சென்னையில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து செய்தி சேகரிக்க நள்ளிரவில் நகரை வலம் வந்து கொண்டிருந்தது மின்னம்பலம் குழு. அப்போது துணை முதல்வரின் வாகனம் வேகமாக வீட்டிலிருந்து கிளம்பியது. வழக்கம்போல் அல்லாமல், 3 கார்கள் மட்டுமே உடன் சென்றது. என்ன செய்தி என்று தெரிந்துகொள்ள மின்னம்பலம் குழுவினரும் பின் தொடர்ந்து சென்றோம். எங்கே செல்கிறார், என்ன நடந்தது என்று செல்லும் வழியில் உடனிருப்பவர்களிடம் விசாரித்தோம்.
கடந்த வருட சென்னை வெள்ளத்தின்போது அதிகாரிகள், கட்சிக்காரர்களைத் தவிர்த்து நேரடியாக தன்னார்வலர்கள் மூலம் பல உதவிகளை செய்தார் உதயநிதி. அதன்பிறகு தன்னார்வலர்களை தனது குறிஞ்சி இல்லத்தில் சந்தித்து, ’எப்போது எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் உங்களுக்கு எங்களைவிட பல விஷயங்கள் தெரியும்’ என்று கூறி வாழ்த்து தெரிவித்தார்.
அன்று உதயநிதியை சந்தித்த ஒரு தன்னார்வலர், நேற்று இரவு 11.30-க்கு உதயநிதிக்கு போன் மூலம் அவசர அழைப்பு விடுத்தார். ‘சுண்ணாம்பு குளத்தூர்ல இருக்கும் அம்பேத்கர் சாலை கால்வாய்தான் சுத்தி இருக்கும் 13 ஏரிகளுக்கான முக்கிய வடிகாலா இருக்கு. இங்க Encroachment (ஆக்கிரமிப்பு) நடந்ததுனால, கால்வாய்ல தண்ணி போக முடியாம Bottle neck (அடைப்பு) ஏற்பட்டிருக்கு. அதிகன மழை பெய்யும்போது இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஏரில இருந்து வடிகால் வழியா வருகிற தண்ணீர் வடியாம, இந்த அடைப்புனால மக்கள் குடியிருப்புகளுக்கு போயிடும்’ என்று பதட்டத்துடன் பேசினார்.
’அப்போவே க்ளியர் பண்ண சொன்னேனே.. இன்னும் நடக்கலயா?’ என்றார் உதயநிதி.
‘3 months ஆகுது சார். இன்னும் அப்டியே தான் இருக்கு.’
’எனக்கு லோக்கேஷன் அனுப்புங்க. நான் உடனே வர்றேன்.’
‘இப்போவே வர்றீங்களா சார்?’
‘ஆமா, நீங்க ஸ்பாட்க்கு வந்திடுங்க.’ என்று சொல்லிவிட்டு கட் செய்தார் உதயநிதி.
அப்போதுதான் வீட்டிற்கு சென்றவர், உடனடியாக கிளம்ப, இல்லமே பரபரப்பானது. துணை முதல்வர் ஆய்வுக்கு கிளம்புகிறார் என்ற செய்தி வந்தவுடன், பிற அதிகாரிகள் மத்தியில் பதட்டம் தொற்றியது. எங்கே செல்கிறார், என்ன செய்யப்போகிறார் என்று விசாரித்த அதிகாரிகள், ’தற்போது சென்றால் எதுவும் செய்யமுடியாது. நாளை காலை முதல் வேலையாக அதை நிவர்த்தி செய்யலாம்’ என்று யோசனை சொல்லியுள்ளனர்.
‘3 மாசமா சொல்லிட்டு இருக்கேன், நடக்கலை. இப்போ நடந்தே ஆகனும். நீங்க யார் வரலைனாலும், நான் அங்க போறேன்’ என்று துணை முதல்வர் கறாராக சொல்லிக் காரில் ஏறி கிளம்பினார்.
அப்போதுதான் மின்னம்பலம் டீமும் அவரின் வாகனத்தைப் பார்த்து உடன் சென்றது. நள்ளிரவு 12 மணியளவில் கோவிலம்பாக்கம் அம்பேத்கர் சாலையில் நின்றது துணை முதல்வரின் வாகனம். அங்கே தன்னார்வலர்கள் அவரை வரவேற்றனர்.
