அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.
இதை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் சூரியமூர்த்தி சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு உள்ளிட்ட பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தியிருந்தனர்.
இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் சூரியமூர்த்திக்கு எதிரான எடப்பாடி பழனிசாமியின் மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு நீதிபதி பிபி பாலாஜி முன்பு இன்று (ஆகஸ்ட் 19) விசாரணைக்கு வந்தது.
அப்போது எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘சூரியமூர்த்தி அதிமுக உறுப்பினரே இல்லை. உறுப்பினராக இல்லாத அவர் கட்சி செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. எனவே உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்த நீதிபதி இந்த மனு குறித்து சூரியமூர்த்தி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.