வாகனம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் உயரதிகாரிகள் வரும் 30ம் தேதி பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
ஆனால் அந்த பயணத்திற்கு முன்னதாக பல்வேறு சந்திப்புளையும், ஆலோசனை கூட்டத்தையும் நடத்தி வருகிறார் ஸ்டாலின்.

கடந்த 13ஆம் தேதி அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து தனது திருமண நாளையொட்டி அதற்கு முந்தைய நாள் ஆகஸ்ட் 19ஆம் தேதி கூட்டணிக் கட்சித் தலைவர்களை சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் சந்தித்து விருந்து வைத்தார்.
அதில் கமல்ஹாசன், செல்வப்பெருந்தகை, வேல்முருகன், காதர் மொய்தீன், வைகோ, திருமாவளவன், முத்தரசன், பெ.சண்முகம், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் ஆகிய கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஸ்டாலின் – துர்கா தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த சந்திப்பின்போது துணை ஜனாதிபதி தேர்தல், கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் முக்கிய ஆலோசனைகளையும் நடத்தினார் ஸ்டாலின்.
அதன் தொடர்ச்சியாக வரும் 27ஆம் தேதி பிகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்ய வலியுறுத்தி ‘வாக்காளர் உரிமை’ என்ற பெயரில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடைபெறும் யாத்திரையில் கலந்து கொள்ள உள்ளார்.
இப்படி தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக கூட்டணியை பலப்படுத்தும் பணிகளில் முதல்வர் ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவரான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை தவிர பாஜக உடனான கூட்டணியை பலப்படுத்தும் பணிகளில் இதுவரை ஈடுபடவே இல்லை.
அதற்கு காரணமாக தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலையின் அடாவடி பேச்சு கூறப்பட்டது. அதிமுக கூட்டணி வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைப்போம் என எடப்பாடி கூறிய நிலையில், கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு என தொடர்ந்து அவருக்கு நேரெதிராக பேசி வந்தார் அண்ணாமலை.

ஆனால் நெல்லையில் நேற்று நடந்த பாஜகவின் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் முதல் மாநாட்டில் பேசிய அண்ணாமலை, “2026 சட்டமன்ற தேர்தலில் தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நம் ஒவ்வொருவரின் கடமை” என பேசினார்.
அவரது பேச்சு அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கூட்டணியை உறுதி செய்யும் வகையில் வரும் செப்டம்பர் மாதம் கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். பாஜக மற்றும் கூட்டணியில் உள்ள பிற கட்சியினரும் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் தேர்தல் வியூகம், கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என அக்கட்சி வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