தகவல் கேள்விப்பட்டத் துணை முதல்வரின் தனிச்செயலாளர் பிரதீப் யாதவும் இணைந்துகொண்டார். களத்தில் துணை முதல்வருடன் தன்னார்வலர்களும், தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்புக்குழு இயக்குநர் ஐயன் கார்த்திகேயனும், இளையதலைமுறை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சங்கரும் இருந்தனர்.
உதயநிதி கொண்டு வந்திருந்த மொபைல் ’டேப்’பில், ’மேப்’ மூலம் கால்வாயில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு குறித்து தன்னார்வலர்கள் விளக்கினர். நாராயணபுரம் ஏரிக்கு கீழ்க்கட்டளை ஏரியில் இருந்து வரும் உபரிநீர் கால்வாய்தான் அது. அந்த ஆக்கிரமிப்பையும், அடைப்பையும் உடனடியாக நீக்கச்சொல்லி உத்தரவிட்டார் உதயநிதி. தற்போதே வேலையை தொடங்க வேண்டும் என்றும், தொடங்கும் வரை அங்கிருந்து புறப்படப்போவதில்லை என்றும் உறுதியாக கூறினார்.
மேலும், கூடுதல் பாதுகாப்பிற்காக, நாராயணபுரம் ஏரி மற்றும் கால்வாயைச் சுற்றிலும் Sand bund (மணல் திட்டுகள்) அமைக்குமாறும் ஆணையிட்டார்.
உடனடியாக வேலைகள் தொடங்கின. தன்னார்வலர்களிடம் வேறு ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்று கேட்டவர், அங்கே வந்திருந்த பொது மக்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தார். உடனடித் தேவைகளை விரைவாக செயல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்திவிட்டு, வேறு எந்த சிக்கல் என்றாலும் எனக்கு தெரிவியுங்கள் என்று தன்னார்வலர்களிடம் கூறிவிட்டு கிளம்பினார் உதயநிதி.
‘கூப்பிட்ட உடனே வருவார்னு நாங்க நினைச்சுக் கூடப் பார்க்கல. போன தடவ வெள்ளம் வந்தப்போ, அவராவே கூப்பிட்டு என்னென்ன உதவிகள் வேணும்னு கேட்டு எங்களுக்கே நேரடியா பொருட்கள் அனுப்பிவெச்சார். நாங்க மக்களுக்கு உதவி செய்தோம். அவர் குடுத்ததாகவோ, அரசு குடுத்ததாகவோ கூட சொல்லல. அப்போ அவர் கொடுத்த நம்பிக்கையில இப்போ கூப்பிட்டு பிரச்சனைய சொன்னோம். உடனே வந்துட்டார். இதோ, வேலையே முடியப்போகுது. அப்போ அவர் அமைச்சர். இப்போ துணை முதலமைச்சர். ஆனா அவரை அணுகும் விதத்திலும் குணத்திலும் எந்த மாற்றமும் இல்லை’ என்று கூறி விடைப்பெற்றார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த தன்னார்வலர்.
அங்கிருந்து புறப்பட்ட துணை முதல்வர், ராயப்பேட்டை ஜான் ஜானி கான் சாலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்குச் சென்றார். அந்நேரத்திலும் அங்கு மக்கள்பணி ஆற்றிக்கொண்டிருந்த தூய்மைப்பணியாளர்களுக்கு பால் சிற்றுண்டி வழங்கி, சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினார். இன்று அதிகாலையிலேயே கொட்டும் மழையில் சென்னை நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆறு கடலில் கலக்கின்ற முகத்துவாரப் பகுதியில் ஆய்வு செய்தார்.
மக்கள் நலன் விரும்பும் தன்னார்வலர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்து பணிகளை விரைந்து முடிக்க எடுக்கப்படும் துணை முதல்வரின் நடவடிக்கைகள், அதிகாரிகளையும் துரிதமாக செயல்பட ஆயத்தமாக்கியிருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..
கொட்டும் மழையில் ஆய்வு : களப்பணியாளர்களுக்கு டீ வாங்கிக் கொடுத்த ஸ்டாலின்
மழையால் லேண்டிங் தாமதம் – 2 மணி நேரம் சென்னையை வட்டமடித்த விமானம்!