எடப்பாடியை விட நான் சீனியர் என்று செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில், நான் கையெழுத்து போட்டதால் தான் மீண்டும் செங்கோட்டையன் அமைச்சரானார் என்று எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்று (நவம்பர் 1) காலை 11 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
இதை தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி உடனடியாக சேலம் நெடுஞ்சாலை நகரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அவர் கூறுகையில், ‘செங்கோட்டையனின் நடவடிக்கைகள் கடந்த 6 மாதகாலமாக கட்சிக்கு எதிராகத்தான் இருந்து கொண்டிருந்தது. அத்திக்கடவு அவினாசி திட்ட பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படம் இடம்பெறாத காரணத்தால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று திட்டமிட்டு ஒரு பொய் சொன்னார்.
அதே வேளையில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் செங்கோட்டையன் பங்கேற்றார். ஆனால் அந்நிகழ்விலும் ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை. முன்னாள் முதல்வர் கலைஞர் படமும், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் படமும் தான் இருந்தது.
அப்போதே அவர் பி டீம் வேலையை ஆரம்பித்து விட்டார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், அப்படி திட்டமிட்டு பொய் சொல்லியிருக்கிறார். உண்மை வெளிவந்து விட்டது.
பின்னர் ஒருங்கிணைப்பு பற்றி பேசினார். அவர்கள், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், பிரிந்து சென்றவர்கள் அல்ல” என்று கூறி அதிமுக சிறப்பு பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட தீர்மானத்தை வாசித்துக் காட்டினார்.
பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிராக செயல்பட்டால்… 53 ஆண்டு காலம் கட்சியிலிருந்து செயல்பட்டதாக சொல்பவருக்கு கட்சி என்ன நடவடிக்கை எடுக்கும் என்று தெரியாதா என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, “கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களோடு இணைந்து செயல்படுவோம் என்று அறிவித்ததால் கட்சி தலைமை நடவடிக்கை எடுத்தது. நான் எடுத்த நடவடிக்கை அல்ல. மூத்த தலைவர்களோடு கலந்து பேசி முடிவெடுக்கப்பட்டது.
நான் அம்மாவின் விசுவாசி என்கிறார். ஆனால் அமைச்சர் பதவியில் இருந்த போதே அவர் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டவர்.
நான் முதலமைச்சரான பின்னர் தான் எனது அமைச்சரவையில் அவருக்கு இடம் கொடுத்தேன்.
நான் கையெழுத்து போட்டு அனுப்பிய பிறகு தான் கவர்னர் அதற்கு ஒப்புதல் அளித்து அமைச்சரானார்.
அவரது மாவட்ட செயலாளர் பதவியும் அம்மா எடுத்துவிட்டார். எனவே உண்மைக்கும் மாறான செய்திகளை கூறி வருகிறார்.
அதேபோன்று டிடிவி தினகரன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 2011 ஆம் ஆண்டு அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டவர். ஜெயலலிதா இருக்கும் வரை பத்தாண்டு காலம் அவர் சென்னைக்கு வரமாட்டார். வந்தாலும் இருக்கும் இடமே தெரியாமல் இருந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா இருந்த காலத்தில்தான் துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பு பெற்றார் டிடிவி தினகரன். அப்போது கூட அவர் கட்சியில் இணையவில்லை. நீக்கப்பட்ட ஒருவருக்கு நேரடியாகவே பொறுப்பு கொடுத்தனர்.
பத்தாண்டு காலம் வனவாசம் போனவர் இப்போது எங்களை பற்றி பேசுகிறார்.
செங்கோட்டையன் திமுகவை எதிர்த்து சட்டமன்றத்தில் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. பொதுக் கூட்டத்திலேயும் பேசியது கிடையாது. எனவே அவர்தான் திமுகவின் பி டீம் என்பது நிரூபணமானது.
53 ஆண்டு காலம் இந்த இயக்கத்தில் இருந்தேன் என்று சொன்னால் அதன் நிர்வாகிகளுக்காகவும், மக்களுக்காகவும் உழைத்திருக்க வேண்டும். அப்படியானால் தான் உங்களை பாராட்டி இருப்பார்கள். இல்லையென்றால் இப்படிப்பட்ட நிலைமை தான்.
இரண்டரை கோடி தொண்டர்கள் கொண்ட இந்த இயக்கத்தை முடக்க பார்த்தால் இந்த இயக்கம் சும்மா இருக்காது.
அதுமட்டுமல்ல கொடநாடு பற்றி பேசி இருக்கிறார். அதிமுக ஆட்சியில் இருந்தபோது கொடநாடு வழக்கில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதோடு இரண்டு மூன்று கொலைகள் நடந்ததாக சொல்கிறார். அப்படி என்றால் இவர் எவ்வளவு வன்மத்தோடு இருந்திருப்பார். மனதிற்குள் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டிடிவி தினகரனுடனும் அடிக்கடி பேசி வந்துள்ளார்” என்று கூறி பசும்பொன்னில் டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் மூன்று பேரும் இணைந்து செய்தியாளர்களிடம் பேசியதை ஒளிபரப்பி காட்டினார்.
