அக்காவை கொன்றவருக்கு ராக்கி கட்டும் கன்னியாஸ்திரி… 16 ஆண்டுகளாக தொடரும் பந்தம்!

Published On:

| By Kumaresan M

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி ராணி மரியா என்பவர் அங்குள்ள மரியா பவன் கான்வென்டில் தங்கி இறைப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். கடந்த 1995 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி போபாலில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள உதயாநகர் பகுதியில் ராணி மரியா பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, சமுந்தர் என்ற விவசாயியால் வெட்டி கொல்லப்பட்டார். ராணிமேரி அங்குள்ள பழங்குடியின மக்களிடத்தில் பழகுவது  பிடிக்காமல் சமுந்தர் கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ராணி மரியாவின் சகோதரியான ஷெல்மி என்பவரும் போபாலில் அதே கான்வென்டில்தான் கன்னியாஸ்திரியாக இருந்தார். இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட சமுந்தர் ,அப்பாவி கன்னியாஸ்திரியை கொன்றதற்காக மனதளவில் கடும் வேதனையடைந்தார். இதற்கிடையே, கடந்த 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி சகோதரியை கொன்ற சமுந்தரை சந்திக்க கன்னியாஸ்திரி ஷெல்மி சிறைக்கு சென்றுள்ளார். இதை , சமுந்தர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கன்னியாஸ்திரியை சந்தித்ததும் கண்களில் இருந்து பொல பொலவென கண்ணீர் வழிந்தது.

அவருக்கு ஆறுதல் சொன்ன ஷெல்மி,  அவரின் கையில் முதன் முறையாக ராக்கி கயிறு கட்டினார். பிறகு ஒருமுறை  ராணி மரியாவின் சகோதரரும் சிறைக்கு சென்று சமுந்தரை சந்தித்து, மனதார மன்னித்துவிட்டதாக தெரிவித்தார்.  சிறைத்தண்டனை முடிந்த பின்னர், 2006 ஆம் ஆண்டு சமுந்தர் வெளியே வந்தார்.

தொடர்ந்து, ராணி மரியாவின் வயது முதிர்ந்த பெற்றோரை கேரளா சென்று  நேரில் சந்தித்து தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டார். தங்கள் மகளை கொன்றவர் என்று கருதாமல், அவர்களும் மன்னித்து திருப்பி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் போபாலிலுள்ள மரியா பவன் கான்வென்டுக்கு சென்று கன்னியாஸ்ரி ஷெல்மியின் கையால் ராக்கி கட்டிக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார் சமுந்தர். 16 ஆண்டுகளாக இந்த பந்தம் தொடர்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன் 

போகிற போக்கில் சொன்ன வார்த்தை… மனிதரை குரங்காக மாற்றிய போலி செய்தி!

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தேசிய பணிக்குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share