ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (CEO) சந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்திற்கு ரூ.300 கோடி கடன் வழங்க ரூ.64 கோடி லஞ்சம் வாங்கியதை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது. Ex-ICICI Bank CEO Chanda Kochhar found guilty
ஐசிஐசிஐயின் முன்னாள் சிஇஓ வாக இருந்தவர் சந்தா கோச்சார். இவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கடந்த 2012ம் ஆண்டு வீடியோகான் குழுமத்திற்கு கடன் வழங்க ஒப்புதல் அளித்ததாக புகார் எழுந்தது. வங்கி கடன் வழங்கிய மறுநாளே வீடியோகான் குழுமத்தின் எஸ்.இ.பி.எல் நிறுவனத்தில் இருந்து சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் நிர்வகித்து வந்த என்.ஆர்.பி.எல் நிறுவனத்தின் மூலம் ரூ.64 கோடி மாற்றப்பட்டது.
இதுகுறித்து புகார் எழுந்த நிலையில் சந்தா கோச்சார் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் கடந்த 2019ம் ஆண்டு அவர் மீது வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணையை தொடங்கியது. இதைத்தொடர்ந்து 11,000 பக்கம் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.
குற்றப்பத்திரிகையில் வீடியோகான் குழுமத்தின் வி.என்.தூத், சந்தா கோச்சார் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்ற நிலையில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில் 78 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சொத்துக்களை விடுவிக்க உத்தரவிடக்கோரி சந்தா கோச்சார் தீர்ப்பாயத்தில் மனு அளித்தார். இந்த மனு குறித்தான விசாரணையின் போது சொத்துக்களை விடுவிக்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மனு அளித்தது.
இதைத்தொடர்ந்து மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவில், “சந்தா கோச்சார் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கணவர் தீபக் கோச்சார் மூலம் லஞ்சம் பெற்றது உறுதியாகி உள்ளது. வீடியோகான் நிறுவனத்திற்கு ரூ.300 கோடி வரை கடன் வழங்க அனுமதி அளித்ததற்காக சந்தா கோச்சாருக்கு அவரது கணவர் மூலம் ரூ.64 கோடி வரை லஞ்சப்பணத்தை வீடியோகான் குழுமம் வழங்கி உள்ளது. இதற்கான ஆதாரங்கள் பிஎம்எல்ஏ சட்ட பிரிவு 50 ன் கீழ் நம்பும் வகையில் கிடைத்துள்ளது.
மேலும் சந்தா கோச்சாருக்கு சொந்தமான ரூ.78 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்வதோடு, சந்தா கோச்சார் குற்றவாளி என்பது உறுதி செய்யப்படுகிறது” என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.