மாநிலங்களவை தேர்தல்: தம்பிதுரை, அன்புமணி மனுதாக்கல்

Published On:

| By Pandeeswari Gurusamy

Election

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான இன்று தம்பிதுரை மற்றும் அன்புமணி மனுத்தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (மார்ச் 5) கடைசி நாளாகும். சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், திமுக கூட்டணிக்கு நான்கு இடங்களும், அதிமுக கூட்டணிக்கு இரண்டு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அதிமுக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் மு. தம்பிதுரையும், அதன் கூட்டணிக் கட்சியான பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் சாந்தியிடம், இருவரும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

ADVERTISEMENT

தம்பிதுரை திமுகவிலிருந்து பிரிந்து அதிமுக உருவானபோது எம்ஜிஆருடன் இணைந்து செயல்பட்டவர். பின்னர் 1977, 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 முதல் 2006 வரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி வகித்தார்.1984, 1989, 1998, 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஐந்து முறை மக்களவை உறுப்பினராக (எம்பி) தேர்வு செய்யப்பட்டவர்.

அதேசமயம், 1985-1989 மற்றும் 2014-2019 காலகட்டங்களில் மக்களவை துணை சபாநாயகராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று மாநிலங்களவைக் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

ADVERTISEMENT

அன்புமணி ராமதாஸ் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வானார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

2004, 2019 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவைக்கும், 2014ஆம் ஆண்டில் தருமபுரி தொகுதியில் இருந்து மக்களவைக்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திமுக கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 இடங்களுக்கான வேட்பாளர்களும் இன்று தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share