ்நாடு செயற்குழு உறுப்பினராக இருந்தார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து பாஜகவில் பொறுப்புக்கு வந்தார் மைத்ரேயன். 1995-97 வரை தமிழ்நாடு பாஜகவின் பொதுச் செயலாளராக, 1997-99-ல் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவராக, 1999-ல் தற்காலிகமாக தமிழக பாஜக தலைவராகவும் இருந்தார் மைத்ரேயன்.
1999-ம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக இணைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தார் மைத்ரேயன். 2002, 2007, 2013 ஆகிய ஆண்டுகளில் அதிமுகவின் மாநிலங்களவை எம்பியாகவும் அவர் இருந்தார்.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் அணிக்கு தாவினார். ஓபிஎஸ்- இபிஎஸ் அணிகள் இணைந்த போது அதிமுகவில் மீண்டும் மாநிலங்களவை எம்பி பதவியை எதிர்பார்த்த மைத்ரேயனுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது.
அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை பிரச்சனை வெடித்த போது இபிஎஸ் அணிக்கு தாவினார் மைத்ரேயன். ஆனாலும் இபிஎஸ் அணியில் முக்கியத்துவம் கிடைக்காத அதிருப்தியில் தாய் கட்சியான பாஜகவுக்கே ரிட்டர்ன் ஆனார்.

பின்னர் 2024-ம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார் மைத்ரேயன். அதிமுகவின் அமைப்புச் செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து தம்மை திமுகவில் இணைத்து கொள்கிறார் மைத்ரேயன் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவின் முன்னாள் எம்பி அன்வர் ராஜா, கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக இலக்கிய அணித் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து மற்றொரு முன்னாள் எம்பியான மைத்ரேயன் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைகிறார்.