சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இரண்டாவது நாளாக இன்று (அக்டோபர் 15) கூடியது. அப்போது கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்தார்.
இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதல்வர் ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதையடுத்து அமைச்சர் சிவசங்கர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பேசினார்.
இதற்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரின் இருக்கைக்கு முன்பாக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது, ‘ஓரவஞ்சணை செய்யாதே’ எனவும் அவர்கள் கோஷம் எழுப்பினர். சபாநாயகர் இருக்கைக்கு அருகே சென்றும் முழக்கமிட்டனர்.
அப்போது சபாநாயகர், உறுப்பினர்கள் அவரவர் இருக்கைக்கு சென்று அமராவிட்டால் அவைக்காவலர் வரவழைக்கப்படுவார்கள் என்று எச்சரித்தார்.
எனினும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை காவலர்கள் வரவழைக்கப்பட்டனர்.
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
அவைக்கு வெளியேவும் தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து, கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்.