ADVERTISEMENT

கூட்டத்திற்குள் வந்த ஆம்புலன்ஸால் கடுப்பான எடப்பாடி : மா.சுப்பிரமணியன் விளக்கம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

EPS threatens ambulance driver in Vellore

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று (ஆகஸ்ட் -18) வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு சென்றார்.

அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த மக்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்தார். இந்த அணைக்கட்டு தொகுதி அதிமுகவின் கோட்டை என அவர் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது.

ADVERTISEMENT

அதைபார்த்த எடப்பாடி நான் தொடர்ந்து பல கூட்டங்களில் கவனித்து வருகிறேன். கூட்டத்துக்கு நடுவில் வேண்டுமென்றே ஆள் இல்லாத ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்யும் கேவலமான செயலை இந்த அரசாங்கம் செய்து வருகிறது. எத்தனை ஆம்புலன்ஸ் விட்டாலும் எதுவும் செய்ய முடியாது. தில்லு திராணி இருந்தால் அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும்.

மக்கள் கூட்டத்துக்கு இடையில் இப்படி வந்தால் மக்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் என்ன செய்வது. ஆம்புலன்ஸில் நோயாளி யாருமே இல்லாமல், வெறுமனே போகிறது. இதை 30 கூட்டத்தில் பார்த்துவிட்டேன். இந்த அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் அடுத்தமுறை ஆம்புலன்ஸ் வந்தால் அதை ஓட்டி வரும் டிரைவரே நோயாளியாக அந்த வாகனத்திலே ஏற்றிச் செல்லப்பட வேண்டி இருக்கும். அசிங்கமாக இல்லையா? என்றார்.

ADVERTISEMENT

மேலும் எதிர்க்கட்சியின் கூட்டம் நடக்கிறது என்றால் காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்தபோதே அதிமுக தொண்டர்கள் ஆம்புலன்ஸை தாக்க முயன்றனர். அவர்களை தடுத்த எடப்பாடி பழனிசாமி வாகன எண்ணை மட்டும் குறித்து கொண்டு அவரை அனுப்பி விடுங்கள். இது குறித்து நாளை காவல் துறையிடம் புகார் கொடுப்போம். மக்களுக்கு தீமை செய்யும் ஆட்சியாகத்தான் திமுக ஆட்சி இருக்கிறது” என்று காட்டமாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு திரட்ட பெரும் பகுதி பிரதான சாலைகளில் செல்கிறார். தமிழகத்தில் உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ்கள் 1330வரை உள்ளது. இதன் மூலம் கிராமப்பகுதி, மலைகிராமங்கள், நகர் பகுதிகள், மாநகராட்சி பகுதிகளில் விபத்து ஏற்படும்போதோ, நோய் தீவிரம் அடையும் போதோ விரைந்து சென்று காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்த 108 ஆம்புலன்ஸ் சேவையை போல் உலகத்தில் எங்கும் இல்லை என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். எடப்பாடி ஆம்புலன்ஸ் வரும் வழிகளில் கூட்டத்தை போட்டு விட்டு நான் வரும் வழியில் ஆம்புலன்ஸ் செல்கிறது என குற்றம் சாட்டி உள்ளார். மேலும் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற பழமொழிக்கு ஏற்ப ஆம்புலன்ஸை பார்த்தால் அவருக்கு வேற என்னவெல்லாமோ தோன்றுகிறது போல.
மருத்துவ துறையில் பணியாற்றி கொண்டிருக்கும் மருத்துவர்களை மிரட்டல் தொனியில் அவர் பேச்சு உள்ளது. ஒரு முன்னாள் முதல்வர் ஆம்புலன்ஸ் டிரைவர் பெயரை நோட் பண்ணு, வண்டி நம்பரை நோட் பண்ணு, என்று மிரட்டல் தொனியில் பேசுவதை இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும். இது பொதுமக்களிடையே அவருக்கு கூடுதல் எதிர்ப்பை உருவாக்கி தரும்” என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “18.08.2025 அன்று, TN20G2904 பள்ளிகொண்டா ஆம்புலன்ஸ் ஒன்று இரவு 9:46 மணிக்கு நோயாளி ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக அவசரமாக செல்ல வேண்டி இருந்தது. இதன்படி நோயாளியை அணைக்கட்டு மருத்துவமனையில் இருந்து வேலூர் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்வதற்காக. அவரை கூட்டி செல்ல ஆம்புலன்ஸ் சென்றது. செல்லும் வழியில், அணைக்கட்டு பகுதியில் ஒரு கட்சி கூட்டம் நடைபெற்றதால், ஆம்புலன்ஸ் சாலையில் ஒரு பெரிய கூட்டத்தில் சிக்கியது. கூட்டப் பகுதியை அடைந்ததும் சிலர் வாக்குவாதம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் அணைகட்டு பகுதிக்கு சென்றது. அதன் பிறகு நோயாளி அணைக்கட்டு மருத்துவமனையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு இரவு 11.35 மணிக்கு அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share