கிச்சன் கீர்த்தனா: எடை குறைப்பு முயற்சியில் தோற்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Published On:

| By Kavi

எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கி, வெற்றியைத் தொடுவதுடன், தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வோர் வெறும் 20 சதவிகிதத்தினர் மட்டுமே என்கிறது ஆய்வு. அப்படியானால் யாரெல்லாம் இந்த முயற்சியில் தோற்றுப் போகிறார்கள்?

எடைக்குறைப்பின் பின்னணியில் உள்ள அறிவியல் புரியாமல், கலோரி குறைவான உணவுகளைச் சாப்பிட்டால் சீக்கிரம் எடை குறையும் என நம்பி, அப்படிப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவோர்…

தனக்கேற்ற உணவுக்கட்டுப்பாட்டைத் தெரிந்துகொண்டு பின்பற்றாமல், யார் யாரோ சொல்வதையும், பிரபலங்களின் லைஃப் ஸ்டைலையும் பின்பற்றுவோர்…

ஆரோக்கியமான பழக்க வழக்கங்களைப் பின்பற்றாமல், வெறுமனே விதிகளை மட்டும் பின்பற்றுவோர்… அதாவது, வாழ்வியல் மாற்றத்தைப் பின்பற்றுவதில் இவர்களது கவனம் குறைவாக இருக்கும். அதனால் உடல் எடையை ஒரே சீராகத் தக்கவைப்பது இவர்களுக்கு சிரமமாக இருக்கும்.

சரி… எடை குறைக்கும் முயற்சியில் தோற்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

உங்கள் வயது, உயரம், உடல்நலத்துக்கேற்ற சரியான டயட் பிளானை நிபுணரின் ஆலோசனையோடு தேர்ந்தெடுக்க வேண்டும்.

சாப்பிடாமல் இருப்பதால் எடையைக் குறைக்க முடியாது. சரியான நேரத்துக்கு சரியான உணவைச் சாப்பிட வேண்டும்.

உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதில் அசாத்திய மன உறுதி வேண்டும். ‘ஒருநாள் சாப்பிட்டா ஒண்ணும் ஆகிடாது’ என்ற எண்ணம் தலைதூக்க அனுமதிக்கவே கூடாது.

எப்போது, என்ன, எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பதிவு செய்யவும்.

தினமும் உடற்பயிற்சிக்கு ஒரு மணி நேரமாவது ஒதுக்கவும்.

உங்கள் எடை ஏறுகிறதா என்பதைக் கண்காணிக்கவும்.

போதுமான அளவு தூக்கம் இருப்பதை உறுதிசெய்யவும்.

ஸ்ட்ரெஸ் இல்லாமல் வாழ அல்லது அதைச் சமாளிக்கப் பழக வேண்டும்.

இவற்றையெல்லாம் பின்பற்ற ஆரம்பித்த அடுத்த நாளே பலனை எதிர்பார்க்காமல், இதுதான் ஆரோக்கியத்துக்கான வாழ்க்கை முறை எனத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

தவிர, உடல் எடையைத் தக்க வைப்பது என்பது அவ்வளவு கடினமானதெல்லாம் இல்லை என்கின்றன ஆய்வுகள். எடைக் குறைப்பு முயற்சியை இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் பின்பற்றிப் பழகிவிட்டால் அது உங்களது வாழ்க்கை முறையாக மாறியிருக்கும்.

ஆல் தி பெஸ்ட்

பலத்த சூறாவளிக்காற்று வீசும் : மீனவர்களுக்கு எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel