குண்டானவர்களுக்கு குட் நியூஸ் : Eli Lilly – யின் எடைகுறைப்பு ஊசி இந்தியாவில் அறிமுகம்…விலை எவ்வளவு?

Published On:

| By Kumaresan M

அமெரிக்க நிறுவனமான Eli Lilly இந்தியாவில் அதன் எடை குறைப்பு மருந்தை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவில் விற்கப்படும் விலையில் 5 இல் ஒரு பங்குதான் இந்தியாவில் இந்த மருந்துக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட Mounjaro என்று அழைக்கப்படும் இந்த மருந்தின் விலை அமெரிக்காவில் 1,000 டாலர் முதல் 1,200 டாலர் வரை விற்கப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட 88 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை அங்கு விற்பனையாகிறது. இந்தியாவில் 2.5 மி.கி குப்பி 3,500க்கும் 5 மி.கி குப்பி 4,375க்கும் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஊசி மருந்து ஆகும். Eli Lilly launches anti-obesity drug

மருத்துவர்களின் பரிந்துரைப்படி வாரம் ஒரு முறை இந்த மருந்தை எடுக்க வேண்டியது இருக்கும். அப்படியென்றால், மாதம் 14 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை செலவாகலாம். பரிசோதனையில், உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் மௌஞ்சாரோ மருந்தை எடுத்துக் கொண்டதில் பெரியவர்கள் 72 வார காலத்தில் அதிகபட்ச டோஸாக 15 மி.கி. எடுத்தவர்கள் சராசரியாக 21.8 கிலோ எடையையும், குறைந்தபட்ச டோஸாக 5 மி.கி எடுத்தவர்கள் 15.4 கிலோ எடையையும் இழந்தனர்.

இது குறித்து Eli Lilly நிறுவனம் கூறியுள்ளதாவது, ‘ இது உடல் பருமன், அதிக எடை மற்றும் வகை 2- நீரிழிவு நோய்க்காக வழங்கப்படும் சிகிச்சை . இந்தியாவுக்கு ஏற்ற வகையில் விலை குறைக்கப்பட்டுள்ளது. புதுமையான சிகிச்சைக்கு மக்கள் திரும்பும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை சந்தைப்படுத்துவதற்கும் விநியோகிப்பதற்கும் இந்தியாவில் எந்த நிறுவனத்துடனும் கைகோர்க்கவில்லை ‘ என்று தெரிவித்துள்ளது.Eli Lilly launches anti-obesity drug

இந்தியாவில் கடந்த ஜனவரி 2022 ம் ஆண்டு நோவோ நோர்டிஸ்க் நிறுவனம் அறிமுகப்படுத்திய ரைபெல்சஸ் மாத்திரை, உடல் பருமன் எதிர்ப்பு மருந்து சந்தையில் கிட்டத்தட்ட 65 சதவீதத்தை கொண்டுள்ளது. உடல் பருமன் எதிர்ப்பு மருந்து சந்தை இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு 137 கோடியாக இருந்த சந்தை 2024ம் ஆண்டு 533 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 10.10 கோடி பேர் சர்க்கரை நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அதிக எடைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌஞ்சாரோ ஊசி சில பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். குமட்டல், வயிற்றுப்போக்கு, பசியின்மை, வாந்தி, மலச்சிக்கல், வயிற்று வலி, அஜீரணம் போன்ற பொதுவான பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். இவை சில நாட்கள் அல்லது ஓரிரு வாரங்கள் நீடிக்கலாம். பக்க விளைவுகள் அதிகமாக உங்களைத் தொந்தரவு செய்தால் உடனடியாக, மருத்துவரை அணுகி அறிவுரை பெற்றுக் கொள்ள வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share