கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கை இன்று (ஆகஸ்ட் 20) விசாரித்த உச்சநீதிமன்றம், நாடு முழுவதும் பணி செய்யும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் ‘தேசிய பணிக்குழு’ ஒன்றை அமைத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள மருத்துவ மாணவி ஒருவர் அவர் வேலை செய்யும் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதை விசாரித்த கொல்கத்தா காவல்துறை சஞ்சய் ராய் என்ற நபரைக் கைது செய்தது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையை கொல்கத்தா உயர்நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றியது.
இதற்கிடையில், இந்த வழக்கின் தீவிரத்தைக் கருதி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
அதன்படி இன்று வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், பர்திவாலா மற்றும் மனோஜ் மிஷ்ரா உள்ளடக்கிய நீதிபதி அமர்வு விசாரித்தது. மேற்கு வங்கம் அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும் மத்திய அரசு சார்பாக சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஆஜரானார்கள்.
வழக்கு விசாரணையைத் தொடங்கிய சந்திரசூட், “இந்த கொலை வழக்கு சம்பந்தமான கொல்லப்பட்ட மருத்துவரின் பெயர், புகைப்படங்கள், காணொலிகள், போன்றவை ஊடகத்தால் பரப்பப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிக்கிறது” என்றார்.
இதற்குப் பதிலளித்த கபில் சிபல், “காவல்துறை சம்பவம் நடந்த இடத்திற்கு செல்வதற்கு முன்பே புகைப்படங்கள், காணொலிகள் எடுக்கப் பட்டுவிட்டன” என்று பதிலளித்தார்.
தொடர்ந்து எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்யப்பட்ட நேரம் குறித்து “ஏன் தாமதமாக எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கபில் சிபல் “இயற்கைக்கு மாறான மரணம் என்று உடனே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதில் எந்தவித தாமதமும் இல்லை” என்றார்.
சந்திரசூட், “பிரேத பரிசோதனை மதியம் 1 மணியிலிருந்து மாலை 4.45 வரை நடத்தப்பட்டது. மாணவியின் உடல் அவரது பெற்றோர்களிடம் இரவு 8.30 மணிக்கு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் எஃப்.ஐ.ஆர். இரவு 11.45 மணிக்குத் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்பதைச் சுட்டிக்காட்டினார்.
மேலும் “ஏன் மருத்துவமனையில் இருக்கும் ஒருவர் கூட எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முன் வரவில்லை. பிரேதப் பரிசோதனையில் அந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்பது தெரியவில்லையா?
ஆகஸ்ட் 14-ஆம் தேதி ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் போது ஒரு கும்பல் மருத்துவமனைக்கு உள்ளே புகுந்து மருத்துவமனையை சேதப்படுத்தி உள்ளது. காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது” என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா “காவல் துறைக்குத் தெரியாமல் 7,000 நபர்கள் ஒன்று கூடி வன்முறையில் ஈடுபட முடியாது” என்று தெரிவித்தார்.
“ஏன் குற்றம் கண்டுபிடிப்பட்ட பிறகும் மிகத் தாமதமாக எஃப்.ஐ.ஆர் (முதல் தகவல் அறிக்கை) தாக்கல் செய்யப்பட்டது?” என்று கேட்டார்
தொடர்ந்து சந்திரசூட் “அமைதி வழியில் போராடும் மக்களை மேற்கு வங்க அரசு தனது முழு பலத்தையும் கொண்டு ஒடுக்கக்கூடாது” என்றார்.
மேலும், ”சிபிஐ வருகிற வியாழக்கிழமைக்குள் இந்த வழக்கு விசாரணை சம்பந்தமான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். மேற்கு வங்க அரசும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடந்த வன்முறை குறித்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் முக்கியத்துவத்தை விளக்கிய சந்திரசூட் “ கொல்கத்தாவில் நடந்த கொலையால் மட்டும் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரிக்கவில்லை. நாடு முழுவதும் மருத்துவர்களின் பாதுகாப்பு கருதித்தான் இந்த வழக்கை நாங்கள் விசாரிக்கிறோம்.
நாட்டில் உள்ள பொது மருத்துவமனைகளில் வேலை பார்க்கும் இளம் மருத்துவர்கள், குறிப்பாகப் பெண் மருத்துவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு இல்லை.
நமது நாட்டில் உள்ள பெண்கள் தாங்கள் செய்யும் பணிகளில் பாதுகாப்பாக உணரவில்லை என்றால், நாம் அவர்களுக்குச் சம உரிமை மறுக்கிறோம் என்பதாகும். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாம் எதாவது செய்யவேண்டும்.
தேசிய அளவில் இதற்கு ஒரு நெறிமுறை வேண்டும். அதற்காக ‘தேசிய பணிக்குழு’ ஒன்றை வைஸ் அட்மிரல் (கடற்படை) மருத்துவர் ஆர்தி சரினின் தலைமையில் அமைக்க வேண்டும்.
இந்த குழு மருத்துவத்துறையில் வேலை பார்க்கும் நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான விதிமுறைகள் வகுத்து, இடைக்கால அறிக்கையை மூன்று வாரத்திற்குள்ளாகவும், இறுதி அறிக்கையை இரண்டு மாதத்திற்குள் வழங்கவேண்டும்” என்று சந்திரசூட் உத்தரவிட்டார்.
இறுதியாகப் போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் மாணவர்களை மீண்டும் திரும்ப வேலைக்குச் செல்லுங்கள் என்று கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி சந்திரசூட், வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 22 க்கு ஒத்திவைத்தார்.
இந்த குழுவின் உறுப்பினர்கள்:
மருத்துவர்கள் ஆர்தி சரின், நாகேஷ்வர் ரெட்டி, எம்.ஷ்ரீனிவாஸ், பிரதிமா மூர்தி, கோவர்தன் த்த் பூரி, சௌமித்ரா ராவத், அனிதா சக்ஸேனா, பல்லவி சாப்ரே மற்றும் பத்மா ஷ்ரீவத்ஸவா.
மத்திய அரசு சார்பாக இந்த குழுவில், மத்திய அரசின் கேபினட் செயலாளர், உள்துறை செயலாளர், மத்திய சுகாதாதாரதுறையின் செயலாளர், தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் மற்றும் தேசிய தேர்வு வாரியத்தின் தலைவர் அங்கம் வகிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஆம்ஸ்ட்ராங் கொலை… இயக்குனர் நெல்சன் மனைவியிடம் விசாரணை!
முதல்வர் தனிச் செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு தீர்ப்பு… மீண்டும் ஒத்திவைப்பு!