எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஆகஸ்ட் 18) பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது கூட்டத்துக்கு நடுவே ஆம்புலன்ஸ் ஒன்று சென்றது. இதனால் கடுப்பான எடப்பாடி பழனிசாமி, ‘அடுத்த கூட்டத்தில் வேண்டுமென்றே நோயாளிகள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் அதன் ஓட்டுநர் நோயாளியாக செல்வார்’ என எச்சரித்திருந்தார்.
இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் பிவின் வெளியிட்ட அறிக்கையில், “நேற்று இரவு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மருத்தவமனையில் இருந்து நோயாளியை அழைத்து வருவதற்காக சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனரை வழிமறித்து அவமதித்து.
அவரை மிரட்டும் வகையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எங்கள் சங்கத்தின சார்பில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறோம். நேரம் காலம் பார்க்காமல் அவசரத்திற்கு அழைத்த உடனே ஓடிச்சென்று உயிர்களை காப்பது தான் எங்களின் பணி, அப்படி நாங்கள் செய்யும் பணியை மதித்து எங்களை பாராட்டாவிடினும், இப்படி அவமதித்து மிரட்டுவதை எங்களால் ஏற்க முடியாது.
இப்படி உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமான தங்களின் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மன்னிப்பு கேட்கத்தவறும் பட்சத்தில் அவருக்கு எதிராக தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஊடகங்களிடம் கூறுகையில், “பெண் நோயாளி ஒருவரை அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதால், அணைக்கட்டு சென்ற போது அதிமுக கூட்டம் முடிந்து விட்டதா என கேட்டேன். கூட்டம் முடிந்து விட்டது என கூறியதால்தான் அவ்வழியாக சென்றேன்” என்று தெரிவித்துள்ளார்.