நாட்டின் துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்கள் வாக்களிப்பர்.
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் திடீரென தமது பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவி விலகலை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து துணை ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த நிலையில் செப்டம்பர் 9-ந் தேதி, துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என இன்று ஆகஸ்ட் 1-ந் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஆகஸ்ட் 7-ந் தேதி தொடங்கும். இத்தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 21. வேட்பு மனுக்கள் மீது ஆகஸ்ட் 22-ந் தேதி பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் ஆகஸ்ட் 25.
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டி உருவானால் செப்டம்பர் 9-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். இந்த தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் வாக்களிப்பர். செப்டம்பர் 9-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.