தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நடத்திய கரூர் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 15) அளித்த விளக்கம்:
- கரூர் வேலுசாமிபுரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திய கூட்டம் கட்டுக்கோப்பாக நடைபெற்றது; சுமார் 17,000 பேர் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர்
- கரூர் விஜய் பிரசார கூட்டத்துக்கு மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது; ஆனால் பகல் 12 மணிக்கே விஜய் வருவார் என தவெக பொதுச்செயலாளர் அறிவித்தார்.
- கரூர் பிரசார கூட்டத்துக்கு விஜய் 7 மணிநேரம் தாமாக வந்தார்
- கரூர் வேலுசாமிபுரத்தில் போலீசார் தடுத்து நிறுத்தியும் போலீசார் அறிவுறுத்தலை மீறி 35 மீட்டர் தூரம் கூட்டத்துக்குள் விஜய் வாகனம் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது
- கரூர் கூட்டத்துக்கு வருபவர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் தவெகவினர் செய்யவில்லை; உணவு வழங்க ஏற்பாடு செய்யவில்லை; பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க வெளியே செல்லவும் முடியவில்லை.
- விஜய் கூட்டத்துக்கு 10,000 பேர் வருவர் என தவெகவினர் தெரிவித்தனர்; ஆனால் அதிகம் பேர் கூடுவர் என்பதால் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. வழக்கமாக அரசியல் கூட்டங்களுக்கு வழங்கும் பாதுகாப்பை விட கூடுதலாகவே பாதுகாப்பு அளிக்கப்பட்டது; காவலர்கள், அதிகாரிகள் என மொத்தம் 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்ஸும் கூட்டத்துக்குள் செல்லவில்லை.
- மீட்பு பணி நடைபெற்ற போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தவெகவினர் தாக்கினர்
- கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடனேயே ஜெனரேட்டர் அறைக்குள் நுழைந்து தவெகவினர் சேதப்படுத்தினர்; இதனால் ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தைத் துண்டித்தார்.
- கரூர் துயர சம்பவம் அறிந்த என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. அன்று இரவே அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்; அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன; அமைச்சர்கள் பலரும் அங்கு சென்று பணியாற்றினர்.
- கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன.
- 200 காவல்துறையினர் மருத்துவமனைக்கு பாதுகாப்பும் வழங்கினர்.
- அனைத்து உடல்களையும் வைக்க போதுமான குளிர்சாதன வசதி இல்லை என்பதால் இரவோடு இரவாக உடற்கூறாய்வு செய்யப்பட்டது; இறந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்வு செய்யும் பணி அதிகாலை 1.41 மணிக்கு தொடங்கியது.
- நான் எனது 50 ஆண்டுகால பொதுவாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன்; இங்குள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் அத்தகைய அனுபவம் கொண்டவர்கள்தான்; மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் நெறிமுறைகளுக்கும் பொது ஒழுக்கங்களுக்கும் கட்டுப்பட்டு நடத்தப்படுகின்றன; இத்தகைய கட்டுப்பாடுகளை மீறும் போது பாதிக்கப்படுவது அந்த கட்சியின் தொண்டர்கள்தான்; இதனை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.
