சென்னை மாநகரில் ஓடும் அடையாறு மற்றும் கூவம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. தென் சென்னையில் மழை வெள்ள நீர் தேங்குவதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16-ந் தேதி தொடங்கியது. இந்த பருவமழையால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கனமழை காரணமாக சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து 2,170 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கன அடிநீர் முன்னெச்சரிக்கையாக திறந்துவிடப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், அடையாறு ஆற்றில் கலந்து சென்னை வழியாக பாய்ந்தோடி வங்க கடலில் கலக்கிறது. கனமழை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு ஆகியவற்றால் தென்சென்னையில் பாய்ந்தோடும் அடையாறு ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக உள்ளது.
இதேபோல சென்னை மாநகரின் மையத்தில் ஓடும் கூவம் ஆற்றிலும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டம் பருத்திப்பட்டு தடுப்பணையில் இருந்து கூவம் ஆற்றில் உபரி நீர் திறந்தவிடப்பட்டுள்ளது.
துணை முதல்வர் ஆய்வு
இதனிடையே தென் சென்னையில் மழை வெள்ள நீர் தேங்காமல் இருப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27.00 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் காரப்பாக்கத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலப் பணி பகுதியில் மடுவின் கரைகளை அகலப்படுத்தி சீரமைக்கும் பணி ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். பள்ளிக்கரணை சதுப்புநிலப்பகுதிகளில் இருந்து வெளியேறும் நீர் எளிதாக கடலுக்கு செல்லும் வகையில், கண்ணகி நகர் பகுதியில் தூர்வாரும் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
சோழிங்கநல்லூர் பகுதியில் சதுப்பு நிலத்தில் நீர் எளிதாக செல்லவதற்காக, மேடவாக்கம் மற்றும் சோழிங்கநல்லூரை இணைக்கின்ற வகையில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர் மட்ட பாலத்தையும் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
தற்போதைய பெருமழையால் சென்னை மாநகரில் சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை. முன்னெச்சரிக்கையாக கூவம், அடையாறு ஆற்றின் குறுக்கே சில தரைப்பாலங்கள் மூடப்பட்டுள்ளன.
