அதிமுகவை விஜய் விமர்சிக்காதது ஏன்? – எடப்பாடி சொன்ன விளக்கம்!

Published On:

| By Selvam

அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறைய திட்டங்களை செயல்படுத்தியதால், விஜய் தங்களை விமர்சிக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 3) தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரப்பம்பாளையம் பகுதியில் அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் அரசுக்கு எதிராக தொடர்சியாக அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றன. கடந்த மூன்று வருடங்களில் இதுபோன்ற நிலை இல்லை. அதனால் தான் திமுக கூட்டணியில் விரிசல் இருப்பதாக நாங்கள் சொல்கிறோம்.

எம்ஜிஆர் காலத்திலும் ஜெயலலிதா காலத்திலும் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல, தற்போதும் அதிமுகவுக்கு விரோதமாக செயல்பட்டவர்கள் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டனர். அவர்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அல்ல, நீக்கப்பட்டவர்கள். இனி அவர்களுக்கு அதிமுகவில் இடமில்லை” என்றார்.

தொடர்ந்து, அதிமுகவை விஜய் விமர்சிக்காதது ஏன் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி, “அதிமுக என்பது மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி. அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறைய திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறோம். அப்படிப்பட்ட கட்சியை அவர் எப்படி விமர்சிக்க முடியும்?

ஒவ்வொரு கட்சி தலைவர்களுக்கும் ஒரு குறிக்கோள் இருக்கும். அந்த அடிப்படையில் தான் அவர்கள் பேசுவார்கள். விஜய் அதிமுகவை விமர்சிக்கவில்லை என்று மற்றவர்கள் ஆதங்கப்படத் தேவையில்லை” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டெஸ்ட் கிரிக்கெட்… இந்தியாவை வாஷ்அவுட் செய்த நியூசிலாந்து

பழையன கழிதலும், புதியன புகுதலும்… விஜய்க்கு ராமதாஸ் வரவேற்பு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share