தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால் வேளச்சேரி, பள்ளிக்கரணை, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சூளைமேடு பகுதியில் ஒருசில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
வாகனங்கள் நீரில் மிதந்து செல்கின்றன.
இந்தநிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 15) யானைகவுனி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அந்த பகுதியில் நடைபெறும் மழை வெள்ளம் வெளியேற்றும் பணிகள் குறித்து கேட்டு அறிந்தார். மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அங்கிருந்து புளியந்தோப்புப் பகுதிக்கு சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், மழைநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களிடம், ‘டீ சாப்பிடலாமா” என கேட்டு அவர்களை, அருகிலிருந்த தேநீர் கடைக்கு அழைத்துச்சென்றார்.
அவர்களுக்கு டீ-பிஸ்கட் வாங்கி கொடுத்த ஸ்டாலின், “டீ நல்லாருக்கா” என கேட்க… இந்த டீயில் சக்கரை இல்லை என ஒரு பெண் சொல்ல… என்னுடைய டீயில் சக்கரை இருக்கு என்று கூறி அவர்களிடம் கலகலப்பாக பேசினார்.
அப்போது தூய்மை பணியளார்கள் முதல்வரிடம் உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் என்று பாசம்காட்டினர். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டார் ஸ்டாலின்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல் – நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள்! அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கென சென்னை மாநகராட்சி சார்பில் 21,000 பணியாளர்கள் சுழற்சி முறையில் 15 மண்டலங்களிலும் பணி செய்து வருகின்றனர்.
குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் 2,149 பணியாளர்கள். தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக சென்னையில் 5,000க்கும் மேற்பட்ட மின்களப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..
பிரியா
கொடுப்பதை வச்சுதான் சமைக்கனும்… பிக்பாஸ் வீட்டுக்குள் ஆண்கள் கலக்கம்!
கடுமை காட்டிய நீதிபதி : மூத்த வழக்கறிஞர் வில்சன் குறித்த கருத்துகள் நீக்கம்!