‘போலி திருக்குறள்’ – மன்னிக்க முடியாத செயல்- ஆளுநர் ரவிக்கு ப.சிதம்பரம் கண்டனம்

Published On:

| By Mathi

Chidambaram Governor RN Ravi

சிறந்த மருத்துவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கொடுத்த விருதில் போலி ‘குறள்’ பொறிக்கப்பட்டிருந்தது மன்னிக்க முடியாத செயல் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். Thirukkural Chidambaram RN Ravi

இது தொடர்பாக ப.சிதம்பரம் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 13-7-2025 அன்று ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்ற நூலைத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டு அதன் முதல் படியைப் பெறும் பெருமை எனக்குக் கிடைத்தது

அதே நாளில் இன்னொரு நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடந்தது என்று படித்தேன். அந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவரை அவமதிக்கின்ற ஒரு நிகழ்வு நடந்தது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்

சிறந்த மருத்துவர்களுக்கு ஆளுநர் கொடுத்த விருதில் ஒரு போலி ‘குறள்’ பொறிக்கப்பட்டிருந்தது என்பது தான் அதிர்ச்சிச் செய்தி.

‘குறள் 944’ என்று பொறிக்கப்பட்ட ‘குறள்’ திருக்குறள் நூலில் இல்லை. எழுத்துப் பிழையோ, எண் பிழையோ என்று திருக்குறளின் எல்லாக் குறள்களையும் படித்துப் பார்த்தால் அது போன்ற பாடலே நூலில் இல்லை என்று தெரிய வருகிறது

குறள் 123 லிருந்து திருடி, திருத்தி இல்லாத பாடலைத் திருக்குறள் பாடலாகப் பரப்புவது ஒரு தரம் தாழ்ந்த செயல்.

காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலை ‘குறள்’ என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல்.

போலிச் சித்திரம், போலிக் குறள் ….இந்தப் போக்கு எங்கு கொண்டு செல்லும்? இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share