பீகாரில் தொடர்ந்து 10 முறை முதல்வராகப் பொறுப்பேற்று சாதனை படைத்த நிதீஷ் குமார் இன்று முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளர்.
பீகார் அரசியலில் கடந்த 20 ஆண்டுகளாக முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்து வந்த நிதீஷ் குமார், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாநிலங்களவை உறுப்பினராக முடிவெடுத்திருப்பது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2025 நவம்பரில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் 243 தொகுதிகளில் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இதில் பாஜக 89, ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இதைத்தொடர்ந்து நிதீஷ் குமார் 10-வது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார்.
இருப்பினும், பாஜக-வின் பலம் அதிகரித்ததால், ஆட்சியின் தலைமைப் பொறுப்பில் மாற்றம் வேண்டும் என்ற அழுத்தம் கூட்டணியில் நிலவி வந்ததாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் தான் முதல்வராகப் பதவியேற்ற சில மாதங்களிலேயே, நிதீஷ் குமார் மாநில அரசியலில் இருந்து விலகி தேசிய அரசியலுக்குச் செல்லும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார். சட்டமன்றம், சட்ட மேலவை, மக்களவை ஆகிய மூன்றிலும் ஏற்கனவே உறுப்பினராக இருந்துள்ள நிதீஷ் குமார், மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவியேற்று தனது அரசியல் பயணத்தின் அனைத்து நிலைகளையும் அடைய விரும்புவதாக அறிவித்துள்ளார்.
இதற்காக இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், நிதீஷ் குமார் தனது முதலமைச்சர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்வார்.
இதுகுறித்து நிதீஷ் குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேலாக (20 ஆண்டுகளுக்கும் மேலாக) என் மீது நீங்கள் தொடர்ந்து வைத்திருக்கும் நம்பிக்கையும் ஆதரவுமே, பீகார் மாநிலத்திற்கும் உங்கள் அனைவருக்கும் முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய எனக்குப் பலம் அளித்தது. உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் தந்த வலிமையால்தான், இன்று பீகார் வளர்ச்சியிலும் கௌரவத்திலும் ஒரு புதிய பரிமாணத்தைப் படைத்துள்ளது. இதற்காக இதற்கு முன்பும் பலமுறை உங்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துள்ளேன்.
எனது நாடாளுமன்ற வாழ்க்கையைத் தொடங்கிய காலத்திலிருந்தே, பீகார் சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் (சட்டமன்றம் மற்றும் சட்ட மேலவை) உறுப்பினராக இருப்பதோடு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) உறுப்பினராக வேண்டும் என்ற விருப்பம் என் மனதில் இருந்தது. அந்த வரிசையில், தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினராக நான் விரும்புகிறேன்.
உங்களுடன் எனக்குள்ள இந்த உறவு எதிர்காலத்திலும் தொடரும் என்றும், உங்களுடன் இணைந்து ஒரு வளர்ந்த பீகாரை உருவாக்கும் உறுதிமொழி எப்போதும் போலவே நிலைத்திருக்கும் என்றும் முழு மனதுடன் உங்களுக்கு உறுதி அளிக்க விரும்புகிறேன். அமையவிருக்கும் புதிய அரசுக்கு எனது முழு ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் எப்போதும் இருக்கும்.” என தெரிவித்துள்ளர்.
கூட்டணி வைக்கும் கட்சிகளை பாஜக சிதைப்பதாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது நிதீஷ் குமாரின் இந்த நகர்வு தேசிய அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது. இது நிதீஷ் குமார் யுகத்தின் முடிவு என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.









