சென்னையை ரவுண்டு கட்டி வெளுத்துக் கொண்டிருக்கும் கடும் மழை காரணமாக சாலை போக்குவரத்து மட்டுமல்ல விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
இன்று (அக்டோபர் 15) காலை முதல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்களும் மழையால் மிகுந்த தாமதமாகி வருகின்றன.
மும்பையில் இருந்து இன்று காலை 9.10-க்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் சென்னையில் காலை 10:45 மணிக்கு தரையிறங்க வேண்டியது, ஆனால், இரண்டு மணி நேரம் தாமதமாக 12:53க்கு தான் தரை இறங்கியது.
இந்த விமானத்தில் பயணித்த லலித் குமார் மின்னம்பலத்திடம் பேசும்போது,
“சென்னை விமான நிலையத்தில் அமைந்திருக்கும் ரன்வேக்களில் கடுமையான மழை பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து நாங்கள் பயணம் செய்த இண்டிகோ விமானம் வான்வெளியில் திருப்பதியை தாண்டும் போதே கடுமையான மழைப்பொழிவு இருப்பதை உணர முடிந்தது.
காலை 9: 10 க்கு மும்பையில் புறப்பட்ட எங்கள் விமானம், 10:45 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய நிலையில்… சில நிமிடங்கள் இருக்கும்போது மேகமூட்டம் மற்றும் ரன்வே மழைநீரால் சூழப்பட்டிருப்பதால் விமானம் மீண்டும் மேலே பறந்தது.
அப்போது பயணிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டார்கள். சுமார் ஒரு மணி நேரம் சென்னை வானத்திலேயே வட்டமடித்த விமானம் மீண்டும் தரையிறங்க முயற்சித்த போதும் முடியவில்லை.
இனி ஒரு முறை முயற்சிப்போம் இல்லையேல் பெங்களூருவில் தான் நாம் தரையிறங்க வேண்டும். பயணிகள் அசௌகரியத்துக்கு மன்னிக்க வேண்டும் என்று அறிவிப்பு கொடுத்தார்கள்.
கடைசியில் மழை கொஞ்சம் ஓய… ரன்வேயில் தண்ணீர் அகற்றப்பட 12:53-க்கு நாங்கள் வந்த விமானம் சென்னையில் தரையிறங்கியது.
விமானம் இறங்கியதும் பயணிகள் அனைவரும் கைதட்டினோம். பாதுகாப்பாக எங்களைத் தரையிறக்கிய, பைலட்டுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து விட்டு வெளியே வந்தோம். இந்தப் பயண அனுபவம் சிலிர்ப்பாக இருந்தது’ என்கிறார்.
கடந்த வாரம் திருச்சியில் இருந்து ஷார்ஜா நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்தது. பின்னர், திருச்சி விமான நிலையத்திலேயே விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.
வேந்தன்
கடுமை காட்டிய நீதிபதி : மூத்த வழக்கறிஞர் வில்சன் குறித்த கருத்துகள் நீக்கம்!
Chennai Rains : சீக்கிரம் வீட்டுக்கு போங்க… வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை!