“சைகை காட்டுவதில் பெருமை… ஆனால் சட்டம் – ஒழுங்கு முடிந்துவிட்டது”: ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ்

Published On:

| By Kavi

முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவு சைகை காட்டியது வைரலாகி வரும் நிலையில், அதையும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கையும் குறிப்பிட்டு திமுக அரசை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் கண்ணில் பட்டவரையெல்லாம் அரிவாளால் தாக்கிய சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் சிவகங்கையில் அதுபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்திற்குள், இருசக்கர வாகனங்களில் அரிவாள் மட்டும் பட்டாக்கத்திகளுடன் வந்த ஒன்பது மர்ம நபர்கள், கண்ணில் கண்டவர்களையெல்லாம் வெட்டியுள்ளனர்.

முத்தநேந்தல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியபோது, இடைக்காட்டூர் கிராமத்தை சேர்ந்த மகேஷ் மற்றும் பாண்டியராஜன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால்  மகேஷ் தனது நண்பர்களுடன் பைக்குகளில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கிராமத்துக்குள் வந்ததாகவும் தகவல்கள் வருகின்றன. 

ADVERTISEMENT

அவர்களை வழிமறித்து கேட்ட ராசு என்பவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, தடுக்க முயன்ற மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து ராசு அளித்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்துக்கு இன்று (மார்ச் 5) தனது எக்ஸ் பக்கம் மூலம் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ‘இதே மாதிரியான தாக்குதல் 2 நாட்களுக்கு முன்பு தான் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்துள்ளது. அதன் ரத்த ஈரம் காய்வதற்குள் அதேபோன்றதொரு தாக்குதல் மீண்டும் நடக்கிறது என்றால், இவை சொல்லவரும் செய்தி என்ன?

ADVERTISEMENT

சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதலமைச்சர், ஒரு பொம்மை முதல்வராக இருக்கிறார் என்பது தானே?

திமுக அரசின் “குற்றவாளிகள் கைது” நடவடிக்கையைக் கண்டு குற்றவாளிகள் யாரும் பயந்த மாதிரியே தெரியவில்லை!

பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புகுந்து தைரியமாக இப்படி ஒரு கொலைவெறித் தாக்குதல் நடக்கிறது என்றால், இங்கே நடக்கும் திமுக அரசு இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என்று தானே மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?

இப்படி மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதல்வர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? “முடிந்துவிட்டது” என தான் காட்டிய சைகை வைரல் ஆனதாக வெட்டிப் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.

ஆமாம்  ஸ்டாலின் அவர்களே….

உங்கள் ஆட்சியில்
சட்டம் ஒழுங்கு முடிந்துவிட்டது!
பெண்கள் பாதுகாப்பு முடிந்துவிட்டது!
சமூகநீதி முடிந்துவிட்டது!
மொத்தத்தில், தமிழக மக்களின் நிம்மதியே முடிந்துவிட்டது!

இப்படி முடிந்துவிட்டதை எல்லாம் திரும்பப் பெற ஒரே வழி, உங்களுடைய விடியா ஆட்சிக்கு முடிவு கட்டுவதே! அதை மிக விரைவில் தமிழக மக்கள் “சிறப்பாக செய்ய” காத்திருக்கிறார்கள்!

இடைக்காட்டூர் கிராமத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share