ஓபிஎஸ் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த போது எதிர்த்து ஓட்டு போட்டவர் தான் ஓபிஎஸ். பின்னர் எல்லா கழக நிர்வாகிகளும் சொன்னதன் பேரில் இணைந்து செயல்பட்டோம்.
ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு கொடுத்தும் அவர் உண்மையாக இல்லை. ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தை ஆட்களை அழைத்து வந்து அடித்து நொறுக்கினார்.. இவர் தனக்கு பதவி இல்லை என்றால் எந்த நிலைக்கும் போவார் என்பது வெட்ட வெளிச்சமானது.
அவரும் அவர் மகனும் ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து கொடுத்து பேசுகிறார்கள் நான்கு நாட்களுக்கு முன்னால் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்கிறார்.
திமுகவை மறைமுகமாக ஆதரித்தவர்கள் இன்று வெளியே வந்துவிட்டார்கள்.
டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம், செங்கோட்டையன் எல்லாம் ஒன்றாக சேர்ந்து திமுகவுக்கு பி டீம் ஆக செயல்படுவது தான் திட்டம்.
அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்காக 18 எம்எல்ஏக்களை வெளியில் அழைத்துச் சென்ற டிடிவி எப்படி உண்மையாக இருப்பார்? ” என்ற கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “2017 ஆம் ஆண்டு பன்னீர்செல்வம் தனது எக்ஸ் பக்கத்தில், ‘ அம்மா மருத்துவமனையில் இருந்த போது சசிகலா பேசாதது ஏன்?’ என்று பதிவிட்டிருந்தார்.
‘ குற்றவாளி சசிகலா… தப்பியது தமிழகம்’, ‘ சசிகலா உள்ளிட்ட மூவர் உடனடியாக சரணடைய உத்தரவு ‘, ‘ உயிருடன் இருக்கும் வரை சசிகலா குடும்பத்தினரை கட்சிக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று அம்மா கூறினார்’ இப்படி எல்லாம் பதிவு போட்டார்.
இன்று அவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து இருக்கிறார்கள்
சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நடந்து கொண்டவர்கள். ஓராண்டுக்கு முன்னதாகவே செங்கோட்டையன் ஸ்டாலினை சந்தித்து சுமார் 20 நிமிடம் பேசியிருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.
கேள்வி பதில்
கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் எனக்கு இரண்டு முறை வாய்ப்புகள் வந்தும் அதை விட்டுக் கொடுத்தேன் என்று செங்கோட்டையன் சொல்லி இருக்கிறாரே?
எப்போது வாய்ப்பு வந்ததாம்? 2014 ஆம் ஆண்டு அவரது அமைச்சர் பதவியை அம்மாவே பறித்து விட்டாரே? பின்னர் நாங்கள் தானே கையெழுத்து போட்டுக் கொடுத்தோம்.
இவரால் எத்தனை பேர் வெளியே போயிருக்கிறார்கள்.. அத்தனையும் பொய் செய்தி. இன்று அவரது பகுதி மக்களுக்கு விடிவு காலம் பிறந்து விட்டது. அதனால்தான் அந்த பகுதி நகரச் செயலாளர் ஒன்றிய செயலாளர் எல்லாம் இனிப்பு கொடுத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் தற்காலிக பொதுச்செயலாளர் தான் நிரந்தர பொதுச் செயலாளர் இல்லை என்று சொல்லி இருக்கிறாரே?
ஊடகத்துக்கும் பத்திரிகைக்கும் அதிமுக பொதுச்செயலாளர் யார் என்று தெரியாதா. தெரியாது என்று சொன்னால் விளக்கம் சொல்கிறேன்.. நீதிமன்றத்தின் மூலமாக கிடைத்தது. தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. தேர்தல் நடத்தி இப்பதவியை பெற்றோம்.
உங்களை ஏ1 என்று சொல்லி இருக்கிறாரே?
நாங்கள் ஏ டீம் என்று அவர் நிரூபிக்க வேண்டும். நாங்கள் சட்டமன்றத்திலும் பொதுக்கூட்டத்திலும் திமுகவை எதிர்த்து பேசிக் கொண்டிருக்கிறோம். அவர் எங்கேயாவது பேசியிருக்கிறாரா என்று சொல்லுங்கள்.
நீக்கம் தொடர்பாக, எந்தவித நோட்டீசும் அனுப்பவில்லை என்று சொல்கிறாரே?
எல்லாம் கட்சி விதிகளின்படி தான் நடந்தது. அது இவருக்கு தெரியாதா. இவர் எழுதிக் கொடுத்து எத்தனை பேர் நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கெடு விதிக்கவில்லை என்கிறார். ஆனால் கெடு விதித்தாரா இல்லையா என்று நீங்களே பாருங்கள் ‘ எனக் கூறி செப்டம்பர் 5ஆம் தேதி செங்கோட்டையன் அளித்த பேட்டியை போட்டுக்காட்டி விட்டு செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக்கொண்டு கிளம்பினார் பழனிசாமி.